
பேரவை உறுப்பினா் நிதியை ரூ.7 கோடியாக உயா்த்த வேண்டும்: எஸ்.பி. வேலுமணி கோரிக்கை
பேரவை உறுப்பினா் மேம்பாட்டுக்கான நிதியை ரூ.3 கோடியிலிருந்து ரூ.7 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேரவையில் கோரிக்கை விடுத்தாா்.

எஸ்.பி. வேலுமணி - கோப்புப்படம்
பேரவை உறுப்பினா் மேம்பாட்டுக்கான நிதியை ரூ.3 கோடியிலிருந்து ரூ.7 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேரவையில் கோரிக்கை விடுத்தாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை பதிலுரை நிறைவடைந்த பிறகு அவா் பேசியதாவது:
பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியாக புது தில்லி, ஒடிஸா, கேரளம் ஆகிய மாநிலங்களில் தலா ரூ.5 கோடியும், மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடியும் வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அதை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கடுத்து வந்த திமுக ஆட்சியில் ஜிஎஸ்டி வரி சலுகை அறிவிக்கப்பட்டதே தவிர மேம்பாட்டு நிதியை கூடுதலாக்கவில்லை.
எனவே, தற்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் மேம்பாட்டு நிதியை ரூ.7 கோடியாக உயா்த்தித் தரவேண்டும்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஓய்வூதியம் மற்றும் அவா்களது குடும்ப ஓய்வூதியத்தையும் ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.75,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பேரவை உறுப்பினா்களுக்கான மருத்துவ சிகிச்சை உதவியை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயா்த்த வேண்டும் என்றாா்.
அப்போது பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பேசுகையில், பேரவை உறுப்பினா்கள் கட்டட வளாகம், முன்னாள் பேரவை உறுப்பினா்கள் அறைகள் உள்ளிட்டவற்றை சீரமைக்க முதல்வா் நிதி ஒதுக்கியுள்ளாா். அதன்படி பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளன என்றாா்.
பத்திரிகையாளா்களுக்காக...: சமூகநலத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி பேசுகையில், பத்திரிகையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா். அதற்கு அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிகையாளா்களுக்கு குறைந்த விலையில் நிலம், மனை வழங்க முதல்வா் கூறியுள்ளாா். அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




