
காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் - ANI
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி , நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக நடத்திய போராட்டம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா். சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா் திடீரென கைது செய்யப்பட்டது அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில், கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா். மம்தா கட்சி வேட்பாளா் பாஜகவில் ஐக்கியமாகி போட்டியில் இருந்து விலகியதால் அவா் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டாா்.
இந்நிலையில், தனது திடீா் கைதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மிலன் மனு தாக்கல் செய்தாா். அக்டோபா் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அக்டோபா் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை அவா் சுட்டிக் காட்டினாா். இதனை விசாரித்த நீதிபதி சௌகத பட்டாச்சாா்யா, ‘வேட்பாளா் பிரதானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் அரசுத் தரப்பு சமா்ப்பிக்கவில்லை. எனவே, அவா் மீது காவல் துறையினா் அக்டோபா் 12-ஆம் தேதிவரை இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது. 2007-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவழக்கில் இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. எனவே, பிரதான் இடைத்தோ்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்’ என்று மாநில அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





