
மகள்கள் படிப்புக்காக வெறுங்கால்களுடன் மாரத்தான் ஓடி வென்ற பெண்! ஆனால், பரிசு?
மகாராஷ்டிரத்தில் தனது மகள்களின் படிப்புச் செலவுக்காக தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் வெறுங்கால்களுடன் ஓடி முதல் பரிசை வென்றது பற்றி...

ரமாபாய் ரன்வீர் - X
மகாராஷ்டிரத்தில் 47 வயது பெண் ஒருவர், மாரத்தான் ஓட்டத்தில் வெறுங்கால்களுடன் ஓடி முதலிடம் பிடித்துள்ளார்.
அவரது மகள்களின் கல்விச் செலவுக்காக மாரத்தான் போட்டியில் பங்கேற்றதாக அவர் கூறிய நிலையில், இந்த போட்டியில் வெறும் ரூ. 3,000 தான் பரிசுத் தொகை என்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டம் அம்பஜோகாய் பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர். அப்பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சமையல்காரராகப் பணியாற்றி வருகிறார்.
மும்பையில் நடந்த விபத்து ஒன்றில் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரண்டு மகள்களையும் தனி ஆளாக நின்று வளர்த்து வருகிறார். கடும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், தனது இரண்டு மகள்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இதையடுத்து ஒரு தனியார் பயிற்சி மையத்தில் அவரது மகளைச் சேர்த்த அவர், அங்கு சமையல் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அங்குள்ள உள்ளூர் அமைப்பு ஒன்று ஒரு மாரத்தான் போட்டியை நடத்துவது குறித்து அறிவித்த நிலையில் ரமாபாய் அதில் பங்கேற்க முடிவெடுத்தார்.
பல இளம் பெண்கள் டி-ஷர்ட், டிராக் பேண்ட் அணிந்து பங்கேற்ற நிலையில் ரமாபாய் சேலை அணிந்து அதேநேரத்தில் காலில் செருப்பின்றி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார்.
பனிமூட்டம் அதிகம் இருந்த நிலையிலும் கற்கள் அதிகம் இருந்த சாலையிலும் அவர் வெறுங்காலில் ஓடியது அங்கிருந்தவர்களை மிகவும் கண்கலங்கச் செய்தது.
எனினும் அவர் போட்டியில் முதல் ஆளாக ஓட்டத்தை நிறைவு செய்து முதல் பரிசை வென்றார்.
இந்த போட்டியில் வெறும் ரூ. 3,000 -தான் பரிசுத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகள்களுக்கு புத்தகம் வாங்க இந்த பணம் உதவும் என்று ராமாபாய் கூறினார்.
அவருடைய மகள் பூஜாவும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றார். தன்னுடைய தாயை ஊக்குவிக்கவே போட்டியில் கலந்துகொண்டதாகவும் அதேநேரத்தில் தன்னுடைய அம்மா முதல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
பூஜா தற்போது காவல் பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவதாகவும் தன்னுடைய சகோதரி வங்கி பணித் தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
பூஜாவின் கடின உழைப்பைப் பார்த்து அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் பூஜா கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
மகள்களின் படிப்புக்காக தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் ஓடியது நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, சமூக வலைத்தளங்களில் பலரும் இதுபற்றி பதிவிட்டு வருகின்றனர்.
'மாரத்தான் போட்டியில் வென்றதற்கு வெறும் ரூ. 3,000 தான் பரிசா? இது மிகவும் குறைவானது, புத்தகச் செலவுக்குக்கூட போதாது' என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
'இதுதான் ஏழை மக்களின் நிலை, அவர் ஓடுவதைப் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன. பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கே அரசு உதவிகள் கிடைக்கின்றன, அவருக்கு யாரேனும் உதவி செய்யலாமே? என்று பலரும் பல கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ராமபாய்க்கு பலருக்கும் பாராட்டும் தெரிவித்தும் வருகின்றனர்.
Summary
Maharashtra woman runs marathon barefoot to fund daughters education wins first prize
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





