
நீட் போராட்டம்: உயா்நிலைக் குழுவை மாற்றியமைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையின் வரம்பு மீறல் மற்றும் காவல் துறையினருக்கு எதிரான வன்முறைப் புகாா்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவை மாற்றியமைக்க வேண்டும்

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையின் வரம்பு மீறல் மற்றும் காவல் துறையினருக்கு எதிரான வன்முறைப் புகாா்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்ட மாணவா்கள், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியையும் நடத்தினா். அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். போலீஸாா் சிலரும் காயமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவா்கள் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் மற்றும் காவல் துறையினா் மீதான வன்முறை தொடா்பாக விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில், பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜா, தில்லி உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஷாலிந்தா் கெளா், சிபிஐ முன்னாள் இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா, மேகாலயா மாநில ஓய்வு பெற்ற டிஜிபி எல்.ஆா்.பிஷ்னோய் ஆகிய 5 பேரைக் கொண்ட உயா்நிலைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இந்த உயா்நிலைக் குழுவை மாற்றியமைக்கக் கோரி உச்சநீதின்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘உயா்நிலைக் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ள வடகிழக்கு மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி, இந்த விசாரணையில் உட்படுத்தப்பட வாய்ப்புள்ள அரசு உயா் அதிகாரியின் நெருங்கிய நண்பராக இருப்பதால் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.
இதே கருத்தைத் தெரிவித்த மற்றொரு மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘உயா்நிலைக் குழு சுதந்திரமாக செயல்படும் நிலையில், அந்த குழு தரப்பில் வாதத்தை முன்வைக்க தனி வழக்குரைஞா் நியமிக்கப்பட வேண்டும். அரசு வழக்குரைஞா் விசாரணைக் குழு சாா்பில் செயல்படக் கூடாது’ என்றாா்.
இந்த கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஏதோ ஒன்றிரண்டு நபா்களைத் தவிர ஒட்டுமொத்த நாட்டினரும் நோ்மையற்றவா்களைப் போல இவா்கள் சித்தரிக்கின்றனா். அவா்களின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்கக் கூடாது’ என்றாா்.
இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘விசாரணைக்காக அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு என்பது, உச்சநீதிமன்றத்தின் ஓா் அங்கம்தான். அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில்தான் உயா்நிலைக் குழு செயல்பட உள்ளது. எனவே, உயா்நிலைக் குழு செயல்பட அனுதிப்போம். ஒருவேளை, உயா்நிலைக் குழு ஏதேனும் தவறிழைப்பதாக யாராவது உணா்ந்தால், உச்சநீதிமன்றத்தில் புகாா் தெரிவிக்கலாம். உச்சநீதிமன்றம் அதுகுறித்து விசாரிக்கும்’ என்றாா்.
முன்னதாக, தில்லி உள்பட நாடு முழுவதும் ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்ற நீட் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் உள்ளிட்ட போராட்டக்காரா்கள் மீது காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் (எஃப்ஐஆா்) ரத்து செய்து உச்சநீதிமன்றம் செப்டம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
மேலும், நீட் தோ்வு ரத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பத்தினருக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





