9. வான மகள் நாணுகிறாள்..

ஒழுங்கான ஆடைகளைவிட ஓட்டை ஆடைகளுக்கே விலை அதிகம்! இப்படியே போனால், மறைக்க வேண்டிய பகுதிகளில் மட்டும் ஓட்டைகள் போட்டுக்கொண்டு மற்ற இடங்களையெல்லாம் மூடும் ஆடைகளும் வந்துவிடலாம்!
9. வான மகள் நாணுகிறாள்..

‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’ என்ற வைரமுத்துவின் பாடலில் ‘வான மகள் நாணுகிறாள்’ என்று வரும். அது எனக்கு மிகவும் பிடித்த வரிகளில் ஒன்று. இப்போது ஏன் வைரமுத்து பற்றிப் பேச வேண்டும் என்று கேட்கிறீர்களா? நான் அவரைப் பற்றிப் பேசவில்லை. நாணத்தைப் பற்றிப் பேசுகிறேன். நாணுவது எனக்குப் பிடிக்கும்! நீ என்ன பொட்டச்சியா என்று யாரோ கேட்பது எனக்குக் கேட்கிறது! நான் பேச வருவது அந்த வகையான நாணத்தைப் பற்றியல்ல.

நாணம் என்பது ஒரு பாலருக்கு மட்டுமானது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாணம் என்பது உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. திரைமறைவில் இருக்கும் பெண்களுக்கு உரியது இயற்கையான நாணம். பிடித்தவனைப் பார்த்தால் கால் விரல்களால் தரையில் கோலம் போடுவது இந்த வகையைச் சேர்ந்ததே. புதுமணப்பெண்ணுக்குரிய நாணம். காதல் நாணம். அந்நியரிடமிருந்து தன்னை மறைக்க வேண்டும் என்ற உடல் பற்றிய நாணம். அதுகூட இந்தக் காலத்தில் அருகிக்கொண்டு வருகிறது. இதுபற்றிப் பிறகு பார்க்கலாம். உடல்ரீதியான நாணத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை நாம்.

கோடி கோடியாக மக்களின் பணத்தை வங்கிகளில் இருந்து கடனாகப் பெற்றுவிட்டு வெளிநாட்டில் ஓடி ஒளிந்துகொள்கிறார்களே அந்த நாணமற்ற தன்மையைப் பற்றி. செல்லாமல் ஆக்கிய பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசலில் காலை முதல் மாலை வரை வரிசையில் நின்று சாதாரண மக்கள், முதியவர்கள், பெண்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் வீதியில் மயங்கி விழுந்தார்களே, அப்போது மதிப்பிழந்தது பணம் மட்டுமா? அந்த நாண(ய)மற்ற செயலைப் பற்றி. நீதிமன்றங்களைப் பற்றிக் கேவலமான வார்த்தைகளில் தரக்குறைவாக பொதுமக்கள் முன்னிலையில் பேசுகிறார்களே, அந்த நாணமற்ற துணிச்சலைப் பற்றி.

ஒருவகையில் நாணமற்ற தன்மை என்பதும் அதர்மம் என்பதும் ஒன்றுதான். அதேபோல நாணமும் தர்மமும் நெருங்கிய தொடர்புடையது. இது தமிழ் இலக்கியத்தின் குரல். சங்க இலக்கியத்தின் குரல். நற்றினையில் குரல். வள்ளுவனின் குரல். குற்றம், தீமை இவற்றைக் கண்டு மனம் கூசுதல் நாணம் என்று நற்றினை கூறுகிறது. ‘உயிரினும் சிறந்த நாணம்’ என்று சங்கப்பாடல் கூறுகிறது.

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

கள் குடிப்பவரை விட்டு நாணம் என்னும் உணர்ச்சி நீங்கிவிடும் என்று குறள் எச்சரிக்கிறது! அதாவது, குடிகாரர்களெல்லாம் ‘வெட்கங் கெட்ட பயலுக’ என்கிறது திருக்குறள். கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார்களுக்கு இதெல்லாம் புரியுமா! ‘டாஸ் மாக்’ கடைகளில் கூடுபவர்களுக்குத்தானே அரசாங்கத்தின் ‘பாஸ் மார்க்’!

