Enable Javscript for better performance
20. கூகுளாண்டவர் என்னும் எட்டாவது வள்ளல்!- Dinamani

சுடச்சுட

  
  5

   

  ‘நவீன பொருளாதார உலகத்தை கட்டமைக்கப்போவது, தொழில்நுட்பம் அல்ல. புரிந்துகொள்ளவே முடியாத மனிதர்களின் மூளைதான். அதை ஓரளவு புரிந்துகொள்வதும், அதற்கேற்படி செயல்படுவதும்தான் நாளைய உலகத்தின் சவாலாக இருக்கப்போகிறது’ என்றார் ஆலன் வெப்பர். இது சமீபத்தில் சொல்லப்பட்ட விஷயமல்ல. 90-களின் ஆரம்பத்தில் அவர் சொல்லிவைத்த அருள்வாக்கு. ஒரு சாதாரண எழுத்தாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ஆலன், வணிகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து எழுதிவந்தவர். முப்பது ஆண்டுகால எழுத்து பணிக்குப் பின்னர், 1995-ல் பாஸ்ட் கம்பெனி என்னும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வெளியிடும் பத்திரிகையை ஆரம்பித்தார். தொழில்நுட்பம் பற்றி பேசுவதையே தொழிலாகக் கொண்டாலும், மனித மூளையை தொழில்நுட்பத்தால் எந்நாளும் வெல்லமுடியாது என்பதை அப்போதே தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தவர். இன்று ஆலன், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர், மெக்ஸிகோவின் மேயர்.

  ஆலன் சொன்ன விஷயத்தில் முக்கியமானது, மனிதனின் எண்ணவோட்டத்தை தெரிந்துகொள்வது. அதுதான் இன்றைக்கும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. இவனுக்கு என்ன தேவை? இவன் நம்முடைய பொருளை வாங்குவானா? என்ன விலை கொடுத்து வாங்குவான்? எப்போது வாங்குவான்? இதுதான் எந்தவொரு மார்கெட்டிங் ஆசாமியின் மனதிலும் வந்து மோதும் கேள்விகள். கேள்விகளுக்கு விடை தேடியாக வேண்டும். விடை கிடைத்தால், வியாபாரத்தில் வெற்றி பெற்றுவிடலாம். எப்படி தேடுவது?

  தேடுவதில் ஸ்பெஷலிட்டான கூகுளாண்டவரிடமே எல்லோரும் தேடுகிறார்கள். கொடுத்துச் சிவந்த கரங்களைக் கொண்ட எட்டாவது வள்ளல் அவர்தானே! தேடுவது கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் கூகுளை குறை சொல்வார்கள். வாடிக்கையாளர் தேடுவதை கூகுள் அள்ளிக் கொடுத்துவிட்டால், தம்முடைய தொழில் பாதிக்கப்படுமே என்று பதறுபவர்களும் இருக்கிறார்கள். சமீபத்திய குழாயடிச் சண்டையை பார்ப்போம்.

  ஜி பே என்னும் பணப் பரிவர்த்தனைச் சேவையை கூகுள் நிறுவனம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவுபெறப்போகிறது. உங்களது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரங்களை கூகுளிடம் கொடுத்து ரிஜிஸ்டர் செய்துகொண்டுவிட்டால், அனைத்து இணைய வழி பணப் பரிவர்த்தனைகளையும் கூகுளாண்டவர் பார்த்துக்கொள்வார். வங்கிகள் இதையொரு சேவையாகத் தர ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகப்போகின்றன. ஆனால், கூகுள் போன்ற நிறுவனங்கள் களத்தில் இறங்குவதற்குப் பணமதிப்பிழக்க நடவடிக்கைதான் திருப்புமுனையாக அமைந்தது.

  ஒரே நாளில் 500 ரூபாய் நோட்டு செல்லாததாக ஆனதும், வங்கிகளின் ஏடிஎம் நிரம்பி வழிந்தது. மணிக்கணக்கில் வரிசையில் நின்று ஏடிஎம்மில் பணம் எடுக்க இயலாதவர்கள், இணைய வழிச் சேவையை நாடினர். PayTM கணிசமான வாடிக்கையாளர்களை தன்வசம் இழுத்துக்கொண்டது. இந்திய அரசும் Bhim என்னும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வழியாக சேவையில் இறங்கியது. இந்நிலையில்தான், கூகுளின் ஜி பே களத்தில் இறங்கியது, சற்று தாமதமாக.

