10. பாரதியின் செல்லம்மா

 பாரதி செல்லம்மாவை சரணடைந்ததால் தானோ அத்துனை துடிப்புடன் கவிதைகள் படைத்திட முடிந்தது.
10. பாரதியின் செல்லம்மா


‘என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்'

என்று பாரதி செல்லம்மாவை சரணடைந்ததால் தானோ அத்துனை துடிப்புடன் கவிதைகள் படைத்திட முடிந்தது. பாரதியால் எழுதப்படாத சங்கதி உண்டா? காதல், கண்ணம்மா, கண்ணன், காளி, மொழி, சுதந்திரம், வீரம், கோபம் அட! எத்தனை உணர்ச்சிகள் ததும்பும் வரிகள். அந்த முண்டாசுக் கவிஞனுக்கு தெரியாத கலைகள் உண்டா? உண்டு. காசு பண்ணும் கலை அவனுக்கு அறவே வராத கலை. அவனால் கற்பனைகளில் சஞ்சரித்துக் கொண்டு வார்த்தைகளை கூட்டாக்கி உணர்ச்சிகள் சேர்த்து கவிதை சமைத்துத் தின்று அறிவுப் பசியாற முடிந்தது.

ஆனால் வீட்டில் அடுப்பெரிந்தால் தானே வயிற்றுப்பசி அடங்கும். மொழியில் செழித்திருக்கும் கவிஞன் எல்லாம் பொருளில் வறட்சி உடையவரே. கவிஞனுக்கு பசி ஒரு பொருட்டல்ல. பசி வரும் போது பாரதிக்கு பாட்டும் வந்து கொட்டிவிடும். ஒரு ஞானக் கிறுக்கனோடு குடித்தனம் செய்வது லேசான காரியமா? ஏழு வயது செல்லம்மாவை  பதினான்கு வயது பாரதி கைப்பிடித்து மனையாளாக ஏற்றுக் கொண்டார். 

சுக வாழ்வு என்பது கைலாயம் சென்றால் தான் எனும் நிலமை செல்லம்மாவுக்கு. நெல்மணிகள் சொற்பம் தான் என்றாலும் விருந்தாளிகளுக்கு பஞ்சம் இல்லாமல் கழிந்தன நாட்கள். தன்னைக் காண வருபவர்கள் சீடர்களோ இலக்கியவாதிகளோ தேசபக்தி தொண்டர்களோ தலைவர்களோ யாராக இருந்தாலும் 'செல்லம்மா எல்லாருக்கும் உணவு தயார் செய்' என்பதோடு பாரதியின் கடமை முடிந்துவிடும். கணவன் கவி பாடுபவன் மட்டுமல்ல பரோபகாரியும் தான். கையில் கிடைக்கும் சொற்ப வருமானமும் வீடு வந்து சேரும் முன்பே தானமாகிவிடும். 

பன்மொழிப் புலமை பெற்றவன் பாரதி. வெளியுலகத் தொடர்புகள் அதிகம். அறிவு ஜீவி. ஷெல்லியும் பைரனும் நுனிநாக்கில் தாண்டவம் ஆடுவார்கள். சமஸ்கிருதமும் இந்தியும் அவனுடன் ஒட்டி உறவாடியது. தமிழ் அவன் ஊணில் கலந்திருந்தது. ஆனால் ஏழு வயதில் பாரதியோடு வந்த செல்லம்மாளுக்கு படிப்பறிவு இல்லை. வெளி உலகம் அறியாத சிறுமியாக வந்து பாரதியைப் படித்தே ஞானம் பெற்றவர். பாரதி எட்டயபுர மன்னருக்கு தோழராக அரசவை வேலை பார்த்த போது கிடைத்த அரண்மனை வாழ்க்கையானாலும் சரி பின்னாட்களில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி ஊர் விட்டு ஊர் சென்று வாழ்ந்த தேசாந்திரி வாழ்க்கையானாலும் சரி எதுவும் நிரந்தரமில்லை என்ற மனப்பக்குவத்தோடு வாழக் கற்றுக் கொண்டவர் செல்லம்மா. 

தன் குடும்பம் பசியால் வாடுகையில் தூரத்தே பீஜி தீவில் இந்திய மக்கள் பசியால் வாடுவதை தன் துயராக நினைத்து துடிக்கும் இளகிய மனம் பாரதிக்கு உண்டு எனும் அதே நேரத்தில் அவன் அருகில் இருந்து கொண்டு அதே பசியால் தங்கள் குழந்தைகள் துடிப்பதை பொறுத்துக் கொண்டு உலகுக்காக போராடும் தன் கணவனை சகித்துக் கொள்ளும் திட சித்தம் செல்லம்மாவுக்கும் இருந்திருக்க வேண்டும். 

மகாகவியின் மனைவியாய் இருந்த போதும் செல்லம்மா ஒரு சாதாரண இல்லத்தரிசியாகவே இருந்திருக்கிறார். குடும்பம், பிள்ளைகள் வீட்டின் வறுமை என்ற பிரச்னைகளைச் சுற்றியே அவர் வாழ்வு உழன்று கொண்டிருந்திருக்கிறது. மாகா கவியின் மனைவி என்ற கர்வமோ கௌரவமோ கூட அந்த எளிய நங்கைக்கு துளியும் இருந்திருக்கவில்லை. இன்று பார் போற்றும் கவிஞனின் மனைவியாக தேடிப் படிக்கப்படும் செல்லம்மாள் அன்று ஆரம்ப நாட்களில் பித்தனின் மனைவியாகவே பார்க்கப்பட்டார். 

பாட்டில் இடம்பெற்ற பாரதியின் காதல் கண்ணம்மாவாகக் கூட செல்லம்மா இல்லை. அவன் பாடிய கண்ணம்மா அவர் மனைவி செல்லம்மா இல்லை என்பது பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. கண்ணம்மா அவன் கற்பனைக் காதலி, கண்ணம்மா அவன் கும்பிடும் தெய்வம், பத்து வயது முதலே அவனை ஆட்கொண்ட பாலசரஸ்வதியே கண்ணம்மாவாக விஸ்வரூபமெடுத்து அவன் மனக்கண்ணில் நிற்கிறாள். இது செல்லம்மாவுக்கும் தெரிந்தே இருந்தது. ஷெல்லியும் பைரனையும் கரைத்துக் குடித்த பாரதிக்கு வீட்டில் பழையது கரைத்துக் குடிக்கக்கூட வழியில்லாமல் இருப்பதை தெரியப்படுத்தாமலேயே சமாளித்தவர் செல்லம்மா. ஓராயிரம் இடர் வரினும் தன் கணவனை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்காது உடன் இருந்தவர். 

சுப்பிரமணிய பாரதிக்கு கோபத்துக்கு என்றுமே குறைச்சல் இருந்ததில்லை. தான் சார்ந்த சமூகம் மீதும், தான் செய்து கொண்ட பால்ய விவாகம் மீதும், சமூகத்தின் மடமைகள் மீதும் மட்டுமன்றி அக்கால ஆண்களைப் போலவே தன் மனையாள் மீதும் கோபத்தைக் கொட்டியவர் தான். விவேகனந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதாவை சந்திந்த பின் பாரதியின் போக்கில் மிகுந்த மாற்றம் ஏற்பட்டது. அன்றிலிருந்து தன் மனைவியை சக தர்மினியாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் இதுவரை அப்படி நடத்தாமைக்கு செல்லம்மாவிடம் மனப்பூர்வமான மன்னிப்பும் கேட்ட உயர்ந்த குணத்தவன் பாரதி. செல்லம்மாவுக்கு பாரதியின் அத்தனை குணமும் அத்துப்படி. அடித்ததற்காக வருந்தவோ, மன்னிப்பு கேட்டுவிட்டானே என்று மிதப்பாகவோ இல்லாமல் எப்போதும் கணவனையும் குடும்பத்தையும் மிதமாகவே கையாளத் தெரிந்தவர். 

பாரதி இறந்து நீண்ட வருடங்களுக்குப் பின் செல்லாமாள் 1951-ம் ஆண்டு திருச்சி வானொலிக்கு அளித்த உரையில் அவர் பாரதியோடு வாழ்ந்த வாழ்க்கைப் பதிவும் அந்தக் கற்பனைக் கவிஞனின் நிகழ் வாழ்க்கையும் தெளிவாகப் புரிகிறது. அதில் அவர் 'அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை’ என்று கூறுகிறார்.

புதுவையில் வாழ்ந்த காலத்தைப் பற்றிக் கூறுகையில் 'புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப் போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது. புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்’என்கிறார்.

ஊருக்குப் பெருமையாக இருந்த செல்லம்மாவின் வாழ்வு உண்மையில் கடினமாகத்தான் இருந்திருக்கிறது. விநோதங்கள் அவர் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தார் என்றால் நகைப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது மிகவும் கஷ்டம். கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்து போட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன். அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. 

மேலும் தன் கணவனைப் பற்றி விவரிக்கையில் 'ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும் கூட அவரிடம் பிச்சைதான் வாங்க வேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா? கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்’ என்கிறார்.

உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்த பாரதியின் சக தர்மினியாய் இருக்க ஆகப் பெரும் சகிப்புத்தன்மையும் திட சித்தமும் வேண்டும். 

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? 

என்ற தன் சொல்லிற்கேற்ப பாரதியும் அத்தனை அவசரமாய் தன்னுடைய குறுகிய வாழ்நாளில் அத்துனையும் செய்துவிட்டு அதே அவசரத்துடன் கொடுங்கூற்றுக்கு இரையாகாமல் இளமையிலேயே வின்னுலகையும் அடைந்துவிட்டான். 

பாட்டுத் திறத்தாலே இந்தப் பாரையே வியக்க வைத்த பாரதியின் பின்னால் எல்லாவற்றுக்கும் உறுதுணையோடு உறுதியாய் நின்ற செல்லம்மாவை வியக்காமால் இருக்க முடியவில்லை. இந்த உலகமகா கவிஞன் உள்ளும் புறமும் தன்னை மொழிக்கும் நாட்டுக்கும் அர்ப்பணம் செய்வதற்கு இல்லறக் கவலைகள் அவனை எட்டித் திங்காமல் இருக்க இப்படித்தான் செய்திருக்க வேண்டும்

'என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்’ 'செல்லம்மா’ நின்னை சரணடைந்தேன்’

இசைக்கலாம்.... 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com