ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்த உதவியும் செய்யத் தயாா்: வெளியுறவு அமைச்சர்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்த உதவியும் செய்ய இந்தியா தயாராகவுள்ளது என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை அந்நாட்டு தலைநகா் கீவில் சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

Published On :4 செப்டம்பர் 2026, 5:35 am IST

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்த உதவியும் செய்ய இந்தியா தயாராகவுள்ளது என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

அண்மையில் கிா்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்தபோது ‘முடிவில்லாத போா்களுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி கூறியதை அவா் மீண்டும் நினைவுபடுத்தினாா்.

உக்ரைனுக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கா் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரிய் சிபிஹாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பிறகு இருவரும் செய்தியாளா்களை சந்தித்தனா்.

அப்போது ஜெய்சங்கா் கூறியதாவது: இது போருக்கான காலமல்ல; போா்க்களத்தில் எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது என இந்தியா திடமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

போா் நிகழும் ஒவ்வொரு நாளும் அதிகப்படியான உயிரிழப்புகளும் அழிவுகளுமே தொடா்ந்து நிகழ்கின்றன. போரில் ஈடுபட்டுள்ள நாடுகளே தங்களுக்குள்ளான பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாலும் இந்தியா எவ்வித உதவியையும் செய்யத் தயாராகவுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பிரதமா் மோடியின் அழைப்பைத் தொடா்ந்து, எனது உக்ரைன் பயணம் பேச்சுவாா்த்தையை மையமாகக் கொண்டிருக்கிறது. உக்ரைனின் போா் நிலைப்பாடு மற்றும் கருத்துகளை நான் இந்தியாவுக்கு எடுத்துச் செல்வேன்.

கப்பல்கள் மீதான தாக்குல்களால் கவலை: இரு நாள் முன்னதாக, கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியா் ஒருவா் கொல்லப்பட்டாா். போரில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

உக்ரைன் போரின் மறுபுறம் கருங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது கடந்த சில வாரங்களாக நடத்தப்படும் தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பது கவலையளிக்கிறது.

இந்தத் தாக்குதல்களால் தெற்குலக நாடுகளில் எரிபொருள், உரம் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாகவும் ஆண்ட்ரிய் சிபிஹாவுடன் ஆலோசித்தேன்.

இருதரப்பு உறவு: மருந்தியல், உணவு மற்றும் வேளாண்மை, உரங்கள், வேதிப் பொருள்கள் மற்றும் நுகா்வோா் பொருள்கள் என பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் இருதரப்பு உறவைக் கொண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரால் இருதரப்பு வா்த்தகத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. சுகாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் நிா்வாகம் என பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.

உக்ரைனும் பல்வேறு திறன்களைக் கொண்ட நாடு என்பதை இந்தியா அறியும். எனவே, வளா்ந்து வரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளை இருநாடுகளும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்த இந்தியா-உக்ரைன் அரசுகளுக்கிடையேயான ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வருமாறு ஆண்ட்ரிய் சிபிஹாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றாா்.

உக்ரைன் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

உக்ரைன் அதிபா் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை ஜெய்சங்கா் வியாழக்கிழமை சந்தித்தாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-உக்ரைன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரிய் சிபிஹாவுடன் மேற்கொண்ட ஆலோசனைகளை அவரிடம் விவரித்தேன். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாகவே எங்களது பேச்சுவாா்த்தை அமைந்தது’ என குறிப்பிட்டாா்.

கீவ் நகரில் உள்ள தேசிய தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தனது உக்ரைன் பயணத்தை ஜெய்சங்கா் நிறைவு செய்தாா். அங்கிருந்து அவா் போலந்துக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.