9. கைகேயி

கைகேயி. ராமாயண கதாபாத்திரங்களிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான பாத்திரம்.
9. கைகேயி

கைகேயி. ராமாயண கதாபாத்திரங்களிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான பாத்திரம். தசரத மன்னனின் பட்டத்து மகிஷிகளுள் மூன்றாவது அரசி. மிக இளம் வயது ராணி. இருப்பினும் திட சித்தமும், ஆளுமையும் பொருந்திய மிகச் சிறந்த அறிவாளி. வீரமும் விவேகமும் கொண்ட பேரழகி.

கேகய நாட்டு மன்னன் அச்வபதியின் மகள். கேகய நாட்டு இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள். இயற்பெயர் சரஸ்வதி. அச்வபதி மன்னன் தனக்கு சரஸ்வதி தேவியைப் போன்ற மகள் வேண்டும் என ஆசைப்பட்டு யாகம் செய்து அதன் பலனாக தேவியின் அருளில் பிறந்தவள் கைகேயி. சரஸ்வதி தேவியே குழந்தை வடிவில் மன்னனுக்கு மகளாக அவதரித்ததாக வரலாறு.

கேகய நாட்டு மன்னனுக்கு சிறப்பம்சம் ஒன்று உண்டு. அவர் பல வித்தைகளில் கரை கண்டவர். மிகச் சிறந்த தர்மவான். வேதங்களிலும் கலைகளிலும் அபார தேர்ச்சி உள்ளவர். அதில் ஒன்றுதான் பூர்வ ஜென்மத்தை கண்டறியும் ஆற்றல். அவரிடம் துன்பம் பிரச்னைகள் என வரும் அரசர்களுக்கு அவரவர்களுடைய பூர்வ ஜென்மத்தை தன் ஆற்றலால் கண்டறிந்து அதற்கேற்றபடி பலாபலன்களும் அதை நிவர்த்தி செய்ய பரிகாரங்களும் கூறி அனுப்புவது அவர் வழக்கம்.

குழந்தைப் பருவம் முதலே தந்தைக்கு பிரியமானவளாகவும் எப்போதும் தந்தையைச் சுற்றி சுற்றி வரும் செல்லக் குழந்தையாகவும் வளர்ந்து வந்தாள் கைகேயி. அதனால் அவரிடமிருந்த எல்லா ஞானங்களையும் கைவரப் பெற்றாள். போர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றவள் கைகேயி.

ஒரு நாள் தன் சகோதரர்களுடன் அரண்மனைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே திடீரென கொழுத்த காட்டுப் பூனை வந்துவிட்டது. அவளுடைய சகோதரர்கள் எல்லாம் பயந்து பின் வாங்க கைகேயி மட்டும் மிகவும் தைரியமாக அதன் பின்னே துரத்திச் சென்று தன்னிடம் இருந்த சிறு கத்தியாலேயே அதை குத்திக் கிழித்துக் கொன்றாள். தன் சகோதரர்களுக்கு வந்த ஆபத்தை தனி ஒருவளாய் சமயோஜிதமாக சமாளித்து போக்கினாள் கைகேயி.

பின்னொரு நாளில் சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் போர் புரிய சென்ற போது, அவன் தேருக்கு சாரதியாக சென்றாள் வீராங்கனை கைகேயி. உச்சகட்டமான போரின் போது தேரின் அச்சு முறிந்துவிட, தன் கணவன் உயிர் காக்கவும், போர் தடைபடாமல் அவன் வெற்றி பெறவும் தன் கட்டைவிரலையே தேரின் அச்சாணியாக்கினாள் கைகேயி. அவளின் பதி பக்தியும் திடசித்தமும் கண்டு அசந்து போனான் தசரதன்.  தன் உயிரை பணயம் வைத்து தன்னவன் உயிரைக் காத்ததாலும் போரில் வெற்றி பெற அவளின் துணிச்சலான முடிவு காரணமானதாலுமே கைகேயிக்கு கேட்ட வரம் எதுவாகினும் அளிப்பதாக வாக்கு கொடுத்தான் தசரதன்.

மீண்டும் நாம் கைகேயின் பதின் பருவத்துக்கு வருவோம். பால்யம் முதல் தந்தையை சுற்றியே வளர்ந்தவள் ஆகையால் கைகேயிக்கும் தன் தந்தையைப் போலவே பூர்வ ஜென்மம் கண்டறியும் ஆற்றல் கைவரப் பெற்றது. தன் தந்தையின் வழியில் அவளும் தன்னை நாடி வருபவர்களின் துயரைத் தீர்க்க வழி சொன்னாள்.

