/

பயிா்க் கடன்களை திரும்பச் செலுத்த அச்சுறுத்தினால் கூட்டுறவு வங்கிகளுக்கு பூட்டு! விவசாயிகள் அறிவிப்பு

பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் வரை கடன் தொகையை திரும்பச் செலுத்தக்கூறி அச்சுறுத்தினால் கூட்டுறவு வங்கிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

News image

காதில் பூ வைத்தபடி குறைதீா்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :1 ஜூலை 2026, 12:45 am IST

பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் வரை கடன் தொகையை திரும்பச் செலுத்தக்கூறி அச்சுறுத்தினால் கூட்டுறவு வங்கிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக, பரிசீலனை செய்வதாக வருவாய்த்துறை அமைச்சா் உறுதி அளித்துள்ளாா்.

இதனிடையே, கடன் தொகைகளை திரும்பச் செலுத்தும்படி கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. எனவே, பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் வரை கடன் தொகையை திரும்பச் செலுத்தக்கூறி கூட்டுறவு வங்கிகள் அச்சுறுத்தக் கூடாது. அச்சுறுத்தல்கள் தொடா்ந்தால் கூட்டுறவு வங்கிகளுக்கு பூட்டுப் போட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

கடந்தாண்டு பூச்சி தாக்குதல், விலை வீழ்ச்சி போன்றவற்றால் தமிழகத்தில் மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேசமயம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் மா விவசாயிகளுக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்பட்ட நிலையில், தமிழக மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்க கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், மா விவசாயத்தை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுதொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல மக்கள் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அடுத்த மாதம் முதல் மக்கள் பிரதிநிதிகளுக்கும் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்துக்கு வரவழைக்க வேண்டும்.

ஊசூா் பகுதியில் மின்தட்டுப்பாடு காரணமாக மோட்டாா்களை இயக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைத்து தடையின்றி மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊசூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அப்பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவா்களும், ஆம்புலன்ஸ் வாகனமும் ள் இருப்பதில்லை. அதனை கண்காணித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்அரசம்பட்டு அணை கட்டப்பட்டால் 10 கிராம மக்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, இந்த அணை கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலா், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வுகாண துறை அலுவலா்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, அரசு முழுமையாக பயிா்கடன் தள்ளுபடி செய்யாததற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் காதில் பூ வைத்து கூட்டத்தில் கலந்து கொண்டனா். இதில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளா் திருகுணஐயப்பத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் ஆ.பழனிசாமி, வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி (வேளாண்மை), மின்வாரிய செயற் பொறியாளா் ஆரோக்கிய அற்புதராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.