
வாக்காளரே ஜனநாயகத்தின் வலிமை! தேர்தல் ஆணையம் குறித்து கார்கே வலியுறுத்திய 5 கோரிக்கைகள்!
தில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கார்கே பற்றி...

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - file photo
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவருக்கு 'அழுத்தம்' கொடுத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
தில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கார்கே,
தனது கட்சியின் ஐந்து முக்கியக் கோரிகைகளை முன்வைத்தார். வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் ஒவ்வொரு முக்கிய மாற்றம் குறித்த முழுமையான தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும், அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் அதுதொடர்பான தரவுகளை எளிய வடிவத்திலும் உரிய நேரத்திலும் வழங்குவது ஆகியவை இதில் அடங்கும்.
தீவிரமான முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் வெளிப்படும் இடங்களில் எல்லாம், சுதந்திரமான மற்றும் காலக்கெடுவுக்கு உள்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு அது குறித்து முழுமையாகத் தெரிவிக்கப்பட்டு, மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். அத்துடன், தேர்தல் செயல்முறை தொடர்பான முக்கியத் தரவுகள் மற்றும் முடிவுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், அப்போதுதான் தகவல்கள் மறைக்கப்படுவதாக எந்தவொரு கட்சியும் குற்றம் சாட்டுவதற்கு இடமிருக்காது.
மிக முக்கியமாக, தங்கள் வாக்கு பாதுகாப்பானது என்ற நம்பிக்கை இந்திய வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் வெறும் தேர்தலில் வெற்றி-தோல்விக்கான போட்டியாக மட்டும் பார்க்கவில்லை.
தேர்தல்கள் வருகின்றன, போகின்றன; அரசுகள் மாறுகின்றன. ஆனால் ஜனநாயகமும் அரசியலமைப்பும் நிலையானவை. இதுவே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம்.
ஜனநாயகத்தில் பிரதமரோ, முதல்வரோ அல்லது அதிகாரத்தில் உள்ள தலைவரோ அல்ல, சாதாரண வாக்காளரே மிக வலிமையான நபர் என்பதை நாம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணர்த்த வேண்டும். இவ்வாறு பேசினார்.
கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக். மூத்த தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் தலைவர்களான டி.கே. சிவகுமார் (கர்நாடகம்), வி.டி. சதீசன் (கேரளம்), ஏ. ரேவந்த் ரெட்டி (தெலங்கானா) மற்றும் சுக்விந்தர் சிங் சுகு (ஹிமாச்சலப் பிரதேசம்) ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






