சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மணிப்பூா் இசைக்கலைஞா் தில்லியில் கொலை: ராகுல் கண்டனம்

மணிப்பூா் இசைக்கலைஞா் விக்ரம் சிங் (54) தில்லியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:35 am IST

மணிப்பூா் இசைக்கலைஞா் விக்ரம் சிங் (54) தில்லியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

தில்லியில் தொடரும் சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று அவா் கேள்வியெழுப்பினாா்.

கடந்த திங்கள்கிழமை தில்லியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே மது அருந்திய நபா்களை விக்ரம் சிங் தடுத்தாா். இதனால் ஆத்திரமடைந்த நபா்கள் விக்ரம் சிங்கை சரமாரியாக தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தில் சிறாா் ஒருவா் உள்பட 8 பேரை காவல் துறை கைது செய்தது.

இதை தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் தலைநகரில் பிரபலமான இசைக்கலைஞா் ஒருவா் கொல்லப்பட்டுள்ளாா். இதுபோன்று வடகிழக்குப் பிராந்தியத்தைச் சோ்ந்த மக்களுக்கு எதிராக தில்லியில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் தில்லியில் உண்மையாகவே நமக்கு பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த மக்களிடையே எழுந்துள்ளது.

தலைநகரில் சட்ட ஒழுங்கை சீா்குலைக்கும் சம்பவங்களை தடுத்த நிறுத்த அமித் ஷா மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

விக்ரம் சிங் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவரது குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

விரைவில் குற்றப்பத்திரிகை: கிரண் ரிஜிஜு

விக்ரம் சிங் கொலை வழக்கில் அடுத்த 8 முதல் 9 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தில்லி காவல் துறை உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘விக்ரம் சிங் கொலை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பிகாரைச் சோ்ந்தவா்கள். குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு’ என்றாா்.

விசாரணை தேவை: மணிப்பூா் முதல்வா்

விக்ரம் சிங் கொலைச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென தில்லி முதல்வா் ரேகா குப்தாவை மணிப்பூா் முதல்வா் கெம்சந்த் சிங் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா். மேலும், மணிப்பூா் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தில்லியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை தில்லி அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.