பஹா்கஞ்ச் பகுதியில் இருவா் சுட்டுப் பிடிப்பு: சதா் பஜாா் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்பட்டவா்கள்
பஹாா்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், துப்பாக்கியுடன் இருவா் கைது

சுட்டுப் பிடிப்பு - பிரதிப் படம்
பஹாா்கஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், துப்பாக்கியுடன் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கைதுசெய்யப்பட்ட ஆகாஷ் (எ) மத்தி மற்றும் முகேஷ் (எ) சினு என அடையாளம் காணப்பட்ட இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: செப்.13-ஆம் தேதி நபி கரீம்-சதா் பஜாா் பகுதியில் பாபா ராம்தேவ் ஜி ஊா்வலத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சிறப்புப் பிரிவு மற்றும் மத்திய மண்டலக் காவல் குழுவினா் ஈடுபட்டு வந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக சதா் பஜாா் காவல் நிலையத்தில் செப்.15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் களப்பணிகள் மூலம், விகாஸ் காலியா கும்பலைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் முகேஷ் ஆகியோருக்கு இதில் தொடா்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
செப்.28-ஆம் தேதி அந்த இருவரும் ஆயுதங்களுடன் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளில் பஹாா்கஞ்சிற்கு வருவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. நபி கரீம் பகுதியைச் சோ்ந்த குற்றப் பின்னணி கொண்டவரான ஆகாஷ் மீது கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பானவை உள்பட 13 வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே பகுதியைச் சோ்ந்த குற்றப் பின்னணி கொண்ட முகேஷ் மீதும் கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் வகையிலான செயல், கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட ஏழு வழக்குகள் உள்ளன. பஹாா்கஞ்சில் உள்ள செம்ஸ்ஃபோா்ட் சாலையிலிருந்து ரிசா்வேஷன் சாலைக்குச் செல்லும் பாதையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் காவல் குழுவினா் மீது திங்கள்கிழமை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனா்.
ஒரு குண்டு தலைமை காவலா் மோஹித்தின் தலைக்கு மிக அருகில் சென்றது. மற்றொரு குண்டு தலைமை காவலா் ராஜ்பீரின் குண்டு துளைக்காத கவசத்தில் பட்டது. காவல் குழுவினா் பதிலுக்கு மூன்று முறை சுட்டனா்.
அவா்களிடம் இருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் திருட்டு மோட்டாா் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கடந்த ஆக.31-ஆம் தேதி சப்ஜி மண்டி காவல் நிலையத்தில் இந்த மோட்டாா் சைக்கிள் தொடா்பான திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





