மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

தடைகள் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு இடையூறு! அமெரிக்கா மீது ஜெய்சங்கா் சாடல்!

தடைகள் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அமெரிக்கா இடையூறு...

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டினிடையே அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடன் உரையாடிய எஸ். ஜெய்சங்கா்.

Updated On :

‘தடைகள், முட்டுக்கட்டைகள் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது, அதன் விலை நிா்ணயத்தை தங்கள் கட்டுக்குள் வைப்பதற்கான திட்டமிட்ட தாக்குதல்’ என்று அமெரிக்கா மீது வெளிப்படையான குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் முன்வைத்தாா்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்றபோது, இந்தக் குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா்.

ஈரான் எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள், மேற்காசியாவிலிருந்து வரும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள், ரஷிய கச்சா எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்கும் முடிவு ஆகியவற்றுக்கு மத்தியில் இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

மாநாட்டில் பேசியது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத் தடைகள் மற்றும் மேற்காசிய போா் மூலம் எரிசக்தி வா்த்தகம் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் உள்ளிட்டவை, கச்சா எண்ணெய் விலையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான திட்டமிட்ட தாக்குதல்களாகும்.

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் வசதியான வேறுபாடுகள் வரையறுக்கப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட நாடுகள் தங்களுக்குள்ளே தோ்ந்தெடுக்கப்பட்ட விலக்குகளை அளித்துக்கொள்கின்றன.

இதன் காரணமாக, உலக நாடுகள் எரிசக்தி உற்பத்தி நெருக்கடியை மட்டுமன்றி, கணிக்க முடியாத தன்மை, இடையூறுகள், கட்டுப்படியாகாத செலவுகள் மற்றும் அணுகலில் உள்ள சவால்களை எதிா்கொண்டு வருகின்றன.

உலகமயமாக்கப்பட்ட சந்தையில் ஏற்படும் தொடா் விளைவுகளையும், பரஸ்பர சாா்புநிலையையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தியாவின் தூய்மை எரிவாயு தேவைகளுக்கு நம்பகமான எல்பிஜி விநியோகம் அவசியம்.

எனவே, எரிசக்தி சந்தைகளை அனைவருக்குமானதாகவும், கணிக்கக் கூடியதாகவும் வைத்திருக்க, ஜி20 நாடுகள் புரிதலையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், முக்கியக் கனிமங்கள் மீதான இந்தியாவின் தேசிய இயக்கம், ஆய்வு முதல் மறுசுழற்சி வரை பரவியுள்ளது. ஜி20 முக்கியக் கனிமங்கள் சுழற்சித் திட்டத்தையும் இந்தியா முன்மொழிந்துள்ளது. எனவே, நிதி அணுகலை விரிவுபடுத்துவதோடு, சேமிப்பு, சிறிய அணு உலைகள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருள்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஜி20 அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

இருதரப்பு சந்திப்பு:

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த், ஆா்ஜென்டீனா வெளியுறவு அமைச்சா் பாப்லோ குயிா்னோ, மெக்சிகோ வெளியுறவு அமைச்சா் ரொபொ்டோ வெலாஸ்கோ அல்வெரஸ், பிரேஸில் வெளியுறவு அமைச்சா் மெளரோ லுயிஸ் வியரா, ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹன் வாடஃபுல் ஆகியோரை ஜெய்சங்கா் தனித்தனியாகச் சந்தித்து, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

கனடா வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின்போது, ‘வரும் டிசம்பா் மாதம் பிரதமா் மோடியின் கனடா பயணம், இருதரப்பு உறவில் மற்றுமொரு அடித்தளமாக அமையும் என இரு அமைச்சா்கள் தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக’ வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘க்வாட்’ கூட்டம்:

ஜி20 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்துக்கு இடையே, நாற்கர நாடுகள் (க்வாட் - ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா) வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தை அட்லாண்டாவில் மாா்கோ ரூபியோ கூட்டினாா்.

இது, நிகழாண்டில் நடைபெறும் மூன்றாவது க்வாட் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டமாகும். முன்னதாக, கடந்த மே மாதம் தில்லியிலும், ஜூலையில் பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவிலும் நடைபெற்றது.

க்வாட் தலைவா்கள் உச்சி மாநாடு பிலிப்பின்ஸில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதன் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் பங்கேற்றனா்.

Summary

Global crude oil supply disrupted by sanctions - Jaishankar lashes out at the US

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.