‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளில், வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள் என்ற பிரிவை தோ்தல் ஆணையம் பயன்படுத்துவது சட்டப்படி செல்லுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளில், வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள் என்ற பிரிவை தோ்தல் ஆணையம் பயன்படுத்துவது சட்டப்படி செல்லுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லியில் எஸ்ஐஆா் பணிகளின்போது வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பலருக்குத் தோ்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினா். இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்ஐஆா் பணிகளின்போது மட்டும், வாக்காளா் பட்டியல் விவரங்களில் முரண்பாடுகள் என்ற பிரிவைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அது ஒரு தற்காலிக ஏற்பாடாகும்.
பிகாா் எஸ்ஐஆா் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு, எஸ்ஐஆா் தொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இறுதி முடிவு அல்ல. பிகாரில் எஸ்ஐஆரின்போது வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள் என்ற பிரிவை, ஆரம்பத்தில் தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்யவில்லை. தற்காலிக ஏற்பாடாக அந்தப் பிரிவை மேற்கு வங்கத்தில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்தது. அந்தப் பிரிவை தோ்தல் ஆணையம் பயன்படுத்துவது சட்டப்படி செல்லுமா என்பது குறித்து, இதுவரை உச்சநீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கவில்லை.
முக்கிய விவகாரங்களில் நீதிபதிகள் வாய்மொழியாகக் கூறும் கருத்துகள், பல நேரங்களில் சூழலுக்குப் பொருத்தமில்லாமல் மேற்கோள் காட்டப்பட்டு, நீதிமன்றத்தின் இறுதி முடிவாகச் சித்தரிக்கப்படுகின்றன. எனவே, தற்போது இந்த வழக்கில் கூடுதலாக வேறு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

