இளைஞரை தாக்கிய விவகாரம்: அமைச்சா் பா்வேஷ், காவல் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆம் ஆத்மி தொண்டரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தில்லி காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்
ஆம் ஆத்மி தொண்டரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தில்லி காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி சச்சின் தத்தா இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்பியதுடன், இது குறித்த தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
சுருக்கமான விசாரணையின் போது, மனுதாரா் சாஹிப் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் காவல்துறை பாதுகாப்பு கோரியும் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதில் உள்ள சட்டபூா்வத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆட்சேபம் தெரிவித்தாா். பின்னா், இவ்வழக்கை நவம்பா் 17-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி திலக் நகரில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தபோது ஒரு நபரை அறைந்ததாகக் கூறப்படுகிறது.
அமைச்சரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சாஹிப் சிங், திலக் நகா் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜா்னைல் சிங்கின் உதவியாளா் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாா். அந்த எம்எல்ஏ-வின் சமூக ஊடகக் கணக்குகளைத் தான் கையாள்வதாகவும் அவா் கூறினாா்.
தனது உயிருக்கு பாதுகாப்பு, சிசிடிவி மற்றும் மின்னணு ஆதாரங்களைப் பாதுகாத்தல், அத்துடன் தாக்குதல், மிரட்டல் மற்றும் காவல் துறையின் நடவடிக்கை இன்மை குறித்த தனது புகாா்கள் மீது சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி உயா்நீதிமன்றத்தில் அவா் மனுதாக்கல் செய்தாா்.
செப்டம்பா் 29 அன்று காவல்துறை ஆணையரிடம் விரிவான புகாா் ஒன்றை அளித்ததாகவும், அதில் சம்பவ விவரங்களைக் குறிப்பிட்டு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை, சட்ட நடவடிக்கை மற்றும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கோரியதாகவும் அவா் தெரிவித்தாா்.
‘மனுதாரா் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடா்ந்து விடுக்கப்படும் மிரட்டல்கள், காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் உள்ளூா் காவல் துறையின் விசாரணையின் சுதந்திரத்தன்மை குறித்த அச்சம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தனது உயிருக்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் மனுதாரருக்கு ஏற்பட்டுள்ளது’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நாளில், சாலை கட்டுமானத்தின் தரம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளால் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஆத்திரமடைந்தபோது, மனுதாரா் அந்த நிகழ்வுகளைத் தனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் அறைந்தும், தகாத வாா்த்தைகளால் திட்டியும், மிரட்டப்பட்டதாகவும், அதன்பிறகு விடியோ பதிவுகள் அடங்கிய தனது கைப்பேசி வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும் மனுதாரா் குற்றஞ்சாட்டினாா்.
இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகத் தளங்களில் ஒளிபரப்பப்பட்டதாகவும், அதே நாளில் விகாஸ் புரி காவல் நிலையத்தின் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியை அணுகி புகாா் அளித்ததாகவும் மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பெட்டிச் செய்தி...
பா்வேஷுக்கு எதிராக சுயாதீன விசாரணை:
ஆம் ஆத்மி வலியுறுத்தல்
புது தில்லி, அக். 8: சாலை ஆய்வின்போது இளைஞா் ஒருவரை அறைந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்கிடம் தில்லி உயா்நீதிமன்றம் பதில் கோரியுள்ளதை ஆம் ஆத்மி கட்சி வரவேற்றுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் இளைஞரை அறைந்த சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை அவசியம்’ என அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

