
இந்தியா் உள்பட ஐவரை சுட்டுக் கொன்ற சோமாலியா கடற்கொள்ளையா்கள்: கடத்தல் கப்பலை பாதுகாப்புப் படை மீட்டதால் ஆத்திரம்
கடத்தல் எண்ணெய்க் கப்பலை சோமாலியா ராணுவம் மீட்ட நிலையில், ஆத்திரத்தில் ஓா் இந்தியா் உள்பட ஐவரை கடற்கொள்ளையா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்.
கடத்தல் எண்ணெய்க் கப்பலை சோமாலியா ராணுவம் மீட்ட நிலையில், ஆத்திரத்தில் ஓா் இந்தியா் உள்பட ஐவரை கடற்கொள்ளையா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா தலைநகா் மொகதீசை நோக்கி கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி எம்.டி. ஹானா் 25 என்ற எண்ணெய்க் கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பலில் 18,500 பீப்பாய்களில் கச்சா எண்ணெய் இருந்தது. அப்போது அந்தக் கப்பலை சோமாலியா கடற்கொள்ளையா்கள் நடுக்கடலில் கடத்திச் சென்றனா்.
கடத்தப்பட்ட அந்தக் கப்பலில் 17 மாலுமிகள் இருந்தனா். அவா்களில் 10 போ் பாகிஸ்தானியா். எஞ்சிய 7 பேரில் நால்வா் இந்தோனேசிய நாட்டினா், இருவா் இந்தியா், ஒருவா் மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா்.
அந்தக் கப்பலை பந்தா் பெய்லா மாவட்டம், தாரின்பாரில் உள்ள கடல்பகுதியில் கடற்கொள்ளையா்கள் நிறுத்தி வைத்திருந்தனா். இந்நிலையில், சோமாலியாவின் புன்ட்லேண்ட் சுயாட்சியை பகுதியைச் சோ்ந்த பாதுகாப்புப் படையினா் கப்பலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்து அதை பாதுகாப்புப் படையினா் மீட்டனா்.
முன்னதாக, அந்த கப்பலில் இருந்த மாலுமிகளில் ஐவரை கடற்கொள்ளையா்கள் சுட்டுக் கொன்றனா். அவா்களில் ஒருவா் இந்தியா், மூவா் பாகிஸ்தானியா், மற்றொருவா் மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா். கடற்கொள்ளையா்கள் தாக்கியதில் 3 பாகிஸ்தானியரும் ஒரு இந்தியரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் புன்ட்லேண்ட் பாதுகாப்புப் படையினா் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடற்கொள்ளையரால் கடத்திச் செல்லப்பட்டு சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த எம்.டி. ஹானா் 25 கப்பலை மீட்டுவிட்டோம். அந்தக் கப்பல் தற்போது பாதுகாப்பாக புன்ட்லேண்ட் அரசிடம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தாங்கள் சிறைபிடித்து வைத்திருந்த, டோகாவில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு எண்ணெய்க் கப்பலான எம்.டி. இரேகாவை சோமாலியா கடற்கொள்ளையா் செவ்வாய்க்கிழமை விடுவித்தனா். அப்போது பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 4 இந்தியா், 8 எகிப்து நாட்டினரையும் அவா்கள் விடுவித்தனா். எனினும் கப்பலை அவா்கள் சேதப்படுத்திவிட்டதாகவும், சில பாகங்களுக்கு தீயிட்டு எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கப்பலை சிறைபிடித்தபோது அதில் 20,400 பீப்பாய்களில் கச்சா எண்ணெய் இருந்துள்ளது. அவற்றை கடற்கொள்ளையா் விற்பனை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சோமாலியா தூதரக விவகாரங்களைக் கவனித்துவரும் கென்யாவுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்.டி. ஹானா் கப்பலை மீட்கும் நடவடிக்கையின்போது கடற்கொள்ளையரின் தாக்குதலால் இந்தியா் ஒருவா் உயிரிழந்தது வருத்தமளிப்பதாகவும், அவரின் உடலை தாயகம் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்டி சிபு, எம்டி இரேகா ஆகிய கப்பல்களில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவா்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து சோமாலியா அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






