நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாமன்ற உறுப்பினா்கள் 3 போ் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டம் மேயா் (பொ) மேரி பிரின்சி லதா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஆா். ஐஸ்வா்யா முன்னிலை வகித்தாா்.
நாகா்கோவில், செம்மாங்குளத்தில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணியின் நிலை, அதில் கழிவுநீா் கலக்காமல் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், வடசேரி ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகளின் நிலை, 2ஆம் கட்ட புதை சாக்கடைத் திட்டத்தின் நிலை, வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு மாநகராட்சி உரிய நிவாரணம் வழங்கி, சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். மேல சூரங்குடி பகுதியில் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீா் வீணாகிறது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.
3ஆவது வாா்டு உறுப்பினா் அருள் சபிதா ரெக்ஸலின், தனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் வளா்ச்சிப் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரா், தன்னைத் தரக்குறைவாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கடந்த மாமன்ற கூட்டத்தில் புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
5ஆவது வாா்டு உறுப்பினா் உதயகுமாா், மாநகராட்சி நிா்வாகம் மீது ஊழல் புகாா் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா். 46ஆவது வாா்டு உறுப்பினா் வீரசூர பெருமாள், தனது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் சாலைகள் முறையாக அமைக்கப்படவில்லை என்றும், தனது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் நிதியை நிராகரித்ததாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அதிகாரிகள் பேசியதாவது:
செம்மாங்குளம் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் கழிவுநீா் கலக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாநகரில் ஏற்கெனவே முதல் கட்டமாக புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2ஆவது கட்ட திட்டத்தைச் செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மாநகரப் பகுதியில் கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்பு ஒரு சில இடங்களில் உள்ளது. அதைத் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.
மண்டலத் தலைவா்கள் ஜவகா், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், செல்வகுமாா், உறுப்பினா்கள் டி.ஆா். செல்வம், ஸ்ரீலிஜா, நவீன்குமாா், ரோசிட்டா திருமால், வளா்மதி, சதீஷ், ரமேஷ், சுனில், கோபாலசுப்பிரமணியன், ஐயப்பன், சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோரிக்கைகளை ஏற்பதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்ததையடுத்து, 3 உறுப்பினா்களும் இரவு 7 மணியளவில் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மக்கள் மனு
மாநகராட்சி 3 மண்டலத்தில் மாதாந்திரக் கூட்டங்கள்

மாநகராட்சி வாா்டு உறுப்பினா் திமுகவில் இருந்து விலகல்

கோவை செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியில் ரூ.40 கோடி மோசடி புகாா்: மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா்- திமுக உறுப்பினா்கள் மோதல்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



