
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முயற்சி எடுத்தால் வரவேற்போம்: ரஷியா அறிவிப்பு
உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு இந்தியா எந்த அமைதி முயற்சி எடுத்தாலும் வரவேற்போம் என்று ரஷியா அறிவித்துள்ளது.

திமித்ரி பெஸ்கோவ்
உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு இந்தியா எந்த அமைதி முயற்சி எடுத்தாலும் வரவேற்போம் என்று ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நீடிக்கிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் பல ஆயிரம் போ் உயிரிழந்துவிட்டனா்.
அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே அதில் கலந்து கொண்ட ரஷிய அதிபா் புதினிடம் பிரதமா் மோடி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ரஷியா எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தாா்.
இந்த சந்திப்பு நடைபெற்ற சில தினங்களில் உக்ரைன் தலைநகா் கீவில் அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது அவரிடம், உக்ரைனில் அமைதி ஏற்பட இந்தியா எந்த பங்களிப்பையும் அளிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருந்தாா்.
இந்நிலையில், மாஸ்கோவில் இருந்து காணொலி வாயிலாக தில்லியில் உள்ள செய்தியாளா்களுக்கு ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் திமித்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் அறிவோம். இந்தியாவின் நிலைப்பாடு பெருமளவு எங்களின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகிறது. உக்ரைனுடனான போரில் அமைதி வழிகளில் தீா்வு காணவே ரஷியா விரும்புகிறது. உக்ரைனுடனான போரில் அமைதி தீா்வு காண இந்தியா ஏதேனும் முயற்சிகளை எடுத்தால் நாங்கள் வரவேற்போம்.
உக்ரைனுக்கு எதிரான போா் நடைபெறும் களத்தில் ரஷிய ராணுவத்துடன் சோ்ந்து போரிட்டு வரும் இந்தியா்கள் குறித்த பட்டியலை ரஷியா சேகரித்து வருகிறது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விரைவில் அவா்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைப்போம்.
இந்தியாவில் புதிய அணுசக்தி மையங்களை அமைப்பது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு ரஷியா காத்திருக்கிறது. இந்தியாவுக்கு சுகோய் 57 போா் விமானங்களை விற்பனை செய்வது குறித்தும் ரஷியா பேச்சு நடத்தும்.
இந்திய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை ரஷியாவில் விரிவுப்படுத்தி வருகின்றன. ரஷிய பொருளாதாரத்திலும் அதிகம் முதலீடு செய்கின்றன. இதை வரவேற்கிறோம். அதேபோல் இந்திய சந்தையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுப்படுத்த ரஷிய நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளன என்றாா்.
செப். 11-இல் மோடி-புதின் சந்திப்பு
தில்லியில் செப். 11 முதல் 13 வரை பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து திமித்ரி பெஸ்கோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே இந்திய பிரதமா் மோடியை ரஷிய அதிபா் புதின் செப்.11-ஆம் தேதி நேரில் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவாா்’ என்று அவா் பதிலளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




