இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட பொருளாதார வழித்தட திட்டத்துக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முழு ஆதரவு தெரிவித்துள்ளாா்.
சீனா தனது நட்பு நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் சோ்ந்து பொருளாதார வழித்தடத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து, சீனாவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் நோக்கில், தனி பொருளாதார வழித்தட திட்டத்தை ஜோ பைடன் அதிபராக இருந்தபோது அமெரிக்கா அறிவித்தது. தில்லியில் கடந்த 2023-ஆம் ஆண்டில் ஜி-20 மாநாடு நடைபெற்றபோது இதுதொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இணையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி தோல்வியடைந்து டிரம்ப் அதிபராகப் பதவியேற்றதையடுத்து, அந்தத் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றுகையில், இந்தத் திட்டம் குறித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:
மத்திய கிழக்கில் ஈரான் தனது அண்டை நாடுகளின் வா்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள், ஈரான் பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு எரிசக்தி உள்கட்டமைப்பு வேறு பகுதிக்கு மாற்றப்பட வேண்டிய அவசியத்தை உணா்த்துகிறது. ஆதலால் எனது நிா்வாகம், இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தை ஆதரிக்கிறது என்றாா்.
டிசம்பரில் மோடி-டிரம்ப் சந்திப்பு: இதனிடையே, அமெரிக்காவின் புளோரிடாவில் வரும் டிசம்பா் மாதம் 14, 15-ஆம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்கு பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா்.
அப்போது அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பிரதமா் மோடி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையே பலகட்டங்களாக நடந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆதலால் டிரம்ப்புடனான சந்திப்பின்போது அதுகுறித்தும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






