83. ஏழையின் சிரிப்பு

ஆலயத்தின் வாசலிலேயே உங்களை வரவேற்கக் காத்திருந்த ஆண்டவனை நீங்கள்தான் புறக்கணித்துவிட்டீர்கள். எனக்குத் தெரிந்த இந்த உண்மை, ஆலயத்தின் உள்ளே இருப்பவனுக்கும் நிச்சயம் தெரியும்.
83. ஏழையின் சிரிப்பு

ஆலயத்தை விட்டு வெளியேறினார்கள் குருவும் சிஷ்யனும்.

கோயில் வாசலில்.. சொகுசு வாகனத்தில் வந்திறங்கினார்கள் செல்வச் செழிப்புமிக்க தம்பதியர்.

இரு கால்களும் இல்லாத ஒரு நபர், தன் கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே அந்த தம்பதியரை நோக்கிச் சென்றார். “பசிக்கிறது அய்யா.. ஏதாவது உதவுங்கள்..” என்று கெஞ்சினார்.

“உங்களுக்கு வேற வேலையே இல்லையா..” என்று அதட்டுப் போட்டார் வாகனத்திலிருந்து இறங்கிய பெண்மணி.

“சில்லறை எதுவும் இல்லை. வேற ஆளைப் பாருங்கள்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் உடன் இறங்கிய செல்வந்தர்.

ஏமாற்ற முகத்துடன் தவழ்ந்தபடியே தெருவோரம் ஒதுங்கினார் அந்த நபர்.

குருவும் சிஷ்யனும் நடந்ததைக் கவனித்தபடிதான் இருந்தனர். செல்வச் செழிப்புமிக்கவர்களாக இருந்த அந்த தம்பதியர், அந்த உடல் வலு குறைந்த நபருக்கு எள் அளவாவது உதவி இருக்கலாமே என நினைத்துக்கொண்டான் சிஷ்யன். பணம் இருக்கும் நபர்களுக்கு மனம் இருப்பதில்லை என்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

தம்பதியர் இருவரும் ஆலயத்துக்குள் நுழையும் முன்பு.. குருவை எதிர்கொண்டனர். என்ன நினைத்தாரோ.. சட்டென குருவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார் அந்தச் செல்வந்தர். அவர் மனைவியும் குருவின் கால்களில் விழுந்து வணங்கினார்.

இருவரையும் ஆசிர்வதித்தார் குருநாதர்.

“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?” என்று அவர்களிடம் கேட்டார் குருநாதர்.

“ஆம். அதனால்தான் இறைவனை வழிபட ஆலயம் வந்திருக்கிறோம்..” என்றார் அந்தச் செல்வந்தர்.

“இதோ இந்த ஆலயத்துக்குள் இருந்து அருள் பாலிக்கும் இறைவன், அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று மறுபடியும் கேட்டார் குரு.

“ஆமாம். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். இறைவன் இல்லாத இடமேது ஸ்வாமி..” என்றார் அந்தச் செல்வந்தர்.

“அப்படியானால் உங்களை நோக்கித் தவழ்ந்துவந்த அந்த ஆதரவற்ற ஏழையின் புன்னகையிலும் இருப்பானல்லவா எல்லாம் வல்ல அந்த இறைவன்..” - குருநாதரின் குரல் சிஷ்யனுக்கு அவரின் நோக்கத்தைத் தெரியப்படுத்தியது. முகம் மலர்ந்தான்.

குருவின் வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தம் அந்தத் தம்பதியருக்கும் உரைத்தது. அமைதியாக இருந்தனர்.

குரு தொடர்ந்தார்.

“கடவுள் நம்பிக்கை என்பது வேறு.. கடவுளை முழுமையாக நம்புவது வேறு. கடவுளை முழுமையாக நம்பிச் சரணடைபவர்களுக்கு ஏழைகளின் சிரிப்பில் கடவுளைக் காணலாம் என்பது நன்கு புரியும்..” என்றார்.

“ஆலயத்தின் வாசலிலேயே உங்களை வரவேற்கக் காத்திருந்த ஆண்டவனை நீங்கள்தான் புறக்கணித்துவிட்டீர்கள். எனக்குத் தெரிந்த இந்த உண்மை, ஆலயத்தின் உள்ளே இருப்பவனுக்கும் நிச்சயம் தெரியும்..” என்று குரு கூறியதும், மறுபடியும் ஒருமுறை அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார் அந்தச் செல்வந்தர்.

எழுந்ததும், தன் மனைவியை அழைத்துக்கொண்டு தான் விரட்டியடித்த அந்த நபர் இருக்குமிடம் நோக்கி நடக்கலானார்.. கடவுளைக் காண.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com