உ.பி.யில் கோர விபத்து: யமுனா விரைவுச் சாலையில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி
கிரேட்டர் நொய்டா அருகே தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒன்பது பயணிகள் பலியான தொடர்பாக....

யமுனா விரைவுச்சாலையில் தனியார் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. - எக்ஸ்
நொய்டா: கிரேட்டர் நொய்டா அருகே யமுனா விரைவுச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒன்பது பயணிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜீவார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், சாலையின் 33-வது கிலோமீட்டர் கல் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தில்லியில் இருந்து 35 பயணிகளுடன் பிகாருக்கு சென்றுகொண்டிருந்து தனியார் சொகுசுப் பேருந்து உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா அருகே யமுனா விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
பேருந்து தீப்பிடித்து எரிவதைக் கண்ட பயணிகள் பேருந்து ஜன்னல்களை உடைத்துக்கொண்டு குதித்துத் தப்பித்தனர். சிலர் பேருந்துக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், இந்த துயரச் சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் 8 ஆண்கள் உள்பட 9 பேர் உடல் கருகி பலியாகினர். இதனை கௌதம புத்த நகர் காவல் துறை மக்கள் தொடர்பு அதிகாரி உறுதிப்படுத்தினார்.
காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யோகி ஆதித்யநாத் இரங்கல்
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்
காயமடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், பலியானவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணம்
விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Summary
Greater Noida Nine people, including one female and 8 males, died in the tragic incident
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