  ஜி பே சேவையின் மூலமாக கூகுள் நிறுவனம் தன்னிடமுள்ள இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று சக போட்டியாளரான PayTM குரல் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, UPI மூலமாக நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள், அது குறித்து விவரங்கள் யார் யாரிடம் பகிர்ந்துகொள்ளப்படும் என்பது பற்றி கூகுள் விளக்கம் தெரிவித்திருக்கிறது. ‘வங்கிகள், வியாபாரிகள், கூகுளின் கூட்டாளிகளிடம் வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும். சம்பந்தப்பட்ட தகவல்களை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்த பின்னரே அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்’ என்கிறது கூகுள். அதாவது, சம்பந்தப்பட்டவர்கள் தவறாகப் பயன்படுத்தாதவரை பகிர்ந்துகொள்வோம். தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்தவுடன் பகிர்ந்துகொள்வதை நிறுத்திவிடுவோம். அல்லது அவர்கள் வேறு யாருக்காகவது இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பது தெரியவந்தாலும் நிறுத்திவிடுவோம். அது சரி, எப்போது தெரியவரும்? யாருக்குத் தெரியும்? நம்பிக்கை! அதுதானே வாழ்க்கை.

  ஜி பே சேவையை நடத்தும் கூகுள் நிறுவனம், ஜிமெயில் சார்ந்த சேவைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. ஜிமெயில் கணக்குகள், ஏகப்பட்ட வாடிக்கையாளர் சேவை (CRM) சார்ந்த துறைகளில் நிறையவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் என்னவிதமான ஆபத்து நேருகிறது? ஒரு சில உதாரணங்களைப் பார்க்கலாம். Unread message எத்தனை என்பதை எண்ணிச் சொல்வதற்கு ஒரு சேவை வைத்திருக்கிறார்கள். உங்களது இன்பாக்ஸில் இன்னும் பிரிக்கப்படாத மெயில் இருந்தால் அவற்றின் எண்ணிக்கையைக் கூட்டி, எத்தனை என்பதை முகப்புப் பக்கத்தில் சொல்லிவிடும். இதனால் என்ன பலன்? 200 மெயில் இருந்தால் ஓடிப்போய் யாரும் உடனே படிப்பதில்லை. 20 மெயில்தான வந்திருக்கிறது, சாவகாசமாகப் படித்துக்கொள்ளலாம் என்று யாரும் அலட்சியமாகவும் விடுவதில்லை. யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாத இந்தச் சேவையை ஏன் ஆக்டிவேட் செய்ய வேண்டும்? சரி, ஏன் செய்யக் கூடாது. ரொம்ப சிம்பிள். காத்திருக்கும் unread message எண்ணிக்கையை வைத்து நீங்கள் எந்த அளவுக்குச் சுறுசுறுப்பனவர், ஒழுங்கானவர் என்பதைச் சொல்லிவிடலாம்!

  இதெல்லாம் ஒரு விஷயமா? என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். யார் என்ன சென்னால் எனக்கென்ன என்று நடந்துகொள்ளும் உத்தமபுத்திரர்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால், சின்னச் சின்ன விஷயங்களெல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டும் ஒரு சமூகத்தில் இவையெல்லாம் சென்ஸிடிவான விஷயங்கள். இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். விடுமுறைக்கு ஊருக்குப் போக கூகுள் காலண்டரில் தேதியைக் குறித்து வைத்திருக்கிறீர்கள். எந்த ஊர் என்கிற குறிப்பும் இருந்தால் கூகுளாண்டவருக்கு அதுவே போதும். இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது கூகுளுக்குத் தெரியும். விடுமுறைக்கு ஃபிளைட் டிக்கெட் எங்கே முன்பதிவு செய்யலாம் என்பதில் தொடங்கி, தங்குமிடம் பற்றிய விளம்பரங்களையெல்லாம் உங்களது இன்பாக்ஸில் குவித்துவிடும்.

