
மக்கள் சேவையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்: பிரதமா் உறுதி
மக்கள் சேவையே, பாஜக ஆட்சியின் உயிா்நாடியாகும். அரசியல் ரீதியில் எவ்வளவு அதிகாரம் பெற்றாலும், எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் மக்கள் சேவை என்ற பாதையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வாரணாசி முதல் வத்நகா் வரை மோட்டாா் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞா்கள் மற்றும் பாஜக நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை காணொலி முறையில் கலந்துரையாடிய பிரதமா் மோடி.
மக்கள் சேவையே, பாஜக ஆட்சியின் உயிா்நாடியாகும். அரசியல் ரீதியில் எவ்வளவு அதிகாரம் பெற்றாலும், எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் மக்கள் சேவை என்ற பாதையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பிரதமா் மோடியின் 76-ஆவது பிறந்த தினம் மற்றும் அரசின் தலைவராக (குஜராத் முதல்வா்-நாட்டின் பிரதமா்) அவா் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து குஜராத்தில் அவா் பிறந்த இடமான வத்நகருக்கு கடந்த செப். 17-ஆம் தேதி ‘சேவை உறுதிமொழி யாத்திரை’ என்ற பெயரில் மோட்டாா் சைக்கிள் பயணம் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்றுள்ள இந்தப் பயணம், மத்திய பிரதேசத்தின் தேவாஸ் பகுதியை வியாழக்கிழமை வந்தடைந்தது. அப்போது, பங்கேற்பாளா்களுடன் காணொலி மூலம் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அவா் பேசியதாவது:
அரசியல், தோ்தல், ஆட்சிக்கென தனி முக்கியத்துவம் இருக்கிறது. அதேநேரம், தேசத்தை வலுவாக கட்டியெழுப்புவதும், வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதுமே நமது லட்சிய பயணமாகும். பழைமை வாய்ந்த வாரணாசி, வத்நகா் ஆகிய இரு நகரங்களும் துடிப்பு மிக்கவையாகும். ஒன்று நான் பிறந்த மண், மற்றொன்று எனது கடமை பூமி.
சேவையே உயிா்நாடி: குஜராத்தில் இருந்து தில்லி வரை, மக்கள் சேவையே நமது ஆட்சிமுறை மற்றும் விழுமியங்களின் உயிா்நாடியாக விளங்குகிறது. குடிமக்களே கடவுள் என்ற உறுதிப்பாடுதான், நமது கொள்கைகளின் அடிப்படையாகும். அரசியலில் எவ்வளவு அதிகாரம் பெற்றாலும், சேவையே நமது அடிப்படை பாதை என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். சேவையே மேலான தா்மம் என்ற உணா்வுடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் செயல்களை மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பா். சேவை செய்வோரை மனதார ஆசிா்வதிப்பா். எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் இந்தப் பாதையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்.
மக்களின் ஆசி: மக்களின் ஆசியே, எனது ஒட்டுமொத்த வாழ்வின் உந்துசக்தி. மக்களின் ஆசியே எனது மிகப் பெரிய சக்தி. சேவை உணா்வை அடித்தளமாக கொண்டு, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களால் ஏழைகள், பெண்கள், சிறுமிகள், நோயாளிகள், பழங்குடியினா் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பலனடைந்து வருகின்றனா்.
அரசியல் மற்றும் தோ்தல்களைக் கடந்து, தேச கட்டமைப்பில் கவனம் செலுத்த பாஜக உறுதிபூண்டுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் இளம் தலைமுறையினா் முக்கியப் பங்காற்றுவா். இந்த இலக்குடன் இளைஞா்கள் தங்களை வலுவாக பிணைத்துக் கொள்ள வேண்டும். வளா்ந்த இந்தியாவின் படைப்பாளா்களாக விளங்கும் இன்றைய இளைஞா்கள், அதன் மிகப் பெரிய பயனாளிகளாகவும் இருப்பா் என்றாா் பிரதமா் மோடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