ஒரு நாள் தனக்கு புத்திர பாக்கியம் இல்லாத குறையை போக்கும் வழி கேட்டு அச்வபதி மன்னனை நாடி வந்தான் தசரதன். அவனுக்கு பலன் சொன்னவளோ கைகேயி. ‘அரசே தாங்கள் பூர்வ ஜென்மத்தில் உலகுக்கே ஒளி வழங்கும் சூரியனாக இருந்துள்ளீர்கள். அப்போது உங்களுக்கு காயத்ரி, சாவித்திரி,  சரஸ்வதி என மூன்று மனைவியர் இருந்தனர். இப்பிறவியில் தசரதனாக பிறந்துள்ளீர்கள். காயத்ரி தான் உங்கள் இப்போதைய முதல் மனைவி கௌசல்யை, இரண்டாவது மனைவி சாவித்ரி இப்போது சுமத்திரை மூன்றாவது மனைவி சரஸ்வதி தான் நான். என்னையும் மணந்த பின் எங்கள் மூவர் மூலமாக உங்களுக்கு கடவுள் அவதாரமே மகன்களாக அமையும். திருமண விஷயம் குறித்து என் தந்தையுடன் பேசிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அனுப்பினாள்.

மனம் மகிழ்ந்தவனாக தசரதன் கைகேயியை மணம் முடிக்கும் ஆசையை அவள் தந்தை அச்வபதி மன்னனிடம் தெரிவித்தான். ஆனால் இத்தனை அழகும் இளமையும் அறிவும் போர்த்திறனிலும் சிறந்த தன் மகள் மூன்றாவது ராணியாக அயோத்திக்கு செல்வதை ஒரு தந்தையாக அவர் மனது ஏற்கவில்லை. தன் மகள் ஒரு பிரம்மச்சாரி அரசனை மணந்து பட்டத்து ராணியாக வேண்டும், அவள் வயிற்றில் உதிக்கும் தன் பேரன் நாடாள வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. 

மனதில் இருப்பதை மறைக்காமல் தசரதனிடம் கூறிவிட்டார். தசரதனுக்கோ கைகேயியை மணம் புரிய வேண்டும் என்ற அவா இருந்தது. அதை விடவும் அவளையும் மணம் புரிந்தால் தான் தனக்கு புத்திரப் பேறு உண்டாகும் என்ற விதி இருப்பதையும் அறிந்திருந்ததால், அவளை மணந்தே ஆக வெண்டிய தேவையும் இருந்தது. அச்வபதி மன்னனுக்கு தசரத மன்னன் அன்று வாக்கு கொடுத்தான், கௌசல்யை மூத்த பட்டமகிஷி ஆனாலும், கைகேயிக்கு பிறக்கும் மகனையே நாடாள வைப்பதாக உறுதி கொடுத்து கைகேயியை கை பிடித்தான்.

தசரதன் மூன்று மனைவிகளுடன் மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருந்தான். காட்டுக்கு வேட்டைக்கு சென்ற ஒரு நாள் விதி அவன் வாழ்வில் விளையாடத் தொடங்கியது. இரு கண்களும் தெரியாத தன் பெற்றோர்களை தோளில் சுமந்து வாழ்ந்து கொண்டிருந்தான் சிரவணன் என்ற பதின் வயது சிறுவன், அந்தக முனியின் மகன். பெற்றோர் சேவையே தனது வாழ்நாள் கடமையாக அல்லும் பகலும் அவர்களுக்கு தொண்டு செய்வைதையே தன் பெரும் பேறாக எண்ணி வாழ்ந்து வந்தான். அவர்களைச் சுமந்து கொண்டு காட்டு வழி போகையில் பெற்றோருக்கு தாகம் எடுக்க, அருகில் இருந்த ஆற்றுக்குத் தன் கமண்டலத்துடன் சென்றான். கமண்டலத்தில் நீர் முகந்த சப்தம் யானை நீர் குடிப்பது போல் கேட்கவே, சிறுவன் சிரவணனை யானை என நினைத்து தொலைவில் இருந்து அம்பெய்திவிட்டான் தசரதன். ஐயோ அம்மா என்ற சிறுவனின் அலறல் கேட்டு தான் செய்த தவறு உரைக்க, பதைபதைத்து ஓடி வந்தான் தசரதன்.

