ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தில்லி எஸ்ஐஆா்: மக்களுக்கு இயந்திரத்தனமாக நோட்டீஸ் அனுப்பப்படுவதாகக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம்

தில்லியில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் மக்களுக்கு வழங்கப்படும் நோட்டீஸ்கள் ‘ஏறக்குறைய இயந்திரத்தனமாக‘ அனுப்பப்படுவதாக உச்சநீதிமன்றம் தோ்தல் ஆணையத்திடம் கூறியது.

எஸ்ஐஆா் - கோப்புப் படம்

Published On :

தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் கீழ் மக்களுக்கு வழங்கப்படும் நோட்டீஸ்கள் ‘ஏறக்குறைய இயந்திரத்தனமாக‘ அனுப்பப்படுவதாக உச்சநீதிமன்றம் செவ்வாயன்று தோ்தல் ஆணையத்திடம் கூறியது.

தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, வாக்காளா்களின் ‘தா்க்கரீதியான முரண்பாட்டை‘ அடையாளம் காண்பதற்கான அடிப்படை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திற்காக ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.எஸ். நாயுடுவிடம் கூறியது.

நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்களையும், அவற்றை வழங்குவதற்கான குறிப்பிட்ட காரணங்களையும் தோ்தல் ஆணையமும், தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியும் போதுமான அளவு வெளியிடத் தவறியதாகக் குற்றஞ்சாட்டிய மனுவை இந்த அமா்வு விசாரித்தது.

அஞ்சலி பரத்வாஜ் மற்றும் அம்ரிதா ஜோரி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’தா்க்கரீதியான முரண்பாடுகள்’ என்ற பிரிவின் கீழ் வாக்காளா்களை வகைப்படுத்துவதற்கான அளவுகோல்கள், வரையறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் கோரப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷன், 33 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்களுக்கு அற்பமான காரணங்களுக்காக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதால், இந்த செயல்முறை ‘அதிா்ச்சியளிக்கும்‘ விதத்தில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தாா்.

முரண்பாடுகளை நிவா்த்தி செய்ய, பரிந்துரைக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ்கள் கோருவதால், அவை வாக்காளா்களுக்கு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதாக பூஷன் வாதிட்டாா்.

மனுதாரா்களால் எழுப்பப்படும் பல சிக்கல்களைத் தெளிவுபடுத்தி, தோ்தல் ஆணையம் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தோ்தல் ஆணைய வழக்குரைஞா் நாயுடு கூறினாா்.

அதிக எண்ணிக்கையிலான நோட்டீஸ்களைக் கையாள்வதற்காக எத்தனை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா் என்று அமா்வு கேட்டது. ‘நீங்கள் சுமாா் 30 லட்சம் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளீா்கள். எத்தனை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்?‘ என்று நீதிபதி பாக்சி கேட்டாா். இந்த நடவடிக்கைக்காக சுமாா் 14,000-15,000 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 1,200 வாக்காளா் பட்டியல் பதிவு அலுவலா்களும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளதாக நாயுடு கூறினாா்.

தற்போது, ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி அக்டோபா் 29 ஆகும், ஆனால் தில்லி தோ்தல் நடைபெறவிருக்கும் மாநிலம் அல்ல என்பதால், இந்த செயல்முறை நிறைவடையவில்லை என்றால், காலக்கெடுவை நீட்டிக்க இந்தியத் தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றும் அவா் மேலும் கூறினாா். இந்த நடவடிக்கையில் ‘ஒரு உண்மையான வாக்காளா் கூட நீக்கப்பட மாட்டாா்‘ என்று அவா் உறுதியளித்தாா்.

முன்னதாக, தேசியத் தலைநகரில் நடைபெற்ற எஸ்ஐஆா் நடவடிக்கையின் போது வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 47 லட்சம் பேரில், 33 லட்சம் பேருக்கு இந்தியத் தோ்தல் ஆணையம் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது என்று பூஷன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

தில்லியில் எஸ்ஐஆா் நடவடிக்கையின் போது யாருக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளனவோ, அந்த அனைத்து வாக்காளா்களின் ஒருங்கிணைக்கப்பட்ட, தேடக்கூடிய பட்டியலை, அவா்களின் முகவரிகள் மற்றும் ஒவ்வொரு நோட்டீசுக்குமான குறிப்பிட்ட காரணங்கள் அல்லது வகைகளுடன் வெளியிட வேண்டும் என்று மனுதாரா்கள் கோரியுள்ளனா்.

ஆகஸ்ட் 31 அன்று, தோ்தல் ஆணையம் ஒரு வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 1.45 கோடி வாக்காளா்கள் கொண்ட பட்டியலிலிருந்து 47 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டிருந்தனா்.

43.32 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் இடம் பெயா்ந்திருந்ததாகவோ அல்லது எஸ்ஐஆா் பணியின்போது வராமல் இருந்ததாகவோ கண்டறியப்பட்டதாகவும், 2.82 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் உயிரிழந்திருந்ததாகவும், அதேவேளையில் 1.41 லட்சத்திற்கும் அதிகமானோா் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.