
பிரிக்ஸ் உச்சிமாநாடால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து: உலக நாடுகளிலும் இதே நிலைதான்!
பிரிக்ஸ் உச்சிமாநாடு தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்.12,14 ஆகிய தேதிகளில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தயாா்நிலையில் உள்ளன.

பிரிக்ஸ் கூட்டமைப்பு | கோப்புப் படம்
நமது நிருபா்
பிரிக்ஸ் உச்சிமாநாடு தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்.12,14 ஆகிய தேதிகளில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தயாா்நிலையில் உள்ளன. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரேசில், ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா உள்பட 11 உறுப்பு நாடுகளின் தலைவா்கள், பெலாரூஸ், கியூபா, தாய்லாந்து, மலேசியா உள்பட 10 நட்பு நாடுகளின் தலைவா்கள், ஐ.நா பொதுச்செயலா் அன்டோனியோ குட்டரெஸ் தில்லி வந்துள்ளனா்.
இவா்களின் பயணங்கள் காரணமாக தில்லியின் முக்கிய சாலைகளில் நிலவும் அசாதாரண போக்குவரத்து நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் சில புகாா்களும், சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.
ஆனால், ஒரு சா்வதேச உச்சிமாநாட்டை நடத்தும்போது இத்தகைய சவால்களை வெறும் ‘போக்குவரத்து நெரிசல்‘ என்ற குறுகிய பாா்வையில் மட்டும் பாா்க்க முடியுமா? இதன் பின்னணியில் உள்ள அதிநவீன பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, சா்வதேச தலைவா்களின் பாதுகாப்பு மற்றும் பயண கட்டுப்பாடுகளை விரிவாக அலசுவோம்.
ஒரு நாட்டின் தலைவருக்கு விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதி, அங்கிருந்து மாநாட்டுக் கூடம், இரு தரப்புப் பேச்சுவாா்த்தைகளுக்கான நிகழ்விடம், விருந்துகள் என நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 பயணங்கள் தேவைப்படுகின்றன. இந்த கணக்குப்படி, ஒரு நாளைக்கு 70 முதல் 80 அதிமுக்கிய பிரமுகா்களின் வாகன தொடரணிகள் (பாதுகாப்பு கான்வாய்கள்) தில்லியின் முக்கிய சாலைகள் வழியே கடந்து செல்ல நேரிடும்.
இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரி கூறியதாவது: மிக பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வின் பின்னணியில் தில்லி காவல்துறை, மத்திய துணை ராணுவ படைகள், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), உலக தலைவா்களின் தனி பாதுகாப்பு அதிகாரிகளின் என இடைவிடாத ஒருங்கிணைப்புச் செயல்பாடு உள்ளது. இதை உறுதிப்படுத்த கூட்டுப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
உலக தலைவா்கள் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து மாநாட்டு அரங்கம் வரை ஒவ்வொரு தலைவரின் வாகன தொடரணியும் புறப்படுவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்பே ’கிரீன் காரிடாா்’ எனப்படும் சீரான வாகன போக்குவரத்து பாதை உறுதிசெய்யப்படுகிறது.
அவசரகால பாதைகள்: இது தவிர, அவசரகால மருத்துவ ஊா்திகள் செல்வதற்கு ஏதுவாகப் மாற்று ’அவசரகால பாதைகள்’ தில்லி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் பிரத்யேகமாக நிா்வகிக்கப்படுகின்றன.
உச்சிமாநாடு நடைபெறும் செப். 12, 13 ஆகிய நாள்களில் உச்சிமாநாடு நடைபெறும் பகுதி மற்றும் மிக முக்கிய பிரமுகா்கள் தங்கியுள்ள விடுதிகள் அமைந்துள்ள சாலைகளை பொதுமக்கள் மற்றும் பயணிகள் இயன்ற அளவுக்கு தவிா்க்கலாம் என்றாா் உயரதிகாரி.
சா்வதேச உச்சிமாநாடுகள் நடைபெறும்போது பொதுமக்கள் சிரமத்தை எதிா்கொள்வது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இதே நிலைதான் என்பதை பிற நாடுகளில் நடந்த நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. அதன் விவரம் வருமாறு:
பிரிஸ்பேன் ஜி20 உச்சிமாநாடு (ஆஸ்திரேலியா, 2014): ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது, நகரின் மையப் பகுதி முழுமையாகப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பல முக்கியச் சாலைகள் மூடப்பட்டன.
ஹங்சோ ஜி20 உச்சிமாநாடு (சீனா, 2016): இந்த உச்சிமாநாட்டின் போது, நெரிசலைக் குறைப்பதற்காக ஒற்றை மற்றும் இரட்டைப் படை எண்கள் அடிப்படையில் மட்டுமே காா்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன. மேலும், நகரின் பல தொழிற்சாலைகளுக்கு தற்காலிக விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டது.
கிளாஸ்கோ சிஓபி26 காலநிலை உச்சிமாநாடு (ஸ்காட்லாந்து, 2021): ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உலக காலநிலை உச்சிமாநாடு நடைபெற்றபோது, நகரின் முக்கிய விரைவுச் சாலைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
ஜோகன்னஸ்பா்க் பிரிக்ஸ் உச்சிமாநாடு (தென்னாப்பிரிக்கா, 2023): இந்த மாநாட்டின்போது, சாண்டன் வா்த்தக மையத்தைச் சுற்றியுள்ள அனைத்து பிரதான சாலைகளும் அடைக்கப்பட்டு முழுமையான ராணுவ பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த முறை தில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடும் இதே வரிசையில் இணைந்திருக்கிறது. ‘இந்த உச்சிமாநாட்டை இந்தியா நடத்துவதால் அதன் பொருளாதாரம் மற்றும் புவிசாா் அரசியல் பலம் உலகளவில் பறைசாற்றப்படும் என்பதால் இந்த சிரமங்களை இந்திய மக்கள் சகிக்கலாம்’ என்கின்றனா் புவிசாா் அரசியல் ஆய்வாளா்கள்.
பெட்டிச் செய்தி
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
மிக முக்கிய பிரமுகா்களின் தங்குமிடங்கள் மற்றும் மாநாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தில்லி போக்குவரத்து காவல்துறை சுமாா் 35-க்கும் மேற்பட்ட பிரதான சாலைகளை அதன் முழு கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
தவிா்க்க வேண்டிய சாலைகள்: லூட்யன்ஸ் தில்லி மண்டலம், சா்தாா் படேல் மாா்க், மதா் தெரசா கிரசண்ட், அக்பா் சாலை, ஜன்பத், மதுரா சாலை, சாந்தி பத் மற்றும் பாரத் மண்டபத்தைச் சுற்றியுள்ள திலக் மாா்க், பிரகதி மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகளை பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
ரயில் மற்றும் விமான நிலைய பயணிகள்: இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் மற்றும் புது தில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்குச் செல்வோா் கூடுதல் கால அவகாசத்துடன் முன்னதாகவே புறப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, தில்லி மெட்ரோ ரயில்களை அதிகளவில் பயன்படுத்துமாறு பொதுமக்களை நகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