சிறுவனோ உயிர் போகும் தருவாயில் மன்னனிடம் தன் பெற்றோர் அமர்ந்திருக்கும் இடத்துக்கு தன்னை இட்டுச் செல்லும் படியும், அவர்கள் பாதத்திலேயே அவன் உயிர் பிரிய விரும்பவதாகவும் கூறினான். கண்ணில்லாத அவர்களை இனி யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டே வந்தான். அவனை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு அவன் பெற்றோர் இருந்த இடத்துக்குச் சென்றான் தசரதன். நடந்ததைக் கேட்ட அக்கண்ணிழந்த முதியவர்கள் தங்கள் மகன் இறந்த துக்கத்தில் அவ்விடத்திலேயே தாங்களும் உயிர்விட்டனர். உயிர் விடும் முன் அந்தக முனிவர் தசரதனுக்கு ‘நாங்கள் எங்கள் மகனை இழந்து எப்படித் துடிக்கிறோமோ அவ்வாறே நீயும் உன் மகனை இழந்து துடித்து இறப்பாய், புத்திர சோகம் உன்னை பீடிக்கட்டும்’ என்று சாபமிட்டவாரே உயிர் நீத்தார்.

அச்சாபம் பேரிடியாக தசரதனின் தலையில் இறங்கினாலும், மறுபுறம் அவனுக்கு நிம்மதி உண்டானது. ஆமாம், புத்திர சோகம் என்பது புத்திரன் இருந்தால் தானே உண்டாகும். இச்சாபம் பலிப்பதற்கு வேண்டியேனும் தனக்கு சந்ததி உண்டாகுமே, புத்திர பாக்கியம் கிடைக்குமே என்று எண்ணி மகிழ்ந்தான்.

பெரும் கலக்கத்துடன் சோகமாக அரண்மனை திரும்பினான் தசரதன். யாரிடமும் அவன் எதுவும் கூறவில்லை. குறிப்பறிந்து ஏதோ தவறு நேர்ந்துள்ளது என்பதை அறிந்தாள் கைகேயி. தன்னுடைய மதியூகத்தால், உடன் சென்ற மெய்க்காவலர்கள் மூலமாக நடந்ததை அறிந்தாள். சாபம் பற்றி அவர்கள் கூறியதைக் கேட்டு கலங்கித் தவித்தாள்.

அதன் பின் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் வளர்த்து அதன் மூலமாய் புத்திரப் பாக்கியம் பெற்றான். மூத்த மனைவி கௌசல்யைக்கு ஸ்ரீராமனும், சுமித்திரைக்கு இரட்டையர்களாக லஷ்மணனும் சத்ருக்னனும் கைகேயிக்கு பரதனும் பிறந்தனர். தன் மகன் பரதனை விட ராமனின் மேல் கைகேயி அதிக பாசம் வைத்திருந்தாள். எல்லாம் நல்ல விதமாகவே நடந்து வந்தன.

வாலிப வயதை எட்டிய சகோதரர்கள் ஒருவர் மேல் ஒருவர் மாசற்ற அன்பும் பாசமும் வைத்து ஒற்றுமையாக இருந்தனர். வயோதிக வயதை அடைந்த தசரதன், தனக்கு அடுத்து நாடாளும் வாரிசு குறித்து அறிவிக்கும் நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்தார். மூத்த மகன் ராமனை சபை கூட்டி நாடாளும் வாரிசாக அறிவித்து பட்டாபிஷேக தேதியையும் முடிவு செய்தார்.

இதுவரை குலமகளாக, அன்பின் இலக்கணமாக நாம் பார்த்துவந்த கைகேயி, இரக்கமற்றவளாக சுயநலமிக்க தாயாக உருமாறினாள்.

ராமன் பட்டாபிஷேக செய்தியை மந்திரை (கூனி- பிறந்த வீட்டு தாதியாக கைகேயி உடன் வந்தவள். சிறு வயது முதலே அவளை பேணிக் காத்தவள்) மூலமே அறிகிறாள். அச்செய்தி கேட்டு ‘நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறாய் மந்திரை. காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கிறது’ என்று அவளைப் பாராட்டி தன் கழுத்தில் இருந்த முத்து ஆரத்தை பரிசாக அளித்தாள்.

