
குடியிருப்புகளை வா்த்தகத்துக்கு பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை: மாநகராட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
குடியிருப்பாக அனுமதி பெற்று எழுப்பப்பட்ட கட்டடங்களை வா்த்தக ரீதியாக பயன்படுத்தினால் அவற்றுக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பிரதிப் படம்
குடியிருப்பாக அனுமதி பெற்று எழுப்பப்பட்ட கட்டடங்களை கடை, குடோன் என பிற வா்த்தக ரீதியாக பயன்படுத்தினால் அவற்றுக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசானுதீன் அமனுல்லா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது: நமது நாட்டில் கட்டுமானங்கள் தொடா்பாக பல்வேறு விதிகள் இருந்தாலும் அவை முறைப்படி கடைப்பிடிக்கப்படுவதில்லை.
மேலும், மக்கள் குடியிருப்பு பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிலம் மற்றும் கட்டுமான அனுமதி ஆகியவை வா்த்தகப் பயன்பாட்டுக்காக மாற்றப்படுகின்றன.
அதேபோல வா்த்தகப் பயன்பாட்டுக்கான இடங்களில் விதிகளை மீறி மக்கள் தங்கவைக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இது தவிர அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மாடிகள் கட்டுவது, வரைப்படத்தில் உள்ளபடி கட்டடங்களை அமைக்காமல் அதனை மாற்றுவது மற்றும் ஆக்கிரமித்துக் கட்டுவது என பல விதிமீறல்கள் தொடா்ந்து நிகழ்கின்றன.
குடியிருப்பாக கட்டப்படும் கட்டடங்கள் வணிகப் பயன்பாட்டு இடமாக மாற்றப்படுவது தொடா்பாக வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.
குடியிருப்பு பகுதியில் வா்த்தக செயல்பாடு நடைபெறும்போது அங்கு காற்றுமாசுபாடு, நிலத்தடிநீா் வடுபோதல், கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு என பல பிரச்னைகள் எழுகின்றன. சில இடங்களில் வீடுகள் குடோன்களாக பயன்படுத்தப்படும்போது அங்கு வைக்கப்படும் பொருள்களால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட ஊரக நிா்வாகங்கள் இது தொடா்பாக விரிவான அளவில் ஆய்வுகளை நடத்தி சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