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.

என்கிறார் திருவள்ளுவர் இன்னொரு குறளில். இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவருக்கும் பொதுவான நாணமாகும். மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும் என்பது இக்குறளுக்கு விளக்கம்.

ஆக, வள்ளுவரின் புரிதல்படி, நாணம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று உடல்ரீதியான நாணம். இன்னொன்று மனரீதியாது. தர்ம அதர்மம் தொடர்பானது. அதையொட்டி எழுகின்ற உணர்ச்சி பற்றியது. ஆனால் தர்மமா, அப்படீன்னா என்று கேட்கின்ற மஜய் வில்லையாக்களும், மோரவ் நீடிகளும்தான் நம் நாட்டில் அதிகம்! இவர்களெல்லாம் யார் என்கிறீர்களா? நாணமற்ற அதர்மவாதிகளுக்கான கற்பனைப் பெயர்கள் இவை!

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.

உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணத்துடன் இருத்தலே ஆகும் என்று இத்திருக்குறளுக்கு விளக்கம் தருகிறார் மு. வரதராசன். இறுதியாக ஒரு குறள்:

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.

நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்கள் என்பது இதன் விளக்கம்! நாணம் என்பது உயிரைவிட மேலானது என்று சொல்கிறார் திருவள்ளுவர்! கோவலனை அநியாயமாகக் கொலைக்குற்றம் சுமத்திக் கொன்றோமே என்ற எண்ணம் மேலிட உயிரை விட்டானே பாண்டியன், அவன் நாணமுள்ளவன், தர்மவான்.

இந்த நாணம் என்ற விஷயம் இருக்கிறதே அது இந்தியர்களுக்கு மட்டுமே, அல்லது தமிழர்களுக்கு உரிய சிறப்பு என்பது என் கருத்து. ஆனால் தமிழர்களிடம் மட்டும்தான் அது இருந்தது – கவனிக்கவும், கடந்த காலம்! – என்று கூறமாட்டேன். உலக வரலாற்றில் பல சமுதாயத்தவரிடம் நாணம் இருக்கவில்லை என்பது உண்மைதான். உதாரணமாக ஆங்கிலேயர்களைச் சொல்லலலாம்.

ஒருமுறை பிரிட்டிஷ் பிரதம மந்திரியான சர்ச்சில் நிர்வாணமாக குளித்துவிட்டு அப்படியே பிறந்த மேனியாக வெளியில் வந்தார். அப்போது அவரைப் பார்க்க அமெரிக்க ஜனாதிபதி வந்திருக்கிறார். அல்லது வெள்ளை மாளிகையில் இருந்த சர்ச்சிலைப் பார்க்க அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் சர்ச்சிலின் அறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது குளித்துவிட்டு அப்படியே குழந்தையைப்போல வந்திருக்கிறார் சர்ச்சில்! இருவரில் யாருமே அதிர்ச்சி அடைந்ததாக வரலாற்றுக்குறிப்பு இல்லை!

இதில் சர்ச்சிலின் ‘பஞ்ச் டயலாக்’ வேறு! அது என்ன தெரியுமா? “The Prime Minister of Great Britain has nothing to hide from the President of the United States”! ‘‘அமெரிக்க அதிபரிடம் பிரிட்டிஷ் பிரதமர் மறைப்பதற்கு எதுவுமில்லை’’ என்று அர்த்தம்! இது உண்மையில் நடந்ததா இல்லையா என்று தெளிவான வரலாறு இல்லை. ஆனால் இது புகழ்பெற்ற வரலாற்றுக் குறிப்பாகக் கிடைக்கிறது இணையத்தில்!

ஆண்களே இப்படியென்றால், பெண்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை! நம்மில் பலர் வெளிநாட்டுப் பெண்களை காண விரும்புவதற்குக் காரணம் அவர்கள் ‘தொடைகாட்டி’களாக இருப்பதுதானே!

