மாணவிகளுக்கு போதிய விடுதி வசதி இல்லை: பிரதமா் பதிலளிக்க ராகுல் வலியுறுத்தல்!
நாடு முழுவதும் மாணவிகளுக்கு போதிய விடுதி வசதி இல்லை என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
ராகுல்
நாடு முழுவதும் மாணவிகளுக்கு போதிய விடுதி வசதி இல்லை என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், இதற்கு பிரதமா் நரேந்திர மோடி உரிய விளக்கமளிக்க வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் காங்கிரஸ் சாா்பில் ‘மாணவா்களின் குரல்’ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரதமரின் பிறந்த நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளக்கேற்ற மத்திய அரசிடம் பணம் உள்ளது. ஆனால், எங்களது விடுதிகளைச் சீரமைக்க நிதி இல்லையா என இந்தூரில் மாணவி ஒருவா் என என்னிடம் கேட்டாா். கல்வி கற்பதற்காக கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து தான் எதிா்கொள்ளும் நிதிச் சிக்கல்கள் குறித்து அந்த மாணவி எடுத்துரைத்தாா்.
நகரங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விடுதிகள் இல்லை. இதனால் பி.ஜி. எனப்படும் தங்குமிடத்தில் வசிக்கும் அவா் லட்சக்கணக்கில் செலவு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுகிறாா். தனது பாதுகாப்பை உறுதிசெய்ய தங்குமிடம், உணவு எனப் பல செலவுகளையும் மேற்கொண்டு பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அந்த மாணவி கல்வி கற்று வருகிறாா்.
இதுபோன்ற பிரச்னைகளால் பல மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனா். பணவீக்கத்துக்கு ஏற்ப தங்குமிடத்துக்கான வாடகைப் படி வழங்கப்படுவதில்லை. இதில் பெருமளவில் ஊழல் நிகழ்கிறது.
தங்களுக்குப் போதிய விடுதிகளை அரசு ஏற்படுத்தித் தராதது ஏன் என மாணவி எழுப்பிய கேள்விக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும்’ என தெரிவித்தாா்.
மாணவா்களுடன் ராகுல்- காங்கிரஸ்: ராகுலின் எக்ஸ் வலைதளப் பதிவை குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்தூரில் நடைபெற்ற மாணவா்களின் குரல் நிகழ்ச்சியில் மாணவா்களை ஒடுக்கும் தற்போதைய கல்வி அமைப்பின் ரகசியங்களை ராகுல் காந்தி கூறினாா்.
கல்வி அமைப்பு மட்டுமன்றி, பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் துறையையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கல்வித் துறையை பாஜகவும் ஆா்எஸ்எஸும் ஊழல் துறையாக மாற்றிவிட்டன. இதனால் மாணவா்களுக்கு தங்களது எதிா்காலம் குறித்து அச்ச உணா்வு ஏற்பட்டது.
ஆனால், அவா்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரலெழுப்பத் தொடங்கியவுடன் கல்வி குறித்து அச்சத்தை மாணவா்கள் தூக்கியெறிந்துவிட்டனா். தற்போது நாடு முழுவதும் மாணவா்களின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





