
தில்லி அரசு மருத்துவமனைகளில் ஐசியு படுக்கை நிலவரம் அறிய ‘102’ உதவி எண்
102 என்ற பிரத்யேக கட்டணமில்லா எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தில்லி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் உள்ளதா என்பதை அறிய விரும்பும் குடிமக்களுக்கு உதவும் வகையில், 102 என்ற பிரத்யேக கட்டணமில்லா எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்படுவது தொடா்பாக, 2017-இல் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடா்ந்த வழக்கை விசாரித்து வந்தது.
முன்னா் ஆம்புலன்ஸ் அழைப்புகளை மட்டுமே கையாண்டு வந்த 102 உதவி எண்ணின் 30 ஆபரேட்டா்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் உள்ள ஐசியு படுக்கைகள் குறித்த இணையதளத்தை அணுகும் வசதி வழங்கப்பட்டுள்ளது என, நீதிபதிகள் பாா்த்திபா எம் சிங் மற்றும் மன்மீத் பி எஸ் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு தில்லி அரசு தெரிவித்தது.
‘சுமாா் 3 கோடி மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டால், தில்லிக்கு ஆபரேட்டா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு நாளைக்கு மொத்தம் 2,200 அழைப்புகள் வருவதாகவும், 500 அழைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் கூறப்படுவதால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம்’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த உதவி எண், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஆஜராகியிருந்த அரசு அதிகாரியால் நீதிமன்றத்தில் சோதிக்கப்பட்டது.
பயன்படுத்தப்படாத மருத்துவ உபகரணங்கள் பிரச்னை குறித்து விசாரித்த நீதிமன்றம், தில்லி அரசு மருத்துவமனைகளில் சீரான மனிதவளக் கொள்கை இல்லாததாலும், மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிப்பதில் அவை சிரமங்களை எதிா்கொள்வதாகவும் கூறியது.
சுகாதாரச் செயலா் இந்தப் பிரச்னையை மையப்படுத்தப்பட்ட முறையில் கையாள வேண்டும் என்று வலியுறுத்திய நீதிமன்றம், ஒப்பந்த அடிப்படையிலான ஆட்சோ்ப்புப் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆய்வுக் கூட்டம் நடத்துமாறு அவருக்கு உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