இமாம் அபூஹனிஃபா என்று எட்டாம் நூற்றாண்டில் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் இருந்தார். அவருக்கு நாணம் அதிகம். அவர் குளிக்கும்போதுகூட ஜிப்பா அணிந்துகொண்டுதான் குளிப்பார் என்று நான் கல்லூரி மாணவனாக இருந்த காலகட்டத்தில் எங்கள் ஊரில் நடந்த ஒரு மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடிய ஒரு பிரபலமான பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர் பெயர் ஜியாவுதீன் ஹஸ்ரத். அவர் இப்போது இருக்கிறாரா என்று தெரியவில்லை.

விஷயம் அங்கே முடிந்துவிடவில்லை. க்ளைமாக்ஸ் இனிமேல்தான். அப்படி ஒருமுறை ஒரு ஊரில் அவர் கூறியபோது ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டாராம். ‘அப்படின்னா, அவர் ஒன்னுக்கு ரெண்டுக்கெல்லாம் எப்படிப் போவார்?’ என்று! அதற்கு ஜியாவுதீன் ஹஸ்ரத், ‘அதெல்லாம் நாம போற மாதிரிதான் போவார். அப்ப அல்லாஹ் வெட்கப்பட்டு வேறு பக்கமாக திரும்பிக்கொள்வான்’ என்று பதில் சொன்னாராம்!

நாணம் பற்றி நான் இப்போது ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏனெனில், காலம் ரொம்ப வேகமாக எதிர்த்திசையில் போய்க்கொண்டிருக்கிறது. வெட்கப்படுவதற்கு எதிரான ஒரு கலாசாரம் உருவாக்கிகொண்டிருக்கிறது. முன்பெல்லாம் நம் ஆடைகளில் எங்காவது கிழிசல், ஓட்டைகள் இருந்தால் என்ன செய்வோம்? அதை யாருக்கும் தெரியாதவாறு அதே நிற நூல்கொண்டு தைத்து வைத்து மறைத்துக்கொள்வோம். அல்லவா? ஆனால் இப்போது என்ன நிலை? முட்டி, தோள்பட்டை, முதுகு என ஆங்காங்கே ஓட்டைகள் போடப்பட்ட, கிழிசல்கள் கொண்ட ஆடைகளை அணிவது ‘ஃபேஷன்’ ஆகிவிட்டது! கண்றாவியே!

இதில் இன்னொரு சிறப்புப் பருப்பு என்னவெனில், ஒழுங்கான ஆடைகளைவிட ஓட்டை ஆடைகளுக்கே விலை அதிகம்! இப்படியே போனால், மறைக்க வேண்டிய பகுதிகளில் மட்டும் ஓட்டைகள் போட்டுக்கொண்டு மற்ற இடங்களையெல்லாம் மூடும் ஆடைகளும் வந்துவிடலாம்! சீக்கிரம் அந்த மாதிரியான ஃபேஷனுக்கு பெண்களாவது வர வேண்டும் என்று நீங்கள் கிசுகிசுப்பது எனக்குக் கேட்கிறது!

ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். இது நடந்தது ஏழாம் நூற்றாண்டில். அந்த ஊரில் உலகப் புகழ் பெற்ற ஒரு புராதன ஆலயம் இருந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்யவேண்டி இருந்தது. அதற்காக கற்களைத் தூக்கிக்கொண்டு பலர் சென்றார்கள். அதில் அப்பாஸ் என்று ஒருவர். அவருடைய சகோதரர் மகனோடு சென்றுகொண்டிருந்தார். அந்த சகோதரர் மகனுக்கு பதினாறிலிருந்து பதினெட்டு வயது இருக்கலாம் அப்போது. அந்தக்காலத்தில் ஆண்களின் ஆடைகள் இரண்டுதான். தோளுக்கு மேலே ஒரு துணி. இடுப்புக்குக் கீழே ஒரு துணி.

இடுப்புக்குக் கீழே போடும் ஆடைக்கு இஸார் என்று பெயர். கடினமான வேலைகளைச் செய்யும்போதெல்லாம் அவர்கள் இஸாரை அவிழ்த்துவிட்டுத்தான் செய்வார்கள். அதுவே அவர்களின் வழக்கமாக, சௌகரியமாக இருந்தது. அப்போது நிர்வாணமாக ஆகிவிடுவோமே என்ற உணர்வு அவர்களில் யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. அல்லது அதைப்பற்றி அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அப்படிப் பழகியிருந்தார்கள்.

