19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்

காய்ச்சல், உடல் வலி, தலை கிறுகிறுப்பு, கழுத்து வலி, தலைவலி, கண்களில் எரிச்சல், கண் கூச்சம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்
19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்

கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல் விலங்குகளுக்கு ஏற்படக்கூடிய நோயாகும். சில சமயங்களில், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது சிலவகை உண்ணி இனங்களினாலோ பரவும்.

எப்போது கண்டறியப்பட்டது?

இந்தக் காய்ச்சல், முன்னாள் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான கிரிமியாவில் 1944-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன்பிறகு, 1969-ல் காங்கோ நாட்டில், முன்பு ஏற்பட்ட காய்ச்சலுக்கும் இதே வகை வைரஸ் கிருமிகள்தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தக் காய்ச்சலுக்கு, கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவு நோய் என்று பெயரிட்டு அழைத்தனர்.

எந்த நாட்டில் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது?

இந்த நோய், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளிலும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. கொசோவா, அல்பேனியா, ஈரான், துருக்கி, பாகிஸ்தான் நாடுகளிலும் காணப்படுகிறது.

இந்தியாவில்..

இந்தியாவில், இந்த வகை வைரஸ் காய்ச்சல் 2011-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சிலருக்கு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, 2012-ம் ஆண்டிலிருந்தே குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் இந்தக் காய்ச்சல் பலமுறை ஏற்பட்டு  பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூருக்கு வந்த ஒரு நபருக்கு இத்தகைய காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர், ஐக்கிய அரபுக் குடியரசு (யு.ஏ.இ.) நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். அங்கு, விலங்குகள் வெட்டப்படும் இடத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் பணியாற்றிய விலங்கு மருத்துவர் உள்பட பலருக்கும் இத்தகைய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணிக்கப்பட்டது.

உண்ணிகள்

ஹைலோம்மா (Hyalomma) வகை உண்ணிகள், விலங்குகளையும் மனிதர்களையும் கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர்வாழும் ஒட்டுண்ணிகள். இவற்றின்  ஆண், பெண் என இரு இனங்களுமே கடிக்கும்.

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஏற்படும் தொற்று

காடுகளில் வாழும் பல்வேறு விலங்கினங்களை இந்த ஒட்டுண்ணிகள் கடிக்கும். மேலும், சில பறவையினங்களின் உடலிலும் இத்தகைய வைரஸ் காணப்படும். இவற்றைக் கடிக்கும் ஒட்டுண்ணிகளின் உடலுக்குள் இந்த வைரஸ் வந்துவிடும். இவை, வீட்டில் வளர்க்கப்படும் மாடு, ஆடு போன்ற விலங்குகளை ஒட்டுண்ணிகள் கடிக்கும்போது, வைரஸ் தொற்று ஏற்படும்.

மனிதர்களைக் கடிக்கும்போதும் நேரடியாகவே நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும்.

பறவைகளுக்கு இந்த வைரஸ் தொற்றால் நோய் ஏற்படாது. ஆனால், நெருப்புக்கோழிக்கு மட்டும் தொந்தரவுகள் ஏற்படும். விலங்குகளுக்கும் பெரிய அளவில் பாதிப்புகள், தொந்தரவுகள் இருக்காது. லேசான காய்ச்சல் இருக்கும்.

இந்த வைரஸ் குறித்து..

இந்தக் காய்ச்சலை கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவு காய்ச்சல் வைரஸ் (CCHFV - Crimean Congo Hemorrhagic Fever orthonairo Virus) ஏற்படுத்துகிறது. இவை, ஆர்.என்.ஏ. வகை வைரஸாகும். 80 - 120 நானோ மீட்டர் அளவுடைய இவை, ஒழுங்கற்ற வடிவமும், உருவமும் கொண்டவை. இதன் வெளிப்புற இரட்டை சவ்வு, கொழுப்பால் ஆனது. மூன்று மரபணுக்களைக் கொண்ட இவை, தனது வெளிப்புறத்தில் உள்ள நியூக்ளியோலீன் (Nucleolin) என்ற புரதத்தைப் பயன்படுத்தி மனித செல்களுக்குள் உள்புகுந்துவிடும்.

இந்த வைரஸில் ஏழு உள்பிரிவுகள் உள்ளன. இந்த வைரஸ், கி.மு.1500 - கி.மு.1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நோய் அறிகுறிகள்

இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த பிறகு மூன்று நாள்களுக்குள் நோயாளிகளுக்கு தொந்தரவுகள் ஏற்படும்.

