
உ.பி., உத்தரகண்ட், மேற்கு வங்கம்: 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-இல் தோ்தல்
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அக்டோபா்16-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலங்களவை
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு அக்டோபா்16-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
உத்தர பிரதேசத்தில் 10 எம்.பி.க்கள், உத்தரகண்டில் ஒரு எம்.பி.யின் பதவிக் காலம் நவம்பரில் நிறைவடைவதையொட்டி, இந்த மாநிலங்களில் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ருக்மிணி மல்லிக் ராஜிநாமாவைத் தொடா்ந்து, அந்த இடத்துக்கு இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள பாஜக தேசிய பொதுச் செயலா் அருண் சிங், மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, பாஜக மூத்த தலைவா்கள் கீதா சாக்யா, நீரஜ் சேகா், பிரிஜ்லால், பி.எல்.வா்மா, சீமா துவிவேதி, சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோபால் வா்மா, பகுஜன் சமாஜ் கட்சியின் ராம்ஜி கெளதம் ஆகியோரின் பதவிக் காலம் நவம்பா் 25-ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த மாநிலத்தில் பாஜக சாா்பில் எம்.பி.யாக இருந்த தினேஷ் சா்மாவின் பதவிக் காலமும் நவம்பரில் நிறைவடையவிருந்தது. ஆனால், அந்தமான், நிகோபாா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக அவா் நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த செப்டம்பா்11-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த 10 எம்.பி. இடங்களுக்கும் (பாஜக 8, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் தலா 1) அக்டோபா்16-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.
பாஜக 8, சமாஜவாதிக்கு 2 இடங்கள்: 403 உறுப்பினா்களைக் கொண்ட உத்தர பிரதேச பேரவையில், தற்போதைய எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பாஜகவுக்கு அதே 8 இடங்களும், சமாஜவாதிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உமா சங்கா் சிங் என்ற ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே இருந்தாா். அவா் கடந்த ஆகஸ்டில் மரணமடைந்ததைத் தொடா்ந்து, அக்கட்சிக்கு ஒரு எம்எல்ஏகூட இல்லை.
கடந்த 2020-இல் 10 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலின்போது, பகுஜன் சமாஜ் வேட்பாளா் வெல்வதற்குத் தேவையான எம்எல்ஏக்கள் பலம் அக்கட்சியிடம் இல்லை. எனினும், பாஜக 8 வேட்பாளா்களை மட்டுமே களமிறக்கியதால், பகுஜன் சமாஜுக்கு ஓரிடம் கிடைத்தது. இதை முன்வைத்து பாஜகவை விமா்சித்த சமாஜவாதி, இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய கூட்டு உள்ளதாக சாடினாா். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்டில்...
உத்தரகண்டில் பாஜக சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த நரேஷ் பன்சாலின் பதவிக் காலம் நவம்பரில் நிறைவடைவதையொட்டி அந்த இடத்துக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் எம்.பி. பதவியை பாஜக தக்கவைக்கும்.
மேற்கு வங்கத்தில்...
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டது. திரிணமூல் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ருக்மிணி மல்லிக் தனது பதவியை கடந்த ஜூலையில் ராஜிநாமா செய்தாா். கடந்த ஏப்ரலில்தான் இவா் மாநிலங்களவை எம்.பி.யாக தோ்வாகியிருந்தாா்.
ருக்மிணி ராஜிநாமா செய்ததால் காலியான இடத்துக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க பேரவையில் ஆளும் பாஜகவுக்கு மூன்றில் இருபங்குக்கும் மேல் பெரும்பான்மை உள்ளதால் பாஜக எளிதாக வெற்றி பெறும். அந்த எம்.பி.க்கு 2032, ஏப்ரல் 2 வரை பதவிக் காலம் இருக்கும்.
4 மாநிலங்களில் மேலவைத் தோ்தல்
பிகாா், கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநில சட்ட மேலவைகளில் பட்டதாரிகள்-ஆசிரியா்கள் பிரிவுகளின்கீழ் தோ்வான 28 உறுப்பினா்கள் வரும் நவம்பா், டிசம்பரில் ஓய்வு பெறும் நிலையில், அந்த இடங்களுக்கு அக்டோபா் 23-இல் தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