ஆனால் அந்த இளம் வயது மருகருக்கு அதில் உடன்பாடில்லை. அவர் அந்த ஊரில், அந்த சமுதாயத்தில் வாழ்ந்தவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். ஆனால் சித்தப்பா சொல்கிறாரே என்று பெரியவர் சொல்லைத் தட்டிச் செயல்படவும் விருப்பமில்லை. இருதலைக்கொள்ளி எறும்புபோல அவர் தவித்தார். அப்பாஸ் சொன்னதிலும் தவறில்லை. இடுப்புத்துணியை எடுத்து தோள் மீது போட்டுக்கொள் என்றுதான் அவர் சொன்னார். ஏனெனில், அப்போதுதான் தோளில் இருக்கும் கல் குத்தாது என்பது அவரது அன்பான கணிப்பு. இளைஞரின் மீது கொண்ட அன்பினால்தான் அவர் அப்படிச் சொன்னார்.

ஆனால் இளைஞரின் குணாம்சமோ மிகுந்த தனித்துவம் கொண்டதாக இருந்தது. அவர்களெல்லாம் மது அருந்துவார்கள். பல பெண்களை அனுபவிப்பார்கள். இத்தனை பெண்களைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒரு கணக்கே இல்லாமல் இருந்தது. ஆனால் அந்த இளைஞர் மட்டும் என்றுமே மது அருந்தியதில்லை. அந்த நாட்டின் வரலாற்றில் தன் முதல் மனைவி இறக்கும்வரை இன்னொரு திருமணம் செய்துகொள்ளாத ஒரே மனிதராக அவர் மட்டுமே இருந்தார். நற்குணங்களின் இருப்பிடமாக அவர் திகழ்ந்தார் என்று சொல்லலாம்.

சித்தப்பா அப்பாஸ் சொல்படி இடுப்புத்துணியை அவிழ்த்து நிர்வாணமாக ஆகிவிடுவதில் அந்த இளைஞருக்கு இஷ்டமில்லை. அதே சமயம் தன் சிற்றப்பா சொன்ன சொல்லை மீறவும் அவர் விரும்பவில்லை. தயங்கித் தயங்கி, மெல்ல மெல்ல தன் இடுப்புத்துணியை அவிழ்க்க ஆரம்பித்தார். அது கீழே விழுந்துவிட்டால் தான் பிறந்த மேனியாகிவிடுவோமே என்ற நினைப்பு அவருக்கு ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது! ஆனாலும் கடைசியில் அவிழ்த்துவிட்டார். அவிழ்த்துவிட்டால் என்ன நடக்குமோ அது நடந்துவிட்டது. ஆனால் அது அவருக்குத் தெரியாது. ஏன்? அவர் அந்தக் கணமே நினைவிழந்து போனார்!

தான் நிர்வாணமாகப்போகிறோம் என்ற நினைவைக்கூட தாங்க முடியாமல் உலக வரலாற்றில் ஒருவர் நினைவை இழந்திருக்கிறார். இப்படி ஒரு வரலாற்றை நான் யாருடைய வாழ்விலும் படித்ததில்லை. அப்படிப்பட்ட அந்த நாணமிகு, மானமிகு இளைஞர் யார்? அவர்தான் இறைவனின் இறுதித்தூதர் என்று முஸ்லிம்களால் நம்பப்படும் நபிகள் நாயகம் முஹம்மது அவர்கள்! இது சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லிம் போன்ற ஆதாரப்பூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் விவரிக்கப்படுகின்ற நிகழ்ச்சியாகும். அதனால்தானோ என்னவோ, நாணம் கொள்வது இறை நம்பிக்கையில் ஒரு பகுதியாகும் என்று அடிக்கடி அவர்கள் சொன்னார்கள். யாருக்கெல்லாம் நாணம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் இறை நம்பிக்கை கொஞ்சம் உள்ளது என்று அர்த்தம். அவர் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் சரி!

வான மகள் மட்டும்தான் நாண வேண்டுமா? வாருங்கள், நாமும் வெட்கப்படலாம்!

மறுசோறு உண்டு…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com