86. ஒன்று மட்டும்

இன்று என்பது ஒரே ஒருநாள் மட்டுமே. இந்த நிமிடமும் இந்த நாளும் நமக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்கள். ஒரே ஒரு பொருள்தான் உன்னிடம் இருக்கிறது எனும்போது அதன் சிறப்பும் முக்கியத்துவமும் புரிகிறது அல்லவா.
86. ஒன்று மட்டும்

குருநாதர் கொடுத்திருந்த முக்கியமான பணி ஒன்றை செய்துமுடிக்கத் தவறியிருந்தான் சிஷ்யன். சுத்தமாக அந்த வேலையை மறந்துபோயிருந்தான்.

மறுநாள் காலை விடிந்ததும் முதல் காரியமாக அவனை அழைத்து, “நேற்று நான் உனக்குக் கொடுத்திருந்த பணியை முடித்துவிட்டாயா?” எனக் கேட்டார் குருநாதர்.

தலையை சொரிந்துகொண்டான் சிஷ்யன். “இல்லை குருவே..” என்று சொன்னான்.

“அடடா..” என கூறி ஆதங்கப்பட்டுக்கொண்டார் குருநாதர்.

சிஷ்யனின் முகம் அஷ்டகோணலாகியது.

‘‘சரி.. இன்று அந்த பணியை முடித்துவிடுவாயா?’’ எனக் கேட்டார் குரு.

மலங்க மலங்க விழித்தபடியே பேசினான் சிஷ்யன்.. ‘‘இல்லை குருவே. இன்று சந்தைக்கு சென்றுவரும் பணி இருக்கிறது. வாரத்தில் இன்று ஒருநாள் மட்டுமே சந்தை. அதனால் அதைத் தவிர்க்க இயலாது. நேற்று செய்யத் தவறிய பணியை நாளை செய்து முடிக்கட்டுமா?’’ எனக் கேட்டான்.

சிஷ்யனைச் சீர்படுத்தும் நேரம் குருவுக்கு. அவனை அருகே அழைத்து உட்காரவைத்துக்கொண்டார். கனிவோடு பேசத் தொடங்கினார்.

‘‘நேற்றைய உணவை நாளை சாப்பிட்டுக்கொள்ளலாமா?’’ எனக் கேட்டார். கவிழ்ந்த தலையுடன் காது கொடுத்துக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

குரு தன் பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘முடியாது அல்லவா! அப்படித்தான் அன்றன்றைய பணிகளை அன்றன்றே முடிப்பதும். ஒரு செயலை அதற்கான தேவை நம்மை எதிர்கொள்ளும் முன்னரே செய்துமுடித்து தயாராக காத்திருக்க வேண்டும். தவறினால்.. காலதாமதம் செய்தால்.. அதற்கான தேவை அதிகமாகி உடனடியாக அதை செய்து முடித்தாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். புதிய பணிகளையும் அன்றன்றைய கடமைகளையும் தொடர்வதா.. அல்லது செய்துமுடிக்காமல் விட்ட பழைய பணியை எடுத்துக்கொள்வதா என யோசிப்பதால் மனம் பதட்டமாகும். பதட்டத்துடன் செய்யும் செயல் சிறப்பாகவும் அமையாது.’’ என்றார் குரு.

சிஷ்யனுக்கு இப்போதுதான் பதற்றம் அதிகமாக ஆரம்பித்தது. அதை மறைத்துக் கொண்டு, “நிச்சயம் நாளை செய்து முடித்துவிடுவேன் குருவே..” என்றான்.

“நாளை என்பது நிச்சயமற்றது. உன்னாலும் என்னாலும் ஏன்.. யாராலுமே உறுதியாகக் கூற இயலாதது. ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும்போது மறுநாளும் நமக்காக விடியும் என்பது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே. அதற்கான உத்திரவாதம் நம்மிடம் இல்லை. இறைவனின் சித்தப்படியே அது அமையும். குடிசையில் வசிக்கும் ஏழைக்கும் சரி.. கோட்டையில் வசிக்கும் மன்னனுக்கும் சரி.. மறுநாளும் நம் வாழ்க்கை நீடிக்கும் என்பதில் உத்திரவாதம் எதுவுமில்லை.." என்றார் குரு.

சிஷ்யனின் முகம் பொலிவை இழந்திருந்தது.

‘‘வருத்தப்படாதே, உலக உண்மையை புரிந்துகொள்!’’ என்றார் குரு. தொடர்ந்தார்.

‘‘இறைவனின் சித்தம் நமக்கு சாதகமாக இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். நாளை என்பது ஒருநாள் மட்டுமல்ல. இன்னும் ஆயிரக்கணக்கான நாட்கள் நமக்குக் கிடைக்கலாம். அதேபோல் நேற்று என்பதும் ஒருநாள் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான நாட்களை அனுபவித்துக் கடந்திருக்கிறோம் நாம். ஆனால்.. இன்று என்பது ஒரே ஒருநாள் மட்டுமே. இந்த நிமிடமும் இந்த நாளும் நமக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்கள். ஒரே ஒரு பொருள்தான் உன்னிடம் இருக்கிறது எனும்போது அதன் சிறப்பும் முக்கியத்துவமும் புரிகிறது அல்லவா. இன்றைய பணிகளை இன்றே செய்து முடிப்பதுதான் உறங்கச் செல்லும்போது நிம்மதியையும் மனநிறைவையும் நமக்குக் கொடுக்கும்’’ என்று கூறினார் குரு.

“புரிகிறது குருவே..” எனக் கூறிவிட்டு பொலிகாளை வேகத்துடன் எழுந்து ஓடினான் சிஷ்யன்.

புன்னகைத்துக்கொண்டார் குருநாதர். அவருக்குத் தெரியும்.. சந்தைக்குச் செல்வதற்கு முன்பாக, நேற்று செய்யத் தவறிய அந்தப் பணியை தன் சீடன் இன்றே செய்து முடித்துவிடுவான் என்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com