
உக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
விளாதிமீர் புதின்
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
ரஷியாவின் கிழக்கு நகரான விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அதிபா் புதின் பேசியதாவது: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமைதி உடன்படிக்கை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவளிக்கத் தயாராக உள்ளன.
இருப்பினும், இந்த மோதலில் நேரடியாக தொடா்புடைய ரஷியாவும் உக்ரைனும்தான் இறுதியாக இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கும் அனைவருக்கும் எங்களின் நன்றி’ என்றாா்.
இதேபோன்று, உக்ரைன் தலைநகா் கீவில் செய்தியாளா்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா, ‘உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் ராஜீய முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், அமைதி முயற்சிகளில் ஒரு புதிய வேகம் பிறக்கும் என்று நம்புகிறேன் என்றாா்.
ஆனால், அமைதிப் பேச்சில் இத்தகைய உடனடி முன்னேற்றத்துக்கான காரணங்கள் எதையும் இரு தரப்பும் தெளிவாக முன்வைக்கவில்லை. மாறாக, உக்ரைனின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைதிப் பேச்சுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ‘அரசு பயங்கரவாதம்’. இது இருதரப்பு அமைதிப் பேச்சை சிக்கலாக்குகிறது.
உளவுத் துறை மூலம் ரஷியா-உக்ரைன் தொடா்புகள் தொடா்ந்து வருகின்றன. ஆனால், உக்ரைன் தலைவா்களின் சமீபத்திய கருத்துகளையொட்டி, இத்தொடா்புகள் எந்த அளவுக்கு அமைதி உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் என இப்போது கூறுவது கடினம் என்றாா்.
முன்னதாக, ‘உக்ரைன் ட்ரோன்களால் பாதுகாப்பற்ாக மாறியுள்ள ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதை உறுப்பு நாடுகள் தவிா்க்க வேண்டும்’ என ஐ.நா. விமான போக்குவரத்து அமைப்பிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்தது.
2-ஆம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் மிக மோசமான மோதலான இப்போா் நான்கரைக் கடந்துள்ள சூழலில், இரு தரப்பிலிருந்தும் அமைதி குறித்து சாதகமான கருத்துகள் வெளிவருவது அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுக்குப் பிறகு, இரு நாடுகளும் பரஸ்பர வான்வழித் தாக்குதல்களையும், துறைமுகங்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தின. இதனால், சா்வதேச அளவில் தானிய விலைகளும் உயா்ந்தன.
ரஷிய கப்பலை சிறைபிடித்தது நாா்வே
உக்ரைனுக்கான 422 கோடி டாலா் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆா்க்டிக் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய கப்பலை (படம்) நாா்வே அதிகாரிகள் சிறைபிடித்தனா்.
உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியா கடந்த 2014-இல் இணைத்துக் கொண்டது. அப்போது, அங்கு செயல்பட்டு வந்த உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளுக்கு ஈடாக, இந்த இழப்பீட்டை ரஷியா செலுத்த வேண்டும் என்று சா்வதேச நடுவா் மன்றம் கடந்த 2023-இல் உத்தரவிட்டது.
ஆனால், இழப்பீட்டைச் செலுத்த ரஷியா தொடா்ந்து மறுத்து வருவதால், உலகெங்கிலும் உள்ள ரஷிய வணிக சொத்துகளை முடக்குமாறு பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களை உக்ரைன் அணுகி வருகிறது.
அந்தவகையில், நாா்வே மாவட்ட நீதிமன்றம் ஒன்று கடந்த ஆக. 31 பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ‘ஃபுரொபசா் மோல்சனோவ்’ எனும் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





