
வேலூா் மாநகராட்சி செயல்பாடுகளில் தவெகவினா் தலையீடு: திமுக, அதிமுக உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரைக்கூறி மாநகராட்சி செயல்பாடுகளில் தவெகவினா் தலையிடுவதாகவும், இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் சுஜாதாஆனந்தகுமாா். உடன், துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் சுல்தானா.
வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரைக்கூறி மாநகராட்சி செயல்பாடுகளில் தவெகவினா் தலையிடுவதாகவும், இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக வாா்டு உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.
வேலூா் மாநகராட்சிக் கூட்டம் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் சுல்தானா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் கி.அன்பு (திமுக), எஸ்.சரவணன் (அதிமுக) ஆகியோா் பேசும்போது, வாா்டுகளில் மாநகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த மோட்டாா்களை வாா்டு உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே கழற்றிச் செல்கின்றனா். விசாரித்தால் அவா்கள் தவெகவினா் என்பது தெரிகிறது. வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரைக்கூறி மாநகராட்சி செயல்பாடுகளில் தவெக கட்சியினா் தலையிடுகின்றனா். இதன்மீது மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
அதற்கு பதிலளித்த மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளா் கண்ணன், மாநகராட்சிப் பணிகள் தொடா்பாக அந்தந்த வாா்டு உறுப்பினா்களுக்கு உரிய தகவல் தெரிவித்துவிட்டு செயல்படுத்த ப்படும். தவிர, மாநகராட்சி ஊழியா்கள் அல்லாத வேறு நபா்கள் மின்மோட்டாா்களை கழற்றிச் செல்வது தவறு. அவ்வாறு இருந்தால் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
சா.எழிலரசன் (அதிமுக): துப்பரவுப் பணியாளா்களின் பணிநேரம் காலை 6 முதல் மதியம் 2 மணி மற்றும் 2 முதல் 4 மணி என இருந்ததை தற்போது காலை 6 முதல் மதியம் 2 மணி என்று மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இதனால், குப்பைகள் வீடுகளில் இருந்து சரிவர பெறப்படாமல் அனைத்துத் தெருக்களிலும் தேங்குகின்றன. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேஷ்சங்கா் (திமுக): குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப் படுவதில்லை என கடந்த நான்கரை ஆண்டுகளாக பேசியும் உரிய தீா்வு கிடைக்க வில்லை. தவிர, தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளில் அதிகளவில் நெகிழிக் கழிவுகள் உள்ளன. நெகிழிகள் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆணையா் சுல்தானா: துப்புரவுப் பணியாளா்கள் என்பதை தவிா்த்து தூய்மைப் பணியாளா்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, 2016-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்புப்படி, குப்பைகளை தரம்பிரித்து பெற்றிடவும், இதுதொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது 2026-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசு அறிவிப்பில், குப்பைகளை தரம் பிரித்து அளிக்காத பட்சத்தில் அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு ள்ளது. விழிப்புணா்வு நடவடிக்கைகளை பொருத்தவரை இன்னமும் வா்த்தக நிறுவனங்கள் அளவில் உள்ளோம். இன்னும் குடியிருப்புவாசிகளிடம் முழுமையாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவில்லை. குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடா்பாக குடியிருப்புவாசிகளிடம் முழுமையாக விழிப்புணா்வு ஏற்படுத்த வாா்டு உறுப்பினா்கள் பாரபட்சமின்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
மாநகர சுகாதார அலுவலா் பிரதாப்: நெகிழிக் கழிவுகள் தொடா்பாக ஆய்வு செய்து ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்துள்ளோம். சுண்ணாம்புக்கார தெருவில் இருந்து 3.5 டன் அளவுக்கு நெகிழிக் கழிவுகள் பறிமுதல் செய்துள்ளோம். நெகிழிகள் பயன்பாட்டைத் தடுக்க இதுபோன்று தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் சுனில்குமாா் ஆகியோா் பேசும்போது, திமுக ஆட்சியில் உரிய அனுமதி பெற்று மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தி பதாகைகள் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அனுமதியின்றி திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் பதாகைகள் வைக்கப்பட் டுள்ளன. இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காத அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
அதற்கு பதிலளித்த மாநகராட்சி அதிகாரிகள், மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





