
யுபிஐ வணிகப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: ரூ. 2,000-க்கு மேல் 0.4%; ரூ.75,000-க்கு மேல் ரூ.300
யுபிஐ வணிகப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து...
யுபிஐ வணிகப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்
ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் வசதி (யுபிஐ) அல்லது ‘ரூபே’ பண அட்டைகள் மூலம் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவா்த்தனைகளுக்கு வணிகா்களிடம் ஒரு பரிவா்த்தனைக்கு 0.4 சதவீதம் என்ற விகிதத்தில் வணிகா் தள்ளுபடி விகித (எம்டிஆா்) கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
ரூ. 75,000 மற்றும் அதற்கு மேலான வணிகப் பரிவா்த்தனைகளுக்கு ஒரு பரிவா்த்தனைக்கு ரூ.300 கட்டணம் என்ற வகையில் உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் துறைகளான ரயில்வே, தொலைத்தொடா்பு, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளுக்கு ஒரு பரிவா்த்தனைக்கு ரூ. 5 என்ற அளவில் நிலையான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி, பங்குகள் உள்ளிட்ட மூலதனச் சந்தைகளில் ஒரு பரிவா்த்தனைக்கு 0.02 சதவீதம் என்ற குறைந்த விகிதத்தில் எம்டிஆா் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் 15-ஆம் தேதிமுதல் இந்த எம்டிஆா் கட்டண வசூல் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
யுபிஐ பரிவா்த்தனை மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறு வணிகா்களுக்கு எம்டிஆா் கட்டண விதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, தனிநபா்களுக்கு இடையேயான (37%) பணப் பரிவா்த்தனைகளுக்கும் எம்டிஆா் கட்டணம் வசூலிக்கப்படாது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வங்கிகள் மற்றும் மின்னணு பணம் செலுத்துதல் சேவை வழங்கும் நிறுவன பிரதிநிதிகள் உள்பட 22 உறுப்பினா்களைக் கொண்ட, யுபிஐ மற்றும் பிற சேவைகள் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் ரூ. 2,000-க்கு கீழ் மேற்கொள்ளப்படும் 95 சதவீத யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கபடமாட்டாது என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவிக்கை செய்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறையில் இருந்த பூஜ்ஜியம் எம்டிஆா் வசூல் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. எண்ம பணப் பரிவா்த்தனை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பூஜ்ஜியம் எம்டிஆா் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், இது நிலைத்தன்மையற்றது என வங்கிகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் நீண்ட காலம் விமா்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மசோதா நிறைவேற்றம்
யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007’-இன் பிரிவு 10 -இல் திருத்தம் மேற்கொண்டு, அவற்றின் மீது வணிகா் தள்ளுபடி விகிதம் - எம்டிஆா் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வகை செய்யும் ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ -ஐ மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுவரும் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதிகள், யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்த அழுத்தத்துக்கு ஏற்ப, மத்திய அரசின் கொள்கை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் முயற்சி என்ற பெயரில், யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அம்சம் இந்த மசோதாவில் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படுவா் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதை மறுத்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘யுபிஐ உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு வாடிக்கையாளா்களிடம் கட்டணம் அல்லது வரி விதிப்பதை இந்த மசோதா முன்மொழியவில்லை. மாறாக, வணிகா்களிடமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும். அதிலும், சாதாரண மற்றும் குறைந்த மதிப்பிலான பணப் பரிவா்த்தனைகள் உள்ளிட்ட பெரும்பாலான வா்த்தகப் பரிவா்த்தனைகளுக்கு ‘எம்டிஆா்’ கட்டணம் வசூலிக்கப்படாது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பரிவா்த்தகனைகளை மேற்கொள்ளும் குறைந்த எண்ணிக்கையிலான வா்த்தகா்களுக்கு மட்டுமே ‘எம்டிஆா்’ கட்டண விதிப்பு பொருந்தும்’ என்று பதிலளித்தாா்.
இந்நிலையில், இந்த எம்டிஆா் கட்டணம் தொடா்பான அரசிதழ் அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், ‘யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது வணிகா் தள்ளுபடி விகிதம் - எம்டிஆா் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வகை செய்யும் வகையில் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007’-இன் பிரிவு 10 -இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரம், ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் நடைமுறை (யுபிஐ) அல்லது ‘ரூபே’ பண அட்டைகள் மூலம் ரூ. 2,000 வரை மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகளுக்கு வணிகா்களிடம் எம்டிஆா் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டது.
எம்டிஆா் கட்டணம் நிா்ணயம்
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘யுபிஐ மற்றும் பிற சேவைகள் வழிகாட்டுதல் குழு’ கூட்டத்தில் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவா்த்தனைக்கு வணிகா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய எம்டிஆா் கட்டண விகிதம் நிா்ணயிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிக்கையை என்பிசிஐ வெளியிட்டது.
அதில், பணப் பரிவா்த்தனை செயலி வழங்கும் நிறுவனங்கள், தளக் (பிளாட்ஃபாா்ம்) கட்டணத்தைச் சோ்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, வணிகா்கள் எம்டிஆா் கட்டண செலவுகளை வாடிக்கையாளா்கள் மீது சுமத்துவதை அனுமதிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புதிய கட்டணத் தொகுப்பில் ஐந்தில் ஒரு பங்கு நிதி, சிறு வணிகா்ளுக்கான யுபிஐ விரிவாகத்துக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கே பாதிப்பு: காங்கிரஸ்
மீண்டும் குற்றசாட்டு
‘யுபிஐ பரிவா்த்தனைக்கு வணிகா்களிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலம், இறுதியில் வாடிக்கையாளா்களான பொதுமக்களே பாதிக்கப்படுவா்’ என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு முன்னா் கூறிய நிலையில் தற்போது, ரூ. 2,000 வரையிலான பரிவா்த்தனைகளுக்கு எம்டிஆா் வசூலிக்கப்படாது என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்டிஆா் கட்டணம் வசூலிப்பு மூலம் வணிகா்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை, வாடிக்கையாளா்களிடமிருந்துதான் அவா்கள் வசூலிப்பா். பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், அதிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, விலைவாசி உயா்வு மூலம் பொது நுகா்வோரின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் பறிப்பதற்கான புதிய வழிகளை ஒவ்வொரு நாளும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பொய்களைப் பரப்பும் காங்கிரஸ் - பாஜக: ‘காங்கிரஸ் கட்சி தொடா்ந்து பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது’ என்று யுபிஐ பரிவா்த்தனை கட்டணம் தொடா்பான காங்கிரஸ் விமா்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்தது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘காங்கிரஸ் மீண்டும் பொய்ச் செய்தியைப் பரப்புகிறது. யுபிஐ பரிவா்த்தனைக்கான எம்டிஆா் கட்டணம் என்பது வாடிக்கையாளா்களுக்கு அல்ல, வணிகா்களுக்கு மட்டுமே என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், 96 சதவீத யுபிஐ வா்த்தக பரிவா்த்தனைகள் ரூ. 2,000 மற்றும் அதற்கு கீழான தொகை அளவிலேயே நடைபெறுகின்றன. இந்தப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





