8. ஔவை

பெண்ணியமும் பெண்ணிய சிந்தாந்தங்களும் பேசிக் கொண்டிருக்கும் இந்நூற்றாண்டில், பெண்ணின்
8. ஔவை

பெண்ணியமும் பெண்ணிய சிந்தாந்தங்களும் பேசிக் கொண்டிருக்கும் இந்நூற்றாண்டில், பெண்ணின் அங்கீகாரத்துக்கும் முக்கியத்துவத்துக்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சங்க காலத்தில் (சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்) சத்தமில்லாமல் ஒரு பெண்பாற் புலவர் கோலோச்சி இன்று வரை தன் பாடல்கள், செய்யுள்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது ஔவை தான்.

ஔவை என்றதும் மனதுக்குள் முதலில் நினைவுக்கு வருவது பாடப் புத்தகங்களில் நாம் பார்த்திருக்கும் கையில் கோலூன்றி நெற்றியில் நீரு அணிந்து கம்பீரக் குரலில் பாடும் அறிவான ஒரு மூதாட்டியின் உருவம் தான். மேலும் ‘பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா’ என்று சினிமாவில் பாடிய உருவமும் மனக்கண் முன் தோன்றத் தவறுவதில்லை.

ஆனால் சங்க கால ஔவை மூதாட்டி அல்ல. அழகும் இளமையும் அறிவும் வாய்த்த இளம் பெண். மை தீட்டிய விழிகளும், அழகான ஆபரணங்கள் அணிந்த இடையும், பிறை போன்ற நெற்றியும் பெற்றிருந்த மடவரவள். அவர் ஒரு இளம் விறலி. விறலி என்றால் பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக் காட்டுபவள் என்று பொருள்.

ஒளவையைக் குறித்து பல கதைகளை குழந்தைப் பருவம் முதலே கேட்டும் படித்தும் இருக்கிறோம். அதில் ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா பாட்டி’ எனக் கேட்டு முருகன் சோதித்தக் கதையும், அதியமான் ஔவைக்குக் கொடுத்த அதிசய நெல்லிக்கனி கதையும் அடிக்கடி கேள்விப் பட்டிருப்பவை. ஆயுளை நீட்டிக்கும் சக்தி பெற்ற நெல்லிக்கனியை உண்டதால் ஔவை நீண்ட நெடிய ஆயுள் பெற்று சங்க காலம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை வாழ்ந்தாரோ என்ற ஐயமும் உண்டாகிறது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால் ஔவை என்பவர் ஒருவரல்ல நான்கு ஔவைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து பாக்களையும் செய்யுள்களையும் எழுதி சென்றிருக்கின்றனர் என்ற செய்தி கிடைக்கிறது. சங்க காலத்தில் ஒரு ஔவை, பக்தி காலத்தில் ஒரு ஔவை, குழந்தை இலக்கியம் பாடிய ஒரு ஔவை, சிற்றிலக்கிய கால ஔவை என பல ஔவைகள் இருந்துள்ளனர்.

தமிழ் மரபில் அரச குலம், பாணர் குலம் இன்ன பிற பல குலங்களில் தத்தம் குடும்பத்தில் குலத்தில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை தங்கள் வாரிசுகளுக்கு சூட்டுவது மரபு. அது இன்றும் தொடரும் வழக்கமாகவே உள்ளது. பாட்டன் பெயரை பேரனுக்கும், ஈன்ற தாயின் பெயரை தன் மகளுக்கும் சூட்டுவது இன்றும் நம்மிடையே பல குடும்பங்களில் நடைபெறுவது தான். அது போலவே ஔவையின் பெயரும் குல வழக்கமாக ஒத்த அறிவும் ஞானமும் பெற்ற பெண் புலவர்களுக்கு சூட்டப்பட்டிருக்கலாம்.

ஔவையின் வரலாறு சரியாக வரையறுக்கப் படவில்லை. அவர் பகவன் ஆதி தம்பதியருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர். ஆனால் பெற்றோரிடம் வளராமல் பாணர்களிடம் வளர்ந்து ஊர் ஊராகச் சென்று பாடியவர் எனக் குறிப்பு இருக்கிறது.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் தான் தொண்டை நாட்டு மன்னன் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவர். அதியமானுக்கு நல்ல நண்பர். அதியமானைப் போற்றி நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். இந்த ஔவை பல மன்னர்களிடம் சென்று அவர்களை புகழ்ந்து பாடி பரிசில் பெற்றவர். சங்க இலக்கியத்தில் 59 பாடல்களை இவர் பாடியுள்ளார். அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நண்பனான பாரியின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. இருவரது திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டது இந்த ஔவையே ஆவார்.