முதலில் ஃப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படும். இவை, ஒரு வாரத்தில் குறைந்துவிடும். உடல் தொந்தரவுகள் ஏற்பட்ட 3 முதல் 5 நாள்களில் ரத்தக்கசிவு பாதிப்புகள் ஏற்படும்.

ஆக, முதலில் இவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, தலை கிறுகிறுப்பு, கழுத்து வலி, தலைவலி, கண்களில் எரிச்சல், கண் கூச்சம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்.

மூளை பாதிக்கப்படுவதால், குழப்பமான மனநிலையுடன், எரிச்சல், கோபம், கத்துதல், உறக்கமில்லாமல் இருத்தல், மனச்சோர்வு போன்ற தொந்தரவுகளுக்கும் ஆளாகி மயக்கம் அடையலாம்.

கல்லீரல் வீக்கம் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். உடலில் நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் உண்டாகும். தோல், வாய், தொண்டைப் பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்படலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழந்து போகலாம். நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும்.

உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, மற்றும் ரத்தநாளங்களில் ஏற்படும் ரத்த அடைப்பு காரணமாக, உடலின் எந்த ஒரு உறுப்பும் பாதிக்கப்படுவதால்தான் இவர்களுக்கு மேற்கூறிய  பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், இரண்டாவது வாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவார்கள். இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட 30 சதவீத மக்கள், இந்த இரண்டாவது வாரத்தில்தான் இறக்கவும் நேரிடுகிறது.

ஆய்வுக்கூடப் பரிசோதனைகள்

இந்தக் காய்ச்சலைக் கண்டுபிடிப்பதற்குப் பல்வேறு பரிசோதனைகள் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவான ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே ஆகியவற்றை, பிற காய்ச்சல்களுக்கு செய்வதுபோல் செய்துகொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் பாதிப்பை கண்டுபிடிப்பதற்கு எலீசா பரிசோதனை, ஆன்டிஜீன் பரிசோதனை, பிசிஆர் பரிசோதனைகள் உதவும்.

இவர்களுக்கு, ரத்தக்கசிவு, ரத்த செல்களில் பாதிப்பு, ரத்தநாள அடைப்பு போன்றவை ஏற்படுவதால், அவற்றைக் கண்டறிவதற்கான ரத்தம் உரைதல் தொடர்பான பரிசோதனைகள், ஸ்கேன் பரிசோதனைகள், சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு குறித்து அறியும் பரிசோதனைகள் ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.

சிகிச்சைகள்

இந்த வைரஸை அழித்து இந்தக் காய்ச்சலைக் குணப்படுத்த, இதுவரை சரியான மருந்து கண்டறியப்படவில்லை. இருந்தாலும், ரிபாவைரின் (Ribavirin) என்ற மருந்து, வைரஸ் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

தவிர, நோயாளிகளின் தொந்தரவுகளை குறைப்பதற்கான மருந்துகள் தரப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து, திரவங்களை, ரத்தம் மற்றும் அணுக்களையும் செலுத்தி செய்யும் சிகிச்சை, உடல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு சுவாச செயலிழப்பு ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளித்தல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் டயாலிசிஸ் சிகிச்சை செய்தல், மூளை பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளை செய்து, உறுப்புகளைப் பாதுகாத்து, உயிரையும் காப்பாற்ற வேண்டிய அதிநவீன சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மேலும், நோயாளியின் உடல்நிலை சீராகும் வரை முக்கிய உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வகை சிகிச்சைகள் எல்லாம், தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளியை சேர்த்த பிறகே செய்யப்படும்.

தடுப்பு முறைகள்

இந்த நோயை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. எனவே, இந்தக் காய்ச்சலை பரப்பும் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, நோய் தாக்கிய விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, நோய்த்தொற்று ஏற்பட்ட மனிதர்களிடம் இருந்து பிற மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றின் மூலமாகவே அந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

வாழிடங்களில் உண்ணிகள் உருவாகாமல் தடுப்பதுடன், வீட்டு விலங்குகளை உண்ணிகள் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு விலங்குகளை அடிக்கடி விலங்கு நல மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள், உதவியாளர்கள் அனைவரும் பாதுகாப்புச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். தவறாமல் கையுறை அணிந்துகொள்ள வேண்டும். நோயாளியின் மாதிரிகளைப் பரிசோதிக்கும் ஆய்வுக்கூட பணியாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ரத்தம், மற்றும் பிற உடல் திரவங்களை கிருமி நீக்கம் செய்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com