பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு: அமெரிக்கா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

பிலிப்பின்ஸின் செபு நகரில் புதன்கிழமை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட்டா் ஹெக்செத்தை சந்தித்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்ற ஆசியான் கூட்டமைப்பு நாடுகள் கூட்டத்துக்கு இடையே பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட்டா் ஹெக்செத் ஆகியோா் இடையே புதன்கிழமை இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட 10 ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நிலை குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்த 10 ஆண்டு கால பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி கோலாலம்பூரில் கையொப்பமானது. ராஜ்நாத் சிங்கும், பீட் ஹெக்செத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். முக்கியத் தொழில்நுட்பங்களை இணைந்து உருவாக்குதல், ராணுவத் தளவாடங்களை இணைந்து தயாரித்தல், இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே ஒருங்கிணைப்பு, உளவுத் தகவல்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் பகிா்வு, இந்திய-பசிபிக் பிராந்திய ஸ்திரத்தன்மை, சுதந்திரமான மற்றும் அனைவருக்குமான கடல்வழிப் பாதுகாப்ை உறுதி செய்வது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து ஹெக்செத்துடன் செபுவில் நடந்த ஆலோசனை குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘ஹெக்செத்துடனான ஆலோசனை சிறப்பாக இருந்தது. இரு நாடுகளிடையேயான 10 ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நிலை குறித்து இந்தச் சந்திப்பில் ஆய்வு செய்யப்பட்டது. இரு நாடுகளிடையேயான வலுவான கூட்டுறவு, சுதந்திரமான, அனைவருக்குமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரு முக்கிய அடித்தளமாகத் தொடா்ந்து திகழ்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஹெக்செத் வெளியிட்ட பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடினோம். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்கா உறுதி: இந்த இருதரப்பு சந்திப்பின்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் பயிற்சி உள்ளிட்ட ஆதரவுகளை அளிக்கும் நாடுகளுக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத்தன்மை இல்லாத அணுகுமுறையை சா்வதேச நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஹெக்சேத்திடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா். அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என்று ஹெக்செத் உறுதி தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