அங்கு ஆரம்பிக்கிறது மந்திரையின் போதனை ‘உன் குடியே விளங்காமல் போகும் செய்தியைக் கூறி இருக்கிறேன், எனக்கு பரிசு ஒரு கேடா’ எனக் கேட்டு தன் துர்போதனையை ஆரம்பிக்கிறாள். தன் மகனை விடவும் அதிகமாக நேசிக்கும் ராமனுக்கு கேடு நினைக்க கைகேயி நெல் முனையளவும் விரும்பவில்லை.

ஆனால் மந்திரையின் பேச்சு அவளை பலவாறு யோசிக்க வைத்தது. எறும்பூர கல்லும் தேயும் எனபதைப் போல. ‘உன் கணவன் உன் தந்தைக்கு கொடுத்த வாக்கு நினைவில்லையா? உனக்கு பிறக்கும் மகனே நாடாள்வான் என்று உறுதி கூறித்தானே உன்னை மணந்தான். உன் மகன் பாட்டன் வீடு சென்றிருக்கும் இவ்வேளையில் அவசரமாக ஏன் இந்த பட்டாபிஷேகம்? அண்ணன் முடிசூடும் வேளை உடன் பிறந்த தம்பி இருக்க வேண்டாமா? இது தசரதனின் சூழ்ச்சி கைகேயி சூழ்ச்சி. நீ தான் ஏமாற்றப்பட்டவள் என்றால் உன் வயிற்றில் பிறந்த பாவத்திற்காய் உன் மகனும் அல்லவா பலிகடா ஆகிவிட்டான்’ என பலவாறு கூறி அவள் மனதை மாற்றினாள்.

பின் தசரதன் போர்க்களத்தில் கைகேயிக்கு கொடுத்த இரு வரத்தை நினைவு படுத்தி அதன் மூலம் தன் மகனுக்கு நாடாளும் வாய்ப்பை பெற உபாயம் சொன்னாள். இத்தனை கேட்டபின்பும் கைகேயின் மனம் ராம பட்டாபிஷேகத்தை தடுக்க விரும்பவில்லை. அவள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தாள். தன்னை தனிமையில் விடும்படி கூறி கூனியை வெளியே அனுப்பினாள்.

தனிமையில் அவளுக்கு நடந்ததெல்லாம் கண் முன் விரிந்தன. தசரதன் தன்னை பார்க்க வந்தது, அவனுடைய பூர்வ ஜென்ம பலாபலன்கள், தங்கள் திருமணம், தன் தந்தைக்கு அவன் கொடுத்த வாக்கு, தனக்களிக்கப்பட்ட இரு வரங்கள் எல்லாவற்றுக்கும் மேல் அவன் சிறுவன் சிராவணனைக் கொன்றதால் அவன் பெற்றோர் தசரதனுக்கு அளித்த அக்கொடுஞ்சாபம். ‘நீயும் எங்களைப் போல புத்திர சோகத்தில் மாள்வாய்’ என்பதே  திரும்பத் திரும்ப அவள் காதில் எட்டு திக்கில் இருந்தும் அசரீரி போல ஒலித்துக் கொண்டே இருந்தது.

அப்பேதை அக்கொடுஞ்சொல் தன் காதில் விழாதிருக்க இரு கைகளால் காதுகளைப் பொத்திக் கொண்டாள். அப்போதும் நிற்கவில்லை. காதுகளில் போட்டிருந்த வைரத் தோடுகளையும் குண்டலங்களையும் கழற்றி மூலையில் வீசினாள். காதை மூடுகையில் குத்திய மோதிரங்களையும், கை வளைகளையும் கழற்றி எறிந்தாள். அப்போதும் அக்குரல் கேட்பது நிற்கவில்லை. பித்து பிடித்தவள் போல் தன் நீண்ட பின்னலை அவிழ்த்து இருபுறமும் வழிய விட்டு காதுகளை மூடிக் கொண்டாள். குரல் அவள் காதிலா ஒலித்துக் கொண்டிருந்தது மனதில் அல்லவா? மனத்தில் கேட்கும் ஓலத்தை எப்படி நிறுத்த? தான் அணிந்திருந்த அணிகலன்கள் ஆபரணங்கள், முத்துச் சரங்கள், ஒட்டியானம் மேகலை என சகலத்தையும் அவிழ்தெறிந்தாள். இருந்தும் அவ்வோலம் அடங்கவில்லை.

