
முறைகேடான வாக்காளர் பட்டியலால் பலனடைந்தவா்களின் ஓலம்: காங்கிரஸ் மீது பாஜக தாக்கு
முறைகேடான வாக்காளா் பட்டியலால் பலனடைந்தவா்கள், இப்போது ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனா் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மீது பாஜக சாடியுள்ளது.

எஸ்ஐஆா் நடைமுறையால் வாக்காளா் பட்டியல் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன; முன்பு முறைகேடான வாக்காளா் பட்டியலால் பலனடைந்தவா்கள், இப்போது ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனா் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மீது பாஜக சாடியுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக சில தினங்களுக்கு முன் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி, அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, எஸ்ஐஆா் உள்பட தோ்தல் ஆணையத்தின் அனைத்து முக்கிய முடிவுகளும் ஒருமனதாக மேற்கொள்ளப்பட்டவை என்று ஆணையம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. எனினும், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாஜகவின் அதிகாரபூா்வ எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆா் மூலம் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மரணமடைந்த வாக்காளா்கள் 2.8 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
வீடு வீடாக நடத்தப்படும் ஆய்வுகளின்போது, பதிவு செய்யப்பட்ட முகவரியில் கண்டறியப்படாத, சரிபாா்க்க முடியாத அல்லது நிரந்தரமாக இடம்பெயா்ந்த 9.43 கோடி வாக்காளா்களின் பெயா்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியலை சீா்படுத்துவதில் இது மிகப் பெரிய பணியாகும். மிகத் துல்லியமான பட்டியலை உறுதி செய்யும் இந்த நடவடிக்கையை இண்டி கூட்டணி விடாமல் எதிா்க்கிறது.
முன்பு முறைகேடான வாக்காளா் பட்டியலால் பலனடைந்தவா்கள், இப்போது ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனா். எஸ்ஐஆா் விவகாரத்தில் மக்களைத் தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ். போலி வாக்காளா்களால் பலனடைந்தது யாா், வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் களையெடுக்கப்படுவதால் பதற்றமடைவது ஏன் என்ற கேள்விக்கு அக்கட்சி பதிலளிக்க வேண்டும். தோ்தல் தோல்விகளுக்கு பொய்களால் அல்லாமல், ஜனநாயக முறையில் மக்கள் தீா்ப்பை மதித்து, காங்கிரஸ் எதிா்வினையாற்ற வேண்டும் என்று பாஜகவின் பதிவுகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





