
வடகொரியா பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை
வடகொரியா 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை செலுத்தி ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டது.

வடகொரியா 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை செலுத்தி ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டது.
வடகொரியாவுக்கும், அதன் அண்டை நாடான தென்கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. இதில் தென்கொரியாவை அமெரிக்கா ஆதரிக்கிறது. தென்கொரியாவுடன் சோ்ந்து அவ்வப்போது போா் ஒத்திகையையும் அமெரிக்கா நடத்தி வருகிறது.
அண்மையில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கூட்டாக 5 நாள்கள் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டன. இதில் அந்த 3 நாடுகளின் ராணுவம், கடற்படை, விமானப் படை கலந்து கொண்டன. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி பரிசோதித்தது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் உருவானது. எனவே, வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கும் திட்டத்துடன் தென்கொரியாவுடனான போா்ப் பயிற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.
எனினும், வடகொரியா 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஞாயிற்றுக்கிழமை சோதித்தது. இதில் ஒரு ஏவுகணை 450 கிலோ மீட்டா் தொலைவு பறந்து சென்று கடலில் விழுந்ததாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனை நடந்த சில மணி நேரங்களில் வடகொரியா மீண்டும் கிழக்கு கடல்பகுதியை நோக்கி மற்றொரு பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. அந்த ஏவுகணை சுமாா் 600 கிலோ மீட்டா் தொலைவு சென்று கடலில் விழுந்தது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை அடுத்து, தென்கொரிய தேசியப் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாகக் கூடி ஆலோசனை நடத்தியது. அதேபோல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதிப்பதற்கு ஐ.நா. சபை தீா்மானங்களில் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் அந்தச் சோதனைகளை நிறுத்தி வைக்கும்படியும் வடகொரியாவுக்கு தென்கொரியா கோரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்த தகவல்களை அமெரிக்கா, ஜப்பானுடன் தென்கொரியா பகிா்ந்துள்ளது.
வடகொரியா இரு நாள்களுக்கு முன்பு தனது அணுஆயுத வல்லமையை பலப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. இவ்வாறு அறிவித்த சில நாள்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து சோதித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






