49. இருப்பதும் இல்லாததும்..

நீங்கள் உணவில் இல்லாமல் இருந்த உப்பை மட்டும் கவனித்தீர்கள். நான், அதில் மிகுந்திருந்த என் சீடனின் அன்பை மட்டுமே கவனித்தேன். அந்தப் பேரன்பைவிடவா உப்பு பிரதானம்?
49. இருப்பதும் இல்லாததும்..

மதிய உணவு உண்ணும் நேரத்தில் விருந்தினர் ஒருவர் ஆசிரமத்துக்கு வந்துவிட்டார்.

விருந்தினரை எதிர்பார்த்திராததால், அவருக்கும் சேர்த்து உணவு சமைக்காததால் என்ன செய்வதென கைகளைப் பிசைந்தபடி நின்றான் சிஷ்யன். அவன் மனக்கவலையைப் புரிந்துகொண்டார் குரு.

‘‘தொலைதூரத்தில் இருந்து நம்மைச் சந்திப்பதற்காக வந்துள்ளார் இவர். இன்னும் சாப்பிட்டிருக்கமாட்டார். சமைத்த உணவினை எடுத்து வா.. இருப்பதை மூவருமாகப் பகிர்ந்து உண்ணலாம்’’ என சிஷ்யனிடம் சொன்னார் குரு.

நிம்மதிப் பெருமூச்சு சிஷ்யனுக்கு!

குருவுக்கும் தனக்கும் தான் தயார் செய்து வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு வந்தான்.

‘‘முதலில் விருந்தினர் உணவருந்தட்டும். அதன்பிறகு நாம் சாப்பிட்டுக்கொள்ளலாம்..’’ என்றார் குரு.

‘‘இல்லை.. நீங்களும் உட்காருங்கள் குருவே. சேர்ந்தே சாப்பிடலாம்..’’ என்றார் விருந்தினர்.

இரண்டு தட்டுகளை எடுத்துவைத்தான் சிஷ்யன். ‘‘நீயும் உட்கார். மூவரும் சேர்ந்தே சாப்பிடலாம்’’ என்று கூறி, சிஷ்யனையும் அருகே உட்காரவைத்துக்கொண்டார் குரு.

பாத்திரத்தில் இருந்த உணவை மூவரது தட்டுகளிலும் எடுத்துவைத்தார் குருநாதரே. இறைவனை வணங்கிவிட்டு, மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

மகிழ்ச்சியோடு சாப்பிடத் தொடங்கினார் குரு.

ஆனால், முதல் கவளத்தை எடுத்து வாய்க்குள் வைத்ததுமே விருந்தினரின் முகம் அஷ்டகோணலாக மாறியது. அதைக் கவனித்துவிட்டார் குரு.

‘‘என்னாயிற்று?’’ என்று கேட்டார்.

‘‘உணவில் உப்பு கொஞ்சமும் இல்லை. இதை எப்படி நீங்கள் இன் முகத்துடன் சாப்பிடுகிறீர்கள்?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார் விருந்தினர்.

பதைபதைத்துவிட்டான் சிஷ்யன். உணவில் சேர்த்துக்கொள்ள உப்பு எடுத்து வருவதற்காக, எழுந்து ஓடினான்.

விருந்தினரைப் பார்த்தபடியே பேசலானார் குரு.. ‘‘உயிர் வாழ உணவு அவசியம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு வேளை உணவில் உப்பு இல்லை என்பது பெரிய குறை இல்லை. பார்த்தீர்களா அந்தப் பையனின் முகவாட்டத்தையும் அவன் படபடப்பையும்?’’ என்று கேட்டார்.

‘‘ஆம் குருவே..’’ என்றார் வந்திருந்த விருந்தினர்.

‘‘நீங்கள் உணவில் இல்லாமல் இருந்த உப்பை மட்டும் கவனித்தீர்கள். நான், அதில் மிகுந்திருந்த என் சீடனின் அன்பை மட்டுமே கவனித்தேன். அந்தப் பேரன்பைவிடவா உப்பு பிரதானம்?’’ - அதே இன்முகத்துடன் அழுத்தம் திருத்தமாகக் கேட்டார் குரு.

தன் தவறை உணர்ந்தார் வந்திருந்த விருந்தினர்.

உப்பு நிறைந்திருந்த பாத்திரத்துடன் வந்து நின்றான் சிஷ்யன்.

அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தட்டில் நிறைந்திருந்த அமிர்தத்தை ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தார் அந்த விருந்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com