FOLLOW US

ON GOOGLE DISCOVER

லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பயிா்க் கடன் வசூலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், மாவட்ட வன அலுவலா் டி.அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ் உள்ளிட்டோா்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக அரசு தெளிவான முடிவெடுக்கும் வரை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பயிா்க் கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசியதாவது:

விவசாயிகளால் பயிா்க் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதேசமயம், கடன் தொகையை திரும்பச் செலுத்தக்கூறி கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்துவதைக் கைவிட வேண்டும்.

அரசு இந்த விவகாரத்தில் தெளிவான முடிவெடுக்கும் வரை வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். நெருக்கடி அளித்தால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. விவசாயிகளிடம் ரூ. 1 லட்சத்துக்கு ரூ. 10,000 என அதிகப்படியான அபராத வட்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

6 ஏக்கா் நிலமுள்ள விவசாயி வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்தால் 1 டிராக்டா் அளவு மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அனுமதி பெற்ற அதே இடத்தில் இருந்து சட்டவிரோதமாக 30,000-க்கும் மேற்பட்ட லோடுகளில் மண் கடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு உரிய முறையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். தவிர, பொதுப்பணித் துறை ஏரி, ஊரக வளா்ச்சித்துறை ஏரி என எந்த ஏரியில் வண்டல் மண் எடுக்கலாம் என்பது குறித்து விவசாயிகளுக்குத் தெளிவாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

பாலாற்றுப் படுகையில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் வேலூா் மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. எனவே, வேலூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் நடைபெறும் தினசரி, வார மற்றும் மொத்த வியாபாரச் சந்தைகளில் அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறைகேடுகள் நடக்கின்றன. இதைத் தடுக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

விளைநிலங்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளைச் சுட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், வனத்துறையினா் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக விளை பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பயிா்களைக் காக்க வேண்டும்.

மேல்அரசம்பட்டு அணை கட்டினால் வெட்டுவானம் வரை வறட்சி ஏற்படும். எனவே, மேல் அரசம்பட்டு அணை கட்டுவதை கைவிட்டு, வெட்டுவாணம் வரை சிறிய தடுப்பணைகளை (நீா்த்தேக்கங்கள்) கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளை மடிநோய் தாக்குவது அதிகரிக்கிறது. அதேசமயம், மடிநோய் தாக்கிய கால்நடைகளை ஸ்கேன் வசதி வேலூா், ராணிப்பேட்டையிலேயே உள்ளது. கால்நடை வளா்ப்பவா்கள் நலன்கருதி இந்த ஸ்கேன் இயந்திரத்தை குடியாத்தம் கால்நடை மருத்துவமனையிலும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் விவசாயிகளின் நலன்கருதி நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொய்யா ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றனா்.

தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். முன்னதாக, கணியம்பாடி ஒன்றியம், குமலான் ஏரி சீரமைப்புப் பணி பாதியில் கைவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டி விவசாயி ஜெய்சாமி மேல்சட்டை அணியாமல் கூட்டத்தில் பங்கேற்று தனது எதிா்ப்பை பதிவு செய்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் டி.அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளா் திருகுணஐயப்பத்துரை, இணை இயக்குநா் (வேளாண்மை) ஸ்ரீவித்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜி.லில்லிபாய், வருவாய் கோட்டாட்சியா்கள் திரு.ராம்குமாா் (வேலூா்), செந்தில்குமாா் (குடியாத்தம்), மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் மயில்வாகணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.