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றிருக்கிறார். அப்போது அப்புலவர்கள் மிகவும் கவலையாகக் காணப்பட்டனராம். காரணத்தை வினவினார் ஔவை. அதற்கு அவர்கள்  ‘நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்’ இயற்ற வேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம் என்று கூறினராம். இதைக் கேட்ட ஔவையார், ‘அடடே!, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்’ என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய  நான்கு பாடல்களைக் சொன்னாராம்.

‘மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமை கோடி பெறும்’

‘உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெரும்’

‘கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே

கூடுதலே கோடி பெறும்’

‘கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்

கோடாமை கோடி பெறும்’

என்று ஒரு பாடலையே இயற்றிவிட்டாராம். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்பட்டது.

தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இன்று நம்மிடம் இருக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் முதன்மையான நூலும் தொல்காப்பியமே. தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான ஆத்திசூடிக்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப் படிக்க ஆரம்பிக்கும் போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நமக்கு தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் கிடைத்தார். ஆனால் தமிழ்ப் பாட்டி ஔவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டாள்.

கொன்றை வேந்தன் இயற்றியதும் ஔவையே. கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவனாகிய முருகனை போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்.

‘கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’

இதில் குறிப்பிடப்படும் ‘கொன்றை வேந்தன் செல்வன்’ கொன்றை மாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய முருகன். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் தொன்னுற்றியொரு பாக்கள் உள்ளன.

ஔவையாரைப் பற்றிய நிறைய வரலாறுகளும் கதைகளும் உண்டு. பிள்ளையாரும் முருகனும் ஔவையின் பிரியமான கடவுளர்கள். அவர்களோடு பேசும் பெறும் பேற்றினையும் பெற்றிருந்தார் ஒளவை என்கிறது குறிப்பு. ஒரு நாள் காட்டு வழியே சென்ற ஔவை களைப்பு மிகுதியால் ஒரு நாவல் மரத்தின் கீழ் அமர்ந்தார். பசியும் தாகமும் ஔவையை வாட்ட, மேலே ஒரு சிறுவன் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனிடம் சில நாவல் பழங்கள் பறித்துப் போடுமாறு கூறினார். அதற்கு அச்சிறுவன் ‘பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக் கேட்டான்.

அவனின் கேள்வி ஔவையாரையே குழப்பிவிட்டது. அட! பழங்களில் என்ன சுட்ட பழம் சுடாத பழம். மரத்தில் இருக்கும் கனி எங்காவது சுடுமா? என்று எண்ணியவாரே சிறுவன் என்னதான் செய்கிறான் எனப் பார்ப்போம் என்று ‘தம்பி சுட்ட பழமே போடப்பா’ என்றார். அவனும் மரக்கிளையை பலமாக உலுக்கினான். பழங்கள் நிறைய கீழே விழுந்தன. அவற்றைப் பொறுக்கி அதில் ஒட்டியிருந்த மண்ணை சுத்தம் செய்ய ஊதி ஊதி உண்டார் ஔவை. அச்சிறுவனோ ‘என்ன பாட்டி பழம் சுடுகிறதா?’ என சிரித்துக் கொண்டே கேட்டான்.

சிறுவனின் மதி நுட்பத்தை உணர்ந்த ஔவை உன்னிடம் நான் தோற்றுவிட்டேனப்பா எனக் கூறி கீழ் வரும் செய்யுளைப் பாடினார்.

‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி

இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்

ஈரிரவும் துஞ்சாதென் கண்’

இதன் பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினவி, செய்யுள்களில் விடையும் பெற்று மகிழ்ந்தார் என்ற வரலாறும் உள்ளது.

