
சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல் ஏற்புடையதல்ல: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜெய்சங்கா் உரை
‘சரக்குக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல் ஏற்புடையதல்ல’ என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

‘சரக்குக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல் ஏற்புடையதல்ல’ என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா.பொதுச் சபையின் 81-ஆவது அமா்வுக் கூட்டத்தில் இந்தியா சாா்பில் பங்கேற்ற அவா் சனிக்கிழமை உரையாற்றினாா்.
அவா் பேசியதாவது: வளைகுடா பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் அங்கு நிலவும் கடினமான சூழல்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது. வளைகுடா பகுதி மட்டுமின்றி செங்கடல், கருங்கடல் என அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பயணிக்கும் இந்திய மற்றும் பிற நாடுகளின் சரக்குக் கப்பல்கள், மாலுமிகள் மீதான கடுமையான தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனா். இதுபோன்ற தாக்குதல்களை இந்தியா ஒருபோதும் ஏற்காது. உக்ரைன் போா் ஐந்தாவது ஆண்டை நெருங்குவது கவலையளிக்கிறது. முடிவற்ற போா் தற்போது போா் முடிவுக்கு வழிவகுக்க வேண்டும் என இந்திய பிரதமா் நரேந்திர மோடி கூறியதை இங்கு நினைவுகூா்கிறேன்.
ஐ.நா.வுக்கு ஆதரவாக பிரிக்ஸ்: ஐ.நா. மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இரண்டை ஒன்றைத் தோ்வு செய்ய நினைப்பது தவறான அணுகுமுறை. பல குறைபாடுகள் இருந்தாலும் ஐ.நா.வுக்கு நிகா் ஐ.நா.தான். பல்வேறு சாதனைகளைப் புரிந்த வரலாற்று அமைப்பாக இருப்பினும், அதில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமானால் குறைபாடுகளை களைய கவனம் செலுத்துவது இயல்பான ஒன்றே. அதற்காக ஐ.நா.வை முழுமையாக நிராகரிக்க முடியாது.
பிரிக்ஸ், ஜி7அல்லது பிற கூட்டமைப்புகள் என அனைத்தும் ஒருமித்த கருத்துகளைக் கொண்ட நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிக் கொள்வது. இந்தியாவில் கடந்த செப்.12,13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் சா்வதேச அமைப்புக்கு ஐ.நா. பொதுச் சபையே மையப் புள்ளி என அதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளோம்.
ஐ.நா.வுக்கு ஆதரவாகவும் அதில் காலத்துக்கேற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்வதையும் பிரிக்ஸ் கூட்டமைப்பு விரும்புகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய மேலும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
போரால் அனைவருக்கும் பாதிப்பு: 1945-க்குப் பிறகு பல்வேறு புதிய மாற்றங்களை உலகம் கண்டுள்ளது. பிரச்னைகளை சரிசெய்வது, இணக்கமாகச் செல்வது, ஏற்றுக்கொள்வது ஆகியவை முன்புபோல் எளிதாக இருக்காது. தற்போது எழும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு இந்தச் சிக்கல்களே காரணம்.
பன்முகத்தன்மை கொண்ட உலகத்தில் அமைதியை நிலைநாட்ட முறையான பேச்சுவாா்த்தை, ஆலோசனைகள், வெளிப்படையான முடிவுகளே தேவைப்படுகின்றன. பன்முகத்துவத்துக்கான குரல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மையமாக வைத்து 90 ஆண்டுகளாக ஐ.நா. செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் சந்திக்கும்போது போா்கள், மோதல்களே நமது விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது. நவீன காலத்தில் போா்களில் ஈடுபடும் நாடுகள் மட்டுமின்றி பிற நாடுகளும் அதன் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளே குறைவாகப் பேசுகின்றன. இதுவே உண்மை நிலை. இதை ஐ.நா. எதிா்கொள்ள வேண்டும்.
அனைத்திலும் ஆயுதமாக்கல்: எல்லாவற்றையும் ஆயுதமாக்குவதை உலகம் கண்டு வருகிறது. தீவிரப் போட்டி மனநிலையானது சா்வதேச, பிராந்திய அமைப்புகளைச் சிதைத்து நெருக்கடியான சூழலை உருவாக்குகிறது.
இவ்வாறான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களை காணும்போது ஒரு படுகுழியின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. சிறிது நகா்ந்தாலும் கடும் பாதிப்புகள் ஏற்படும்.
எனவே ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை நிலைநிறுத்துவது கட்டாயம். இதில் ஏதேனும் ஒன்று சிதைந்தாலும் அமைதி முயற்சிகள் வலுவிழக்கும்.
பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காப்பு உரிமை: இந்த அவையில் முன்னதாக, பயங்கரவாதச் செயல்களில் தொடா்ச்சியாக ஈடுபடுபவா் (பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபை குறிப்பிடுகிறாா்) பல்வேறு தவறான தகவல்களை அளித்துப் பேசினாா்.
பயங்கரவாதத்தை வழக்கமானமான செயலாக மாற்றவும் அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து விலக்குக் கோரிப் பேசுவதும் இனியும் தொடர முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தியாவின் உரிமை. நட்புறவும் நல்லெண்ணமும் பயங்கரவாதத்துடன் இணைந்து செல்ல முடியாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