  இதையெல்லாம் கூகுள் நிறுவனம் செய்வதில்லை. ஆனால், கூகுள் நிறுவனத்துடன் வியாபாரத் தொடர்பு வைத்திருக்கும் X நிறுவனம் செய்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். இதை ஏதோ திருடுதல், பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் ரேஞ்சுக்கு கற்பனை செய்துகொள்வதில்தான் சிக்கல். பல சட்ட வல்லுநர்கள், டேட்டா விஞ்ஞானிகள் கூடிப்பேசி, கொண்டுவந்த X நிறுவனத்தின் திட்டமாகக்கூட இருக்கலாம். Acquiring, storing and processing unstructured data from internal and external data sources என்று ஒற்றை வரியில் எழுதிவைத்திருப்பார்கள். சீராக இல்லாத டேட்டாவை நிறுவனத்தின் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ பெற்று, சேமித்து, அதன் மூலம் பிஸினெஸ் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது நிறுவனத்தின் குறிக்கோளாக எழுதிவைக்கப்பட்டிருந்திருக்கும். அதை அவர்கள் நடைமுறையில் செய்துதானே ஆக வேண்டும்?

  சந்தையின் போக்கு (market dynamics), தொழில் கட்டமைப்பு (Business Architecture), செயல்முறையை திறம்பட நிர்வகிப்பது (Business Process Management), இணைய வழி நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது (Internet Of Everything) இவையெல்லாம் செய்தால் மட்டுமே இனி தொழிலைத் தொடரமுடியும் என்கிற நிலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் காணமுடிகிறது. இவற்றை செய்துமுடிக்க, பிக் டேட்டா தேவையோ தேவை.

  Text டாக்குமெண்ட் முதல் கால் சென்டர் குறிப்புகள் வரை அத்தனையும் நமக்குத் தேவையானவைதான். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, முறையாக எழுதிவைத்த குறிப்புகளை மட்டுமே பிஸினெஸ் முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்திக்கொள்கிறோம். அவை போதாது. அவை உண்மைத்தன்மையைப் பிரதிபலிப்பதில்லை என்பதால், வேறு சில வழிகள் மூலமாகவும் டேட்டாவை சேகரிக்கவேண்டி இருக்கிறது.

  உதாரணத்துக்கு, எந்தவொரு சேவைக்குப் பின்னரும் வாடிக்கையாளர்களிடமே ஒரு feedback பாரத்தைக் கொடுத்து, அதை நிரப்பித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் அல்லது தொலைபேசியில் வழியாகத் தொடர்புகொண்டு ரேட்டிங் கேட்கிறோம். இவற்றில் எத்தனை சதவீதம் உண்மையானதாக இருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். கேட்பவர் எத்தகைய நெருக்கடியைத் தருகிறாரோ அதற்கு ஏற்றபடிதான் வாடிக்கையாளரிடமிருந்து வரும் பதிலும் அமைந்திருக்கும். கேட்கும் தொனியில் எதாவது பிழை இருந்தால்கூட வாடிக்கையாளரின் எதிர்வினை வேறுவிதமாக அமைந்துவிடும். எந்த நேரத்தில், எந்த வாடிக்கையாளர் அணுகப்பட்டார் என்கிற விவரத்தையும் சேர்த்தே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டாக வேண்டும்.

  ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் பாலிஸி பிளான், கவரேஜ், வாடிக்கையாளர் எங்கே இருக்கிறார், அவரது வயது, தொழில், வருமானம், பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட structured data கட்டாயம் இருக்கும். அவையெல்லாம் இருந்தால் மட்டுமே பாலிஸி எடுக்கமுடியும். அது தவிர, இவையெல்லாம் எந்நேரமும், எந்த நிறுவனங்களாலும் பெற்று, வாடிக்கையாளர்களின் ப்ரொஃபைலுக்கு ஏற்ற பாலிஸியை தேர்வு செய்து அவருக்கு விற்றுவிடமுடியும். கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில் லட்சக்கணக்கானோர் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒரே மாதிரியான டேட்டா இருந்தால், வாடிக்கையாளர்களைக் கவர்ந்து எப்படி வெற்றிபெறமுடியும்? அதற்காகத்தான் unstrucutred data தேவைப்படுகிறது.

  டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பதே, unsructured data மூலமாக டேட்டாவை பெற்று அதற்கேற்ப மார்க்கெட்டிங் வித்தைகளை கட்டமைப்பதுதான். வாடிக்கையாளரின் உடல் தகுதியை அவர் மேற்கொண்டுவரும் சிகிச்சையை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அவர் என்னென்ன மருந்து, மாத்திரைகள் வாங்குகிறார் என்பதை அவர் வழக்கமாகச் செல்லும் மருந்துக் கடையில் கேட்டாலே கொடுத்துவிடுவார்கள். இந்தியா போன்ற நாடுகளில், யார் நீங்கள்? எதற்காக அவரைப் பற்றிய தகவல்கள் வேண்டும்? என்றெல்லாம் குறுக்கு விசரணை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai