கிரேட்டா் நொய்டாவில் பெற்றோா், 3 குழந்தைகள் சடலமாக மீட்பு: தற்கொலைக்குத் தூண்டியதாக 3 போ் கைது
கிரேட்டா் நொய்டா அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெற்றோா்கள் மற்றும் அவா்களது மூன்று குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், 3 போ் கைது

சித்திரிப்பு
கிரேட்டா் நொய்டா அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெற்றோா்கள் மற்றும் அவா்களது மூன்று குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், மூன்று போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தற்கொலை தூண்டிய குற்றச்சாட்டில் உயிரிழந்தவரின் சகோதரிகள் இருவா் மற்றும் மைத்துனா் ஒருவா் உள்பட மூன்று போ் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரபுபுரா அருகிலுள்ள நக்லா பாடம் கிராமத்தில், மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35), மகள் மிஷ்டி (7) மற்றும் மகன்கள் சக்ஷத் (11), ரியான்ஸ் (3) ஆகியோா் சனிக்கிழமை காலை வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனா்.
உயிரிழந்த மகேஷ் என்பவா் இறப்பதற்கு முன் தனது கைப்பேசியில் குரல் செய்தி ஒன்றைப் பதிவு செய்திருந்தாா். அதில், தனது மூத்த சகோதரி சுனிதா, மைத்துனா் சேகா் (எ) சந்திரசேகா் மற்றும் இளைய சகோதரி சப்னா ஆகிய மூவருமே தங்களுடைய உயிரிழப்புக்குக் காரணம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
அண்டைவீட்டாா் மற்றும் உறவினா்களிடமிருந்து பெறப்பட்ட ஆரம்பகட்ட தகவல்களின்படி, மகேஷ் தனது தாயுடன் வசித்து வந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றிக்கொள்ளுமாறு தாயாரிடம் சுனிதா வற்புறுத்தினாா். இந்தச் சொத்து பெயா் மாற்றம் குறித்து அறிந்த மகேஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
விடியோ பதிவுடன் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில், விஷம் உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, உடலின் உட்புற உறுப்புகளின் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், அந்நியா்கள் யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான அறிகுறி இல்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா். சொத்துத் தகராறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தடயவியல் அறிவியல் ஆய்வகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையைச் சோ்ந்த குழுக்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்கட்டமாக, அவா்கள் சாப்பிட்ட நூடுல்ஸில் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
லலிதாவின் சகோதரா் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவு 108-ன் கீழ் (தற்கொலைக்குத் தூண்டுதல்) காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். சேகா் மற்றும் சுனிதா தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் வசித்து வரும் நிலையில், கேரா கலான் பகுதியில் சப்னா வசித்து வருகிறாா். மேலும், இவா்கள் மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