அயோத்தியின் ராணி ஒரு பிச்சைக்காரியைப் போல ஒரு பைத்தியத்தைப் போல தலைவிரி கோலமாய் ஆடை அலங்காரம் கலைந்து மஞ்சத்தில் வீழ்ந்து கிடந்தாள். பலவாறு யோசித்து அம்முடிவுக்கு வந்து தசரதனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அழகுப் பெட்டமாக தெய்வம்சம் பொருந்தியவளாக சர்வலங்கார பூஷிதையாக இருக்கும் தன் மனைவி அயோத்தியின் அரசி இப்படி அலங்கோலமாக இருப்பதைக் கண்டுப் பதறிய அரசன் அவளை அள்ளித் தூக்கினான்.

அவனது பதற்றத்தையும் தன் மீதான அன்பையும் தனக்குச் சாதகமாக்கி மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு இருவரங்களைக் கேட்டாள் கைகேயி. ராமன் பதினான்கு வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும். தன் மகன் பரதன் அரியணை ஏற வேண்டும் என்பதே அது. வேறு வழியின்றி ஏதேதோ சாமாதானங்கள் கூறியும் எடுபடாமல் தசரதன் அவ்வரங்களை அவளுக்கு வழங்கினான்.

கைகேயி கூனியின் கருவியாய் மட்டும் செயல்படவில்லை. விதியின் கருவியாகவும் ஆனாள். ராவண வதம் நடக்க வேண்டும். அப்படியானால் ராமன் காட்டுக்குச் சென்றே ஆக வேண்டும். இது விதி. விதி நடத்திய நாடகத்தில் கைகேயி பழியேற்கும் பங்கை ஏற்றாள்.

மரவுரி தரித்து ராமனும் அவனுடன் சீதையும், அவனது சேவகனாய் லக்‌ஷ்மணனும் அரண்மனை விட்டுக் கிளம்பிய போது நாடே அழுதது. அழுததோடல்லாமல் கைகேயியை பழித்து சாபமிட்டது. புத்திரன் தன்னைப் பிரிந்து நாட்டைத் துறந்து அரண்மனை வாழ்வை விட்டு விலகி காட்டுக்குச் செல்கிறானே என்ற துயரத்திலேயே தசரதன் உயிர் பிரிந்தது.

கைகேயின் நிலையை கேட்கவும் வேண்டுமா? பெற்ற பிள்ளையாலும் ஊராலும் உறவாலும் என தன்னைச் சுற்றி இருக்கும் சகலராலும் வெறுக்கபட்டாள். அவளின் இச்செய்கையால் அவள் மாத்திரம் இல்லாமல் இதில் எதிலுமே சம்மந்தப்படாத கோசலை முதல் அறுபதனாயிரம் பெண்கள் விதவைகள் ஆயினர். இப்பழியும் அவளையே சேர்ந்தது.

தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

ராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் ராமர் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ முனியின் அழைப்பை ஏற்று இரவு அங்கு தங்கினார்.

விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீராமரால் அனுப்பப்பட்டார். அவரும் நந்தி கிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், ‘அம்மா எங்கே? வணங்க வேண்டும்’ என்றார். 

பரதனும், ‘ஸ்ரீராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ’ எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்’ என்றார். 

‘ஸ்ரீராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்’ எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, ‘உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? அவர்களையும் நான் வணங்க வேண்டும்’ என்றார் அனுமன்.

துணுக்குற்ற பரதன், ‘அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?’ எனக் கேட்டான். 

அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.

‘பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்டது இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா?

தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திரிந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான்.

ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, ‘தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்’ எனச் சாபமிட்டாள்.

பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், ‘உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்’ என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

தசரதர் ராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து,  தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

அந்த முகூர்த்தப்படி ராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் ராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும். புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது  ராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீராமனின் உயிரைக் காப்பாற்ற  நிச்சயித்தாள் உன் அன்னை.

அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது ராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள்.

அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம் கூட ராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.

எந்தப் பெண் தன் சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? ராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தைக் கேட்டாள். ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி.

அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக ராவணன் வரை பல ராக்ஷஸர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்க வேண்டும்’ என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.

காரணம் அல்லாது காரியம் இல்லை. இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக் கூடாது  என்பது கைகேயி வாயிலாக அறிய முடிகிறது.

இசைக்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com