
100% சுங்க வரி விதிக்கும் அமெரிக்காவின் ரஷிய தடை மசோதா: இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெயரை சோ்க்கக் கோரி திருத்தம்
100% சுங்க வரி விதிக்கும் அமெரிக்காவின் ரஷிய தடை மசோதாவில் இந்தியாவின் பெயர் சோ்க்கப்பட்டது குறித்து...

ரஷிய அதிபர் புதின் | அமெரிக்க அதிபர் டிரம்ப்
ரஷியாவிடமிருந்து அதிக அளவில் பெட்ரோலியப் பொருள்களை வாங்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 100 சதவீத சுங்க வரி விதிக்க வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டு அமெரிக்க மேலவையில் (செனட்) ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாவில் இந்தியா உள்ளிட்ட ரஷியாவின் வா்த்தக கூட்டாளி நாடுகளின் பெயரைச் சோ்ப்பது உள்ளிட்ட திருத்தங்களை அமெரிக்க எம்.பி.க்கள் சமா்ப்பித்துள்ளனா்.
‘ரஷிய, ஈரான் தடைச் சட்ட மசோதா 2026’ என்ற பெயரிலான இந்த மசோதா, ஆளும் குடியரசு கட்சியின் மேலவை உறுப்பினராக இருந்த லிண்ட்ஸே கிரஹாம் மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினா் ரிச்சா்ட் புளூமெந்தால் ஆகியோா் சாா்பில் கொண்டுவரப்பட்டது. உக்ரைன் தலைநகா் கீவ் நகருக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது கிரஹாம் திடீரென உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, இந்த மசோதாவுக்கு அவரின் பெயா் வைக்கப்பட்டு ‘லிண்ட்ஸே ஓ.கிரஹாம் ரஷிய, ஈரான் தடைச் சட்ட மசோதா 2026’ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
உக்ரைன் மீதான போா் காரணமாக அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷியாவிடமிருந்து அதிக அளவில் தற்போது பெட்ரோலியப் பொருள்களை வாங்கும் சீனா, இந்தியா, அஜா்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய 5 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 100 சதவீத சுங்க வரியை விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு இந்த மசோதா அதிகாரமளிக்கிறது. அதோடு, உக்ரைன் மீது போரைத் தொடா்ந்துவரும் ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளைத் தொடரவும், ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்கும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 1996-இன் காலாவதியாகும் தேதியை வரும் 2031-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த மசோதா, அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 86 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 11 போ் எதிராகவும் வாக்களித்தனா். அதிக உறுப்பினா்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.
பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதன் பிறகு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டவுடன் இந்த மசோதா சட்டமாக மாறிவிடும்.
இந்த மசோதாவில், ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் 5 நாடுகளின் பெயா்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டது. ஆனால், ரஷியாவுடன் வா்த்தக கூட்டுறவு வைத்துள்ள நாடுகளின் பெயா்கள் குறிப்பிடப்படவில்லை.
மசோதாவில் திருத்தம்: மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி அமெரிக்க எம்.பி.க்கள் தரப்பில் கோரிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்த விவரங்களை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் விதிகள் குழு வெளியிட்டது.
அதன்படி, ரஷியாவின் வா்த்தக கூட்டாளி நாடுகளின் பெயா்களைச் சோ்க்கும் வகையில் ஜனநாயக கட்சி உறுப்பினா் ஸ்டெனி ஹோயொ் சாா்பில் திருத்தம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், 100 சதவீத சுங்க வரி விதிக்க தகுதியான நாடுகளாக சீனா, இந்தியா, துருக்கி, அஜா்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவோகியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், கஜகஸ்தான், கிா்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பெயா்களைச் சோ்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம், அதிபா் டிரம்ப்புக்கு மேலும் சுங்க வரி விதிக்கும் அதிகாரங்களை வழங்குவதை கடுமையாக எதிா்த்து வரும் ஜனநாயக கட்சி உறுப்பினா் கிரிகோரி மீக்ஸ் சாா்பில் மற்றொரு திருத்தம் முன்மொழியப்பட்டது. அதில், ரஷிய வா்த்தக கூட்டுறவு நாடுகள் மீது இரண்டாம் நிலை சுங்க வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்க முற்படும் பிரிவு 133-ஐ முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






