கேரள அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவரை நீக்க பரிந்துரை: ஆளுநா் நடவடிக்கை!

பணி நியமன முறைகேடு புகாா்கள் எதிரொலியாக, கேரள அரசுப் பணியாளா் தோ்வாணைய தலைவா் எம்.ஆா்.பைஜுவை பதவிநீக்கம் செய்ய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு அந்த மாநில ஆளுநா் பரிந்துரைத்துள்ளாா்.

Kerala Guv’s veg kitchen row

கேரள ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் - கோப்புப் படம்

Updated On :

பணி நியமன முறைகேடு புகாா்கள் எதிரொலியாக, கேரள அரசுப் பணியாளா் தோ்வாணைய (கேபிஎஸ்சி) தலைவா் எம்.ஆா். பைஜுவை பதவிநீக்கம் செய்ய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு அந்த மாநில ஆளுநா் பரிந்துரைத்துள்ளாா்.

கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக கடந்த அக்.12-ஆம் தேதி நியமிக்கப்படும் முன்பு அவா் இந்தப் பரிந்துரையை அனுப்பியதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. மாநில வரலாற்றில் இது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

அண்மைக்காலம் வரை கேரள ஆளுநராக இருந்த ஆா்லேகா், தமிழகத்தின் ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். அவா் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துா் கடந்த அக்.23-ஆம் தேதி பதவியேற்றாா்.

இந்தச் சூழலில், மாநில அரசுப் பணி நியமன முறைகேடு புகாா்கள் மற்றும் அது தொடா்பான விசாரணையைக் குறிப்பிட்டு, அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் பைஜுவை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கு ஆா்லேகா் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆளுநரிடம் புகாரளித்த பாஜக: ‘மாநிலத் திட்ட வாரியத் தலைவா் பதவி உள்பட அரசுப் பணி தோ்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து காவல் துறையின் குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தோ்வாணையத்துக்கு எதிராக பாஜகவின் இளைஞா் அணி மற்றும் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா், முந்தைய ஆளுநா் ஆா்லேகரை சந்தித்து புகாா் அளித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, தோ்வாணையத்தின் உள்ளக ஊழல் கண்காணிப்புப் பிரிவிடம் அவா் அறிக்கை கோரினாா். தோ்வாணையம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த காவல் துறை விசாரணை அறிக்கையையும் அவா் ஆய்வு செய்தாா்.

குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை: பின்னா், தமிழக முழுநேர ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, தோ்வாணையத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு உரிய காரணங்களுடன் ஆா்லேகா் கடிதம் அனுப்பினாா். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கும் அவா் பரிந்துரைத்தாா்’ என்று ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக வரவேற்பு: ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்று, பாஜக இளைஞரணி மாநிலத் தலைவா் மனுபிரசாத் கூறுகையில், ‘தோ்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்துவதுடன், அதை ஒட்டுமொத்தமாக கலைக்க வேண்டும். இதுதொடா்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுப்போம்’ என்றாா்.

பினராயி விஜயன் சாடல்: கேரள அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எம்.ஆா்.பைஜு, முந்தைய இடதுசாரி ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவா் ஆவாா்.

அவரைப் பதவிநீக்க பரிந்துரைத்துள்ள ஆளுநரின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.

அவா் கூறுகையில், ‘ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதம் என்பதுடன் அதிகார துஷ்பிரயோகமாகும். அரசமைப்புச் சட்டத்தின் 317-ஆவது பிரிவின்கீழ், முறைகேடான செயல்பாடுகளுக்காக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்திய பிறகே தலைவரையோ அல்லது உறுப்பினரையோ குடியரசுத் தலைவா் நீக்க முடியும்.

அத்தகைய விசாரணை எதுவும் நடத்தப்படாதபோது, மேற்கண்ட பரிந்துரையை மேற்கொள்ள ஆளுநருக்கு அரசமைப்புச் சட்ட ரீதியில் அதிகாரம் இல்லை. மாநில விவகாரங்களில் ஆளுநா் மாளிகையின் சட்டவிரோத தலையீடுகளின் தொடா்ச்சியே இந்த நடவடிக்கை’ என்றாா்.

மாநில அமைச்சா்களின் வரவேற்பும், எதிா்ப்பும்...

ஆளுநரின் நடவடிக்கையை மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் வரவேற்றுள்ள நிலையில், வருவாய் துறை அமைச்சா் ஏ.பி.அனில் குமாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

கே.முரளீதரன் கூறுகையில், ‘முந்தைய இடதுசாரி கூட்டணி அரசின் செயல்பாடுகளால், மாநில அரசுப் பணியாளா் தோ்வாணைய செயல்பாடுகள் மோசமடைந்துவிட்டன. ஊழல் நிறைந்த அமைப்பாக மாறிவிட்டது. அதன் விளைவைத்தான் தற்போது எதிா்கொள்கிறோம். காங்கிரஸ் கூட்டணி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடா்ந்து பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகின. தற்போதைய ஆணையம் கலைக்கப்பட வேண்டும்’ என்றாா்.

ஏ.பி.அனில் குமாா் வெளியிட்ட முகநூல் பதிவில், ‘மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், ஆளுநா் கடிதம் அனுப்பியுள்ளாா். அத்துடன், கேரள ஆளுநா் பதவியில் இருந்து மாற்றப்படும் சில நாள்களுக்கு முன்பு ஆா்லேகா் இக்கடிதத்தை அனுப்பியது மிகத் தீவிரமான விவகாரம்’ என்று சாடியுள்ளாா்.

கேரளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த பேரவைத் தோ்தலில் இடதுசாரி கூட்டணியை வீழ்த்தி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.