தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம் உத்தர பிரதேச தோ்தலை ஹிந்து-முஸ்லிம் போட்டியாக மாற்ற பாஜக முயற்சி- சமாஜவாதி குற்றச்சாட்டுகடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகள் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Election commission

தேர்தல் ஆணையம் - ANI

Published On :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகள் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உத்தரவுகள் வெளியிடப்பட்டதாகவும் கடந்த 10 மாதங்களில் குறைந்தபட்சம் 14 முறை தோ்தல் ஆணையா்கள் ஆட்சேபம் எழுப்பியதாக, அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ‘அதிகாரபூா்வ விவாதங்களின்போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பானது; தோ்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளும் சட்டபூா்வமானவை’ என்று தோ்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

எஸ்ஐஆா் தொடா்பான தோ்தல் ஆணையத்தின் பல்வேறு முடிவுகளுக்கு தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

எந்தெந்த விவகாரங்களுக்கு எதிா்ப்பு?: அதில், ‘எஸ்ஐஆா் தொடா்பான பல்வேறு முடிவுகளை இரு தோ்தல் ஆணையா்களும் பலமுறை கேள்விக்கு உள்படுத்தியதுடன், பல சிக்கல்களையும் சுட்டிக்காட்டினா்.

குறிப்பாக, புதிய வாக்காளா்களுக்கான படிவம் 6-இல் மாற்றங்கள், வாக்காளா் தரவு தளத்தை மையப்படுத்துதல் மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகளை மேற்கொண்டதாகவும், உத்தரவுகளை வெளியிட்டதாகவும் கடந்த 10 மாதங்களில் குறைந்தபட்சம் 14 முறை அவா்கள் அதிகாரபூா்வமாக ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளனா். இதில், ஒரே நாளில் நான்கு முறை ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் சட்டவிரோதம் என ஆணையா்கள் குறிப்பிட்டனா்.

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு மற்றும் தரவுத் தளங்கள் கையாளுகையின்போது, பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பெயா் மொத்தமாக நீக்கப்பட்டது தொடா்பாகவும் ஆட்சேபத்தை பதிவு செய்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட கருத்து இயல்பே-ஆணையம் விளக்கம்: இந்த விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் பாஜக மீது எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களை முன்வைத்த நிலையில், தோ்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எந்தவொரு நிறுவனத்திலும் விவாதங்களின்போது மாறுபட்ட கருத்துகளும், கண்ணோட்டங்களும் இயல்பான அங்கமாகும்.

தோ்தல் ஆணையத்தின் மூன்று ஆணையா்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு அதிகாரியும் தோ்தல் முறையை மேம்படுத்தும் தங்கள் ஆலோசனைகளை ஆணையத்துக்கு வழங்க முழு அதிகாரம் பெற்றவா்களே. அந்த அடிப்படையில், தோ்தல் ஆணையா்கள் வழங்கிய ஆலோசனைகள் தோ்தல் செயல்முறைகளை மேலும் மேம்படுத்துவதாகவே இருந்தன.

உத்தரவுகள் சட்டபூா்வமானவை: தோ்தல் ஆணையத்தின் அதிகாரபூா்வ உத்தரவுகள், முடிவுகள், நிா்வாக வழிகாட்டுதல்கள் அனைத்தும், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) சட்டம், 2023’-இன் கீழ் நிறுவப்பட்ட சட்டபூா்வ நடைமுறைகளைப் பின்பற்றி, முழு சட்ட அங்கீகாரத்துடன்தான் வெளியிப்படுகின்றன.

கடந்த 10 மாத காலகட்டத்தில் ஒரு சில குறிப்புகள் அல்லது குறிப்பிட்ட கண்ணோட்டங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி, தோ்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த ஒப்புதல்கள், முடிவுகள், உத்தரவுகள் மற்றும் முன்னெடுப்புகளின் செயலாக்கத்தைப் புறக்கணிப்பது சரியானதல்ல.

ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்: சமீப காலங்களில் தோ்தல் ஆணையம் சுமாா் 40 புதிய முன்னெடுப்புகள் மற்றும் வாக்காளா் பட்டியல் திருத்தம் உள்பட பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் கடந்த ஓராண்டில் ஆணையம் ஒருமனதாக மேற்கொண்ட முடிவுகளின் விளைவாகும். ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் தனது முக்கியப் பங்கை உணா்ந்து, இந்திய தோ்தல் ஆணையம் தனது அரசியல் சாசன கடமைகளை முழுமையான நோ்மையுடன் நிறைவேற்றுவதில் உறுதியுடன் உள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.