8. நிபா வைரஸ் காய்ச்சல்..

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
Published on
Updated on
4 min read

இதுவரை காய்ச்சல்கள் குறித்து பல அடிப்படைத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். அடுத்து, மலேரியா, டைபாய்டு என காய்ச்சல்களின் வகைகளைப் பற்றிய தகவல்களை உங்களுக்குச் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

சரி, அப்படியென்றால் எந்த வகைக் காய்ச்சல் குறித்து முதலில் எடுத்துக்கொள்ளலாம் என்று யோசனை இருந்தது. இதுவரை, காய்ச்சல் குறித்த அடிப்படைத் தகவல்களை சரியான அளவிலும் எளிதில் புரியும் வகையிலும் தெரிவித்திருந்தேன். ஆக, காய்ச்சல்களின் வகைகளையும் அதேபோல் எளிமையாகவும் பயமுறுத்தல் இல்லாமல், குறிப்பிட்ட அந்தக் காய்ச்சல் குறித்த முழுமையான தகவல்களையும் தெரிவிக்க விரும்பினேன். அப்போதுதான் எனக்கு ஓர் யோசனை உதித்தது.

சமீபமாக, நிபா வைரஸ் காய்ச்சல் குறித்த செய்தி தீயாகப் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சரி, இதுதான் சரி. முதலில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து எழுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பயத்தைப் போக்கி, போதுமான விழிப்புணர்ச்சியை உண்டாக்க முடிவு செய்து, முதலில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சமீபத்தில், கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் குறித்த செய்தி செய்தி ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி மக்கள் மனத்தில் ஒருவித பீதியை ஏற்படுத்தியது. நாள்தோறும் பல்வேறு செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகின. அந்த வகையில், நிபா வைரஸ் குறித்து ஓரளவு தகவல்கள் மக்களிடம் சேர்ந்திருக்கின்றன.

நிபா வைரஸ்

இருந்தாலும், நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ளவும், நிபா வைரஸ் குறித்து இதுவரை தெரியாத வேறு சில தகவல்களையும் இங்கே தர முற்படுகிறேன். தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், எச்சரிக்கையாக இருங்கள்.

நிபா - ஒரு பழைய கதையின் புதிய அத்தியாயம்!

வரலாறு முக்கியம்

நிபா வைரஸ் குறித்து தமிழக மக்கள் இப்போதுதான் கேள்விப்பட்டு, ஐயோ இன்னொரு புதிய வைரஸா என்ற பீதியில் உறைந்திருப்பார்கள். ஆனால், இந்த வைரஸ் இருப்பதை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துவிட்டார்கள்.

1998-99-ம் ஆண்டுகளில், மலேஷியாவில் மக்கள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, அதற்குக் காரணம் பன்றிகள் என்பதைக் கண்டறிந்து, சுமார் 10 லட்சம் பன்றிகளை அழித்தார்கள். ‘கும்பங் சங்கை நிபா’ (KUMPUNG SUNGAI NIPAH) என்ற இடத்தில் உள்ள பன்றி வளர்ப்பவர்களை முதலில் இது பாதித்ததால், ‘நிபா வைரஸ்’ என்றும் ‘நிபா காய்ச்சல்’ என்றும் பெயர் வந்தது. அப்போது, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 257 பேரில், 105 பேர் இறந்துபோனார்கள். அதன்பிறகு, சிங்கப்பூருக்கும் இந்த நோய் பரவி, 11 பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் இறந்துபோனார்.

முதலில் இதை வேறொரு வைரஸால் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் (Japanese encephalitis) எனத் தவறாகக் கருதிய அரசாங்கம், பன்றிகளைக் கொன்றதுடன், இதற்குக் காரணமாக கியூலெக்ஸ் (Culex) வகை கொசுக்களையும் கட்டுப்படுத்தியது. ஆனால், இவ்வகை மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசி (JE-V) போட்டுக்கொண்டவர்களுக்கும் இந்த மூளைக்காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோதுதான், இதை நிபா என்ற வைரஸ் ஏற்படுத்தியதும், இதை பன்றிகள் பரப்பியது, அவை நோயினால் நலிவடைந்ததும் தெரியவந்தது.

அதுசரி, பன்றிகளுக்கு இந்த வைரஸ் எப்படிப் பரவியது. வௌவால்களிடம் இருந்துதான்! இதுவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பழம் தின்னும் வௌவால்கள் (Pteropus vampyrus, Pteropus hypomelanus) உடலில் இந்த வைரஸ்கள் (Primary reservoir for Nipah virus) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வைரஸ் இருபது வருடங்களுக்கு முன்று கண்டறியப்பட்டாலும், இவை 1947-ம் ஆண்டுகளிலேயே தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலேஷியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து பங்களாதேஷிலும் இந்தத் தொற்று ஏற்பட்டு 24 பேர் பாதிக்கப்பட்டு அதில் 17 பேர் இறந்துள்ளனர்.

2001-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு, சிலிகுரி மற்றும் நொய்டா பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளானது பங்களாதேஷ்தான். 2018-ல் கேரள மாநிலத்தின் வட பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஆக, இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய (Zoonotic disease) நோயாகும்.

எப்படியெல்லாம் நிபா ஏற்படலாம்?

* இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் என எந்த வகையிலும் நோய்த்தொற்று ஏற்படலாம். அல்லது, அவை கடித்த / சுவைத்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.

* வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என பிற வீட்டு வளர்ப்பு - மனித தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம்.

* காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம்.

இப்படி பல்வேறு வழிகளிலும் நேரடியாகவோ அல்லது பிற விலங்குகள் மூலமாகவோ, மனிதர்கள் மூலமாகவோ பரவ பல்வேறு வாய்ப்புகள் உள்ளதால்தான், இந்த நிபா வைரஸ் பரவுவது குறித்து விரிவாகச் சொல்கிறேன். இதன்மூலம், இந்தத் தொற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை நாம் நன்கு உணர முடியும். அத்துடன், வருமுன் காப்பதற்கும் இது பயன்படும்.

{pagination-pagination}

நிபா வைரஸ் குறித்து…

இந்த வைரஸ் ஹெனிபா வைரஸ் (Henipa virus) என்ற பேரினத்தைச் சேர்ந்தது. இது பாராமிக்ஸோ விரிடியே (Paramyxo viridea) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை நிவ் (NIV) என்றும் குறிப்பிடுகிறார்கள். இது ஒழுங்கற்ற தன்மையைக் கொண்டது. சுமார், 40 முதல் 60 நானோமீட்டர் அளவு உள்ளது. இது ஒரு ஆர்என்ஏ வைரஸாகும். இதைச் சுற்றி கொழுப்பால் ஆன ஒரு சவ்வு இருக்கும். அதன் உட்பகுதியில் புரதக்கூறுகளால் ஆன ஒரு ஓடும் அமைந்திருக்கும். உட்பகுதியில் வளைந்த வடிவிலான ஒரு ஆர்என்ஏ இருக்கும். அந்த ஆர்என்ஏவுடன் நியூக்ளியோகாஸ்பிட் என்ற ‘என்’ புரதமும், எல் மற்றும் பி புரதமும் இணைந்திருக்கும். இந்தப் புரதங்கள்தான், ஆர்என்ஏ பெருகுவதற்கான ஆர்என்ஏ பாலிமரேஸ் நொதியின் பணிகளைச் செய்கின்றன. கொழுப்புச்சவ்வில், F என்ற கம்பி போன்ற நீட்சிகளும், G போன்ற அமைப்பும் இருக்கும். இவை புரதப் பொருள்களால் ஆனவை. இவை, மனித உடலில் வைரஸ் கிருமி ஒட்டிக்கொள்ள உதவுகின்றன. இந்த ஆர்என்ஏவில் 6 ஜீன்கள் இருக்கும்.

தொற்ற ஏற்பட்ட எவ்வளவு நாளில் நோய் அறிகுறிகள் தென்படும்?

இந்த வைரஸ், மனித உடலுக்குள் நுழைந்த 4 அல்லது 14 நாட்களுக்குள் பெருகி நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும். அறிகுறிகள் தொடர்ந்து பல நாட்களுக்கு இருக்கலாம். இவை அடுத்த இரண்டு வாரங்கள் வரை நீண்டு செல்லவும் வாய்ப்பு உண்டு.

நோய் அறிகுறிகள் என்னென்ன?

பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் அயர்ச்சி ஏற்படும். நிலை நடுமாறும். மனதில் குழப்பம் நிலவும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும். இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே சம்பவித்துவிடும்.

பரிசோதனைகள்

இந்த வைஸ் தொற்றைக் கண்டறிய, எலிஸா பரிசோதனைகள் உள்ளன. இதன்மூலம், இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கொண்டு, இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். மேலும், பிசிஆர் பரிசோதனை மூலமும் இதனை உறுதி செய்யலாம். இப் பரிசோதனையை பூனாவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமே செய்ய இயலும்.

இந்தப் பரிசோதனைக்கு ரத்தம், சிறுநீர், முதுகிலிருந்து பெறப்படும் தண்டுவட நீர், சளி, உமிழ்நீர், தொண்டை மற்றும் நாசிப்பகுதி நீர் ஆகியவை பயன்படுத்தப்படும். சிலருக்கு, பொதுவான பரிசோதனைகளுடன் சிறுநீர்ப் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, சுவாசப் பரிசோதனை, நரம்பு மண்டலப் பரிசோதனைகளும் தேவைப்படலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com