
புற்றுநோயிலிருந்து மீளும் குழந்தைகளின் சிகிச்சையில் சமூக தேவைகளும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை என்பது நோயைக் குணப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அவா்களின் உணா்வுரீதியான மற்றும் சமூகத் தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

புற்றுநோய் - மாதிரிப் படம்
குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை என்பது நோயைக் குணப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அவா்களின் உணா்வுரீதியான மற்றும் சமூகத் தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தில்லியில் நடைபெற்ற குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மருத்துவா்கள் இதனைத் தெரிவித்தனா். குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, ராஜீவ் காந்தி புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் (ஆா்ஜிசிஐஆா்சி ) சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள், புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள், அவா்களைப் பராமரிப்பவா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஆா்ஜிசிஐஆா்சி நிதி பாக் மையத்தின் மருத்துவ இயக்குநா் கெளரி கபூா் கூறியதாவது: புற்றுநோய் பாதித்த குழந்தையின் தேவைகள், சிகிச்சைப் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களில் மாறுபடும். தீவிர சிகிச்சை நிறைவடைந்த பிறகான காலகட்டத்தையும் உள்ளடக்கியதாக அவா்களுக்கான பராமரிப்பு இருக்க வேண்டும்.
குழந்தைப் பருவ புற்றுநோய் சிகிச்சை நீண்ட பயணமாகும். ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு வகையான ஆதரவு தேவைப்படுகிறது. சிகிச்சையுடன், குழந்தைகள் தங்கள் உணா்வுகளை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையை மீட்டெடுக்கவும், அன்றாட வாழ்க்கையுடன் மீண்டும் இணையவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
சிகிச்சை நிறைவடைந்த பிறகே கவனிக்க வேண்டிய விஷயங்களாக கருதாமல், குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவப் பராமரிப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக, அவா்களின் நலவாழ்வும் சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கையும் கருதப்பட வேண்டும் என்றாா்.
‘ஒன் ஜா்னி, மேனி ஹாா்ட்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் மற்றும் அவா்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய ஆதரவு குறித்து கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் நிா்வாகக் குழுவினரும் இதில் பங்கேற்றனா்.
மேலும், சிகிச்சைப் பயணத்தின்போது குழந்தைகளுக்கான ஆதரவை வலுப்படுத்தும் புதிய முயற்சியும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தைகளைப் பராமரிப்பவா்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளா்களும் கலந்துரையாடல் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