ஔவையார் சம்பந்தமான தனிப்பாடல் ஒன்றில், அவர் பேயுடன் பேசியதாக ஒரு செய்தி உண்டு. நாடோடியாகப் பல ஊர்கள் சுற்றிக் களைப்படைந்த ஔவை, இரவு தங்கி அசதியைப் போக்கிக் கொள்ளலாம் என்று ஒரு பாழும் மண்டபத்தில் படுத்துறங்கச் செல்கிறார். அதைக் கண்ட அவ்வூர்க்காரர்கள், அம்மண்டபத்தில் பேய் ஒன்று யாரையும் தங்கவிடாமல் துரத்தியடிக்கிறது என்று அவரை எச்சரிக்க ‘நானே ஒரு பேய், ஒரு பேயை இன்னொரு பேய் அடிப்பதா?’ என்று ஊர்க்காரர்களின் வார்த்தையை அலட்சியம் செய்துவிடுகிறார் ஔவை.

முதல் சாமத்தில் பேய் வந்து அவரை மிரட்ட ஆரம்பிக்கிறது. பேயைப் பார்த்தவுடன் அதன் பூர்வ ஜென்மத்தை யூகித்துணர்ந்த ஔவை அந்தப் பேயிடம், ‘படிக்கத் தெரியாத அறிவிலியைப் பெற்றாளே அவளைப் போய்த் தாக்கு’என்று முற்பிறவியில் பேயின் காதலனைப் பெற்ற தாயைக் குறித்து மறைவாகச் சுற்றி வளைத்துப் பழித்துப் பேசுகிறார். பல முறை மிரட்டிப் பார்த்தும் ஔவையிடம் தன்னுடைய ஜம்பம் பலிக்காததை அறிந்த பேய், தனது கதையை அவரிடம் சொல்கிறது.

‘போன ஜென்மத்தில் ஒரு தேசத்து இளவரசியாய் இருந்த நான், உப்பரிகையில் பந்தாடிக் கொண்டிருந்த போது, கீழே சாலையில் போய்க் கொண்டிருந்த வாலிபனின் மேல் இச்சை கொண்டு, என்னை வந்து சந்திக்கும்படி ஓலை எழுதி அனுப்பினேன். எழுதப் படிக்கத் தெரியாத அவனோ, எனது ஓலையை எவனோ கிழவன் ஒருவனிடம் காட்டி, கடிதத்தில் உள்ளது என்னவென்று கேட்க, வஞ்சக எண்ணம் கொண்ட அக்கிழவனோ என் மேல் இச்சை கொண்டு, வாலிபனைத் திசை திருப்ப எண்ணி, நான் வாலிபனை வெறுக்கிறேன் என்று கடிதத்தில் இருப்பதாகப் பொய் சொல்லி அவனை அனுப்பிவிடுகிறான்.

வாலிபன் போன பின்பு, அக்கிழ வஞ்சகன் அவனது இச்சைக்கு என்னை வற்புறுத்த, நான் மறுத்து என் உயிரை மாய்த்துக் கொண்டேன். நிறைவேறாத ஆசையால் குற்றுயிராக, ஆவியாக அலைகிறேன்’என்று பேய் தன் கதையைச் சொல்லி முடிக்கிறது. பேயின் கதை கேட்டு மனம் இரங்கி, அப்பேயை அடுத்த ஜென்மத்தில் தமிழாய்ந்து வளம் சேர்க்கும் தமிழறியும் பெருமாளாகப் பிறக்கக் கடவது என்று வாழ்த்தி வரம் கொடுத்து ஆசிர்வதிக்கிறார் ஔவையார்.

சங்ககாலப் புலவர்களுள் ஒருவராக போற்றப்படும் ஒளவை எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் பாடல்கள் 59 இயற்றியுள்ளார். இவரது காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

பின் இடைக்காலத்தின் அதாவது கிபி பத்தாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த ஔவையே அங்கவை சங்கவை திருமணத்தை நடத்தியவர். கிபி 12-ம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் வாழ்ந்த ஔவை ஆத்திச்சூடி, கொன்றை வெந்தன், நல்வழி, மூதுரை, அசதிக் கோவை போன்றவற்றை இயற்றியவர்.

கிபி 14-ம் நூற்றாண்டில் சமயப்புலவராக வாழ்ந்த ஔவையே ஔவை குறள் மற்றும் விநாயகர் அகவலை இயற்றியுள்ளார்.

தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் காலங்களை வென்று வாழும் இத்தமிழ் பொக்கிஷங்களை உலகுக்கு அளித்து மாபெரும் தமிழ் தொண்டு புரிந்தவர் ஒளவை.

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com