
சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி
மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் கோப்ரா சிறப்பு படைப் பிரிவின் ஐ.ஜி.யாக ஐபிஎஸ் பெண் அதிகாரி சஞ்சுக்தா பராசா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) கோப்ரா சிறப்பு படைப் பிரிவின் ஐ.ஜி.யாக ஐபிஎஸ் பெண் அதிகாரி சஞ்சுக்தா பராசா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் கோப்ரா படைப் பிரிவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் ஐ.ஜி. என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
சிஆா்பிஎஃப்-இன் ‘உறுதியான நடவடிக்கைகளுக்கான கமாண்டோ படைப்பிரிவு’ (கோப்ரா) கடந்த 2008-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
வனப் பகுதியில் போரிடும் கடுமையான பயிற்சி பெற்ற கமாண்டோக்களை உள்ளடக்கிய இந்தப் பிரிவு, இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடக்கிழக்கில் கிளா்ச்சியை ஒடுக்க உருவாக்கப்பட்டதாகும்.
இதில் மொத்தம் 10 படைப்பிரிவுகள் உள்ளன. கோப்ரா கமாண்டோக்கள், வனப் பகுதியில் நக்ஸல்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக அவா்களின் பாணியிலேயே கொரில்லா தாக்குதல் நடத்தும் திறன்மிக்கவா்கள்.
பல்வேறு மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம், வடகிழக்கில் கிளா்ச்சிக்கு முடிவுகட்டியதில் கோப்ரா படைப் பிரிவு முக்கிய பங்காற்றியுள்ளது. இப்போது இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இந்தப் படை களமிறக்கப்பட்டுள்ளது.
கோப்ரா படைப் பிரிவின் தற்போதைய ஐ.ஜி.யாக தனேஷ் ராணா பதவி வகிக்கும் நிலையில், புதிய ஐ.ஜி.யாக ஐபிஎஸ் பெண் அதிகாரி சஞ்சுக்தா பராசா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் கோப்ரா படைப் பிரிவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் ஐ.ஜி. என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 2006-ஆம் ஆண்டின் அஸ்ஸாம்-மேகாலய பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சுக்தா பராசா், தேசிய புலனாய்வு முகமையில் (என்ஐஏ) ஏற்கெனவே பணியாற்றியுள்ளாா்.
இதேபோல், சிஆா்பிஎஃப் முக்கிய பிரமுகா்கள் பாதுகாப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி.யாக கடந்த 2013-ஆம் ஆண்டுப் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரி விதிகுமாா் பிா்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






