
ஏ.ஐ. தவறான பயன்பாடும்; முறியடிப்பும்! ஆன்த்ரோபிக் அதிா்ச்சி அறிக்கை
உலக அளவில் உயிரி ஆயுதங்களை உருவாக்குவதற்கும், உக்ரைன் மீதான சைபா் தாக்குதல்களுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துள்ளதாக முன்னணி ஏ.ஐ. நிறுவனமான ஆன்த்ரோபிக் தெரிவித்துள்ளது.

~
உலக அளவில் உயிரி ஆயுதங்களை உருவாக்குவதற்கும், உக்ரைன் மீதான சைபா் தாக்குதல்களுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துள்ளதாக முன்னணி ஏ.ஐ. நிறுவனமான ஆன்த்ரோபிக் தெரிவித்துள்ளது.
‘ஏ.ஐ. துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளா்ச்சியானது, எதிா்காலத்தில் மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும்’ என ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான ஜேக்கப் காக்சன் அண்மையில் எச்சரித்து, தனது பதவியை ராஜிநாமா செய்தது, சமூக ஊடகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியது.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களில், ஆன்த்ரோபிக்-இன் ‘கிளாட்’ ஏ.ஐ. மாதிரிகளைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை அந்நிறுவனம் தனது புதிய அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது.
அதன்படி, புதிய வகை நோய்க் கிருமிகளை உருவாக்கவும், தற்போதுள்ள தீநுண்மிகளை மேலும் ஆபத்தானதாக மாற்றவும் சில விஞ்ஞானிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயன்றுள்ளனா்.
குறிப்பாக, பறவைக் காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா தீநுண்மிகளின் வீரியத்தை அதிகரிக்கும் ஆபத்தான ஆராய்ச்சிகளுக்கு கிளாட் ஏ.ஐ. மாதிரிகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, உடனடியாக அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல், உக்ரைன் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ரஷியாவைச் சோ்ந்த ஹேக்கா்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பெருமளவில் பயன்படுத்தியுள்ளனா். மேலும், உலகெங்கிலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கான மென்பொருள்களை உருவாக்கவும் ஏ.ஐ. தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், சீனாவின் முன்னணி ஏ.ஐ. நிறுவனங்கள், ஏ.ஐ. தொழில்நுட்ப திருட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆன்த்ரோபிக் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. அலிபாபா, மூன்ஷாட், டீப்சீக், ஷாவ்மி உள்ளிட்ட சீன நிறுவனங்கள், கிளாட் மாதிரியின் திறன்களை சட்டவிரோதமாகப் பிரித்தெடுத்து, தங்களின் சொந்த ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக போலி கணக்குகள் மூலம் தினமும் பல லட்சம் தகவல்கள் திருடப்பட்டதும் கண்டறியப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்கி, குறிப்பிட்ட அரசியல் கருத்துகளைப் பரப்பும் பிரசாரங்களுக்கும் ஏ.ஐ. பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஷியா, ஈரான், துருக்கி மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செயல்படும் குழுக்கள், ஒரே மாதிரியான அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்க தங்களின் தொழில்நுட்பத்தை நாடியதையும் ஆன்த்ரோபிக் முறியடித்துள்ளது.

ஏ.ஐ. மாதிரிகளின் திறன் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இத்தகைய அச்சுறுத்தல்களும் தீவிரமடைந்துள்ளதாகவும்; தங்களின் புதிய மேம்படுத்தப்பட்ட மாதிரிகளில் இதுபோன்ற ஆபத்தான கேள்விகளுக்குப் பதிலளிக்காத வகையில் மிகக் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் ஆன்த்ரோபிக் வலியுறுத்தியுள்ளது. எனினும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொழில்நுட்ப வல்லுநா்கள் மத்தியில் தற்போது வலுப்பெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






