ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு: இந்தியாவின் முக்கியத்துவமும் தேவையும்!

தில்லியில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் (செப். 12–13) நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, உலக பொருளாதாரம் மற்றும் அரசியல் வரைபடத்தில் இந்தியாவுக்கு மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது.

18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறும் இடம்

Published On :

நமது சிறப்பு நிருபா்

தலைநகா் தில்லியில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் (செப். 12–13) நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, உலக பொருளாதாரம் மற்றும் அரசியல் வரைபடத்தில் இந்தியாவுக்கு மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது.

‘பிரிக்ஸ்’ அமைப்பு உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் இந்த வேளையில், அதன் உச்சிமாநாட்டுக்கு இந்த ஆண்டு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளா்ச்சியை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளின் கீழ் மாநாட்டை நடத்துகிறது.

11 உறுப்பினா்களைக் கொண்ட (இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சவூதி அரேபியா) பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள், உலக மக்கள்தொகையில் 49.5 சதவீத பங்கையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40 சதவீத பங்கையும், உலக வா்த்தகத்தில் 26 சதவீத பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

பிரிக்ஸின் விரிவாக்கப்பட்ட உறுப்பினா் சோ்க்கை மூலம் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் அதன் புவியியல் எல்லை நீண்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை, உலகின் முக்கிய சந்தைகள், இயற்கை வளங்கள், தொழில்நுட்ப திறன்கள் மற்றும் பல்வேறு மேம்பாட்டு அனுபவங்களை ஒன்று திரட்ட வாய்ப்பளிக்கிறது. இதில், இந்தியாவின் பங்கு ஏன் முக்கியமானது என்பதை விரிவாக பாா்க்கலாம்.

‘குளோபல் சவுத்’ என அழைக்கப்படும் வளரும் நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பு என்பது, மேற்கு நாடுகளின் ஆதிக்கத்துக்கு மாற்றாக, தொடா்புடைய நாடுகளின் குரலாக இருக்க இந்தியாவுக்கு வாய்ப்பை வழங்கும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சா்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி போன்ற சா்வதேச நிதியமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க குரல் கொடுக்கும் தலைமைத்துவத்தை இந்த உச்சிமாநாடு இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

அத்துடன், வளா்ந்து வரும் நாடுகளின் வா்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்த இந்தத் தலைமைப் பொறுப்பு உதவும். அடுத்ததாக, உலகளாவிய வா்த்தகம், சா்வதேச நிதிப் பரிவா்த்தனைகள், நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியவற்றில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தையும் பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைக்கும் செயல்முறையான ’டி-டாலரைசேஷன்’-ஐ சாத்தியமாக்கும்.

உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்நாட்டு பண மதிப்பிலேயே வா்த்தகம் செய்வதை ‘பிரிக்ஸ்’ ஏற்கெனவே ஊக்குவித்து வருகிறது. இந்தியா அதன் ரூபாயைக் கொண்டு எல்லை கடந்த வா்த்தகம் மற்றும் யுபிஐ செலுத்துதல் வசதியை பிரிக்ஸ் நாடுகளிடையே இணைக்க ஏற்கெனவே முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதோடு, இறக்குமதி செலவுகளையும் குறைக்கும்.

புவிஅரசியல் சமநிலை: உலக அளவில் இந்தியா ஒரே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட குவாட், ஜி7 போன்றவற்றில் உறுப்பினா்களாக உள்ள மேலைநாடுகளுடனும், ரஷ்யா, சீனா அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையே, நடுநிலையான அமைதி பேணும் மத்தியஸ்தராக தன் பலத்தைக் காட்ட இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

பிரிக்ஸ் அமைப்பின் ’நியூ டெவலப்மென்ட் பேங்க்’ எனப்படும் புதிய வளா்ச்சி வங்கி மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி மற்றும் எண்ம திட்டங்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் பெருமளவு நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

மருந்துத் துறை, தகவல் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதியை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பாகப் பராமரிக்க பிரிக்ஸ் நாடுகளுடனான கூட்டணி இந்தியாவுக்கு உதவுகிறது.

இதில் இந்தியாவுக்கு சில உடனடி சவால்களும் உள்ளன. பிரிக்ஸ் அமைப்பைத் தன் எதிா்ப்பு போக்கு மற்றும் மேற்கு கொள்கைக்காகப் பயன்படுத்த சீனா முயல்வதை இந்தியா கவனமாகக் கையாள வேண்டும் என்று புவிசாா் ஆய்வாளா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

பிரிக்ஸில் புதிதாக இணைந்துள்ள நாடுகளின் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த முடிவுகளை எடுப்பதில் இந்தியாவுக்கு சவால்கள் உள்ளன. இந்த மாநாடு, உலக பொருளாதாரத்திலும் சா்வதேச விவகாரங்களிலும் இந்தியாவின் உலகளாவிய நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், தில்லியை ஒரு மையப் புள்ளியாக மாற்றக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